அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 31 அக்டோபர், 2012

திவிநெகும விடயத்தில் மு.க. தலைவர் மற்றும் செயலாளர் விசாரிக்கப்பட வேண்டும்!


குற்றத்துக்கு உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும் விசித்திரம்!
கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விசாரிக்கவென அதன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளமை குற்றத்துக்கு உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும் விசித்திரம் நடை பெறுகிறது என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது, திவிநெகும சட்ட மூலத்தை காலையில் எதிர்த்த ஸ்ரீலங்கா மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாலையில் ஆதரித்தனர். இதற்குக் காரணம் கேட்டபோது ஆதரிக்கும்படி தலைவர் குறுஞ்செய்தி அனுப்பியதனாலேயே தாம் ஆதரித்ததாக கட்சியின் குழுத்தலைவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. பின்னர் தலைவரால் குறுஞ்செய்தி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியானதை தொடர்ந்து தாம் அவ்வாறு கூறவில்லை என கட்சிக் குழுத்தலைவர் அறிவித்தார்.
கட்சியின் செயலாளர், பிரதி செயலாளர் இது பற்றி கடுமையான ஆவேசம் தெரிவித்ததன் காரணமாக இது பற்றி ஆராய்ந்த கட்சியின் உயர் சபை இவற்றை விசாரிக்கவென கட்சித்தலைவர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை மிகப் பெரிய வேடிக்கையாக உள்ளது.
இது விடயத்தில் தலைவரின் அனுமதியை பெற்றே வாக்களித்ததாக சொல்லப்படுவதால் தலைவரும் இவ்விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தாம் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என அவர் இன்னமும் மறுக்கவில்லை. இந்த நிலையில் குற்றஞ்சாற்றப்பட்டவர்களை விசாரிக்கும் நடுவர் விசாரணை குழுவின் தலைவராக தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளதானது மக்களையும் தமது கட்சி உயர்பீடத்தையும் கேலி செய்வதாக உள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் நீதிபதி முன்பாக அவரது மகன் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரனை வந்த போது அந்த நீதிபதி விசாரணையிலிருந்து விலகிய செய்தியை கண்டு வியந்த உலகம், குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரனைக்கு தலைமை தாங்கும் நிலையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் கண்டு தலை குணிகிறது.
உண்மையில் இந்த விடயத்தை விசாரித்து உண்மையை காண வேண்டுமாயின் கட்சி சாரா உலமாக்கள் தலைமையில் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும், கட்சியின் செயலாளர், மற்றும் தலைவரும் விசாரிக்கப்பட வேண்டும். அதன் மூலமே இது விடயத்தில் திருகு தாளத்தை மேற்கொண்ட சமூகத்துரோகிகள் யார் என அடையாளம் காணமுடியும். இதனை விடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட தலைவரே விசாரணைக் குழுத்தலைவராக இருப்பது திருடர்களை விசாரிக்க திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட தலைவரே தலைமை வகிப்பது போன்றதாகும்.

மட்டு.கல்லடி பாலம் இன்றிரவு மூடப்படும்: வீதி அபிவிருத்தி சபை


மட்டக்களப்பையும் அம்பாறை மாவட்டத்தையும் இணைக்கும் பிரதான பாலமான கல்லடி பாலம் இன்று புதன்கிழமை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மூடப்படவுள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



புதிய பாலத்தின் நிர்மானப்பணிகள் நடைபெற்றுவருதாலேயே இப்பாலம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபையும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகவே அமைகின்றது!



-குகன்-
மத்திய அரசாங்கம் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு முயற்சித்து வரும் வேளையில், கிழக்கு மாகாண சபையின் சில நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு துணைபோகும் வகையில் அமைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் விசனம் வெளியிட்டுள்ளார்.
செங்கலடி பதுளை வீதியிலுள்ள கிராம மக்களுக்கு விஜயம் செய்த அவர் சமகால அரசியல் நிகழ்வு குறித்து மக்களுக்கு விளமக்களிக்கையிலே இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
அவர் குறித்த சந்திப்பில் தொடர்ந்து விளக்கமளிக்கையில்!
கிழக்கு மாகாண சபை முதலாவது அமர்வு இடம்பெற்ற 48 மணிநேரத்துக்குள் திவிநெகும சட்ட மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் இந்த சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை துணைபோனது.
அண்மைக் காலங்களில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வின் அடித்தளமான 13ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பாகவே அமைகின்றது. மத்திய அரசாங்கத்திலே பலம் பொருந்திய அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூட 13ஆவது அரசியலமைப்பு நீக்கப்பட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். கீறல் விழுந்த இசைத்தட்டு போல் 13ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்து ஆளும்தரப்பு சில அரசியல்வாதிகளிடம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
போருக்குப் பின்னர் ஜனாதிபதி இந்தியா போன்ற நாடுகளுக்கு அளித்த உத்தரவாதத்தில் 13 பிளஸ் அதிகாரப் பகிர்வை அதாவது அதற்கு மேல் வழங்குவதாகக் கூறியிருந்தார். ஆனால் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் 13பிளஸ் அல்ல அது இப்போ மைனஸ் ஆகும் வகையில் திவிநெகும சட்டம் அமைகிறது.
அதாவது அதிகாரங்களைக் குறைக்கின்றது. அடுத்த கட்டம் அதனை இல்லாமல் செய்வதற்கு ஒரு சாரார் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அமைகின்றன. தமிழ் மக்கள் தங்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கும் வேளையில் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் ஏற்கனவே கொடுத்த அதிகாரங்களைக் கூட அரசாங்கம் பறித்தெடுக்க முற்படுகின்றது.
அண்மையில் அமைச்சர் தினேஸ் குணவர்தன கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளை மாகாண சபைக்கு வழங்கியமையானது மத்திய அரசாங்கம் விட்டதவறு மாகாண சபைகளுக்கு வழங்கியமையானது மத்திய அரசாங்கம் விட்ட தவறு மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்தது என்று கூறியிருந்தார். இந்த கருத்து மாகாண சபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களைக் கூட எதிர்காலத்தில் பறிப்பதையே காட்டுகின்றது.
மத்திய அரசாங்கம் இருக்கும் அதிகாரங்களை உள்ளுராட்சி மற்;றும் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கிறது. திருகோணமலை மீன் சந்தை நகர சபையின் அனுமதியோ, ஆலோசனையோ இன்றி மத்திய மீன் பிடித்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. திருகோணமலை ஆதார வைத்தியசாலை மத்திய அரசினால் பொறுப்பேற்கப்படவுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்தியை காரணம் காட்டி மாகாண சபை அமைச்சர்கள் வாரியம் இதற்கு துணைபோகிறது.
தற்போது கிழக்கு மாகாண சபை முதலாவது அமைச்சரவை வாரியம் இந்த கைங்கரியத்தை செய்துள்ளது. அப்படி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வது என்றால் மாகாண சபைக்கு முடியாதா? இவற்றை உற்று நோக்கினால் கிழக்கு மாகாண சபையும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகவே அமைகின்றது என்றார்.

கோவிலுக்கும், பள்ளிக்கும், தேவாலயங்களுக்கு போவதற்கு எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்!


மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார். அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். அதிலும் இஸ்லாமிய சகோதர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கால கட்டத்தில் பெருநாள் பரிசு என இதை செய்து தந்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அனுராதபுரம் மல்வத்து ஓய மத்ரஸா கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது;
நாடு முழுக்க அங்கே, இங்கே என்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து சிங்கள பெளத்தம் என்ற புதிய கொலைவெறி மதம் பரவி வருகிறது. இது கருணையையும், அன்பையும், அஹிம்சையையும் போதிக்கும் பெளத்த மதம் இல்லை. சிங்கள பெளத்தம் இலங்கையில் புதிதாக வேரூன்றி வளர்ந்து வரும் மதம்.
இது இந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அஸ்வர் எம்பி உட்பட அரசாங்கத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் எம்பீக்களும் நன்கறிவர். இந்த புதிய மதம்தான், நாடு முழுக்க இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வணக்க ஸ்தலங்களை தாக்கி அழிக்கின்றது என்பது இன்று சிறு குழந்தையும் அறிந்துள்ள உண்மை.
இந்த மதவாதிகள் அரசாங்கத்துக்கு உள்ளேதான் இருக்கிறார்கள். அல்லது அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறார்கள். வெளியே இல்லை. இத்தகைய சம்பவங்கள் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை நாம் எதிர்த்து நிறுத்தவேண்டும். அல்லது எங்கள் மதங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டி வரும். கோவிலுக்கும், பள்ளிக்கும் தேவாலயங்களுக்கும் போவதற்குகூட, நாம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்.
எனவே, இந்த இன-மத வாதத்தை வந்த பின் அல்ல, வரும்போது அல்ல, வருமுன், அனைத்து மனிதநேய சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டும். எங்களுடன் சேர்ந்து எதிர்க்க முடியாவிட்டால், அஸ்வர் எம்பி போன்றவர்கள் உள்ளே இருந்தபடியாவது எதிர்க்க வேண்டும். தமது தலைவரை அஸ்வர் எம்பி வானளாவ புகழ்வதில் எமக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது. அது அவரது கடமையாக இருக்கலாம். ஆனால், அவருக்கு தனது சமூகத்தை நோக்கிய கடைமையும் இருக்கிறது. எனவே அஸ்வர் எம்பி போன்ற தமிழ் பேசும் எம்பீக்கள், தமது தலைவரை புகழ் பாடுவதுடன் சேர்த்து இந்த இன-மத தீய சக்திகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படியும், அவருக்கு எடுத்து சொல்லவேண்டும்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஒருகொடவத்தையில் எண்ணெய் கசிவு


ஒருகொடவத்தை பிரதேசத்தில் நிலத்திற்கு அடியிலுள்ள எண்ணெய் குழாயில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் கசிவு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை கொண்டு செல்லும் குழாயிலேயே இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பின் கசிவிலிருந்து வெளியாகும் எண்ணெயை சேகரிப்பதற்காக பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோதுமை மா விலை அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரூமி மர்சூக்

கோதுமை மாவின் விலையை அதிகரித்த கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியோ அல்லது அங்கீகாரமோ மா உற்பத்திக் கம்பனிகளுக்கு வழங்கப்படவில்லையெனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

'கோதுமை மா உற்பத்திக் கம்பனிகள் தங்களுடைய விருப்பத்திற்கமைய மாவின் விலையை அதிகரிக்கமுடியாது, எவ்வாறாயினும் பிரிமா மற்றும் செரென்டிப் கம்பனிகள் அறிவிப்பின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மா விலையை அதிகரித்துள்ளது.  ஆகையால் இக்கம்பனிகளுக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என அவர் கூறினார்.

இக்கம்பனிகள் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான வேண்டுகோளை முன்வைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் 450 கிராம் நிறையுடைய  ஒரு இறாத்தல் பாணின் விலை 2 ரூபாவால் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார். (ஜயந்த சமரக்கோன்)

சூறாவளியால் வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டது

இலங்கையை நோக்கி வந்த சூறாவளி காரணமாக வெளியேறுமாறு  விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளது. இலங்கையை நோக்கிவந்த சூறாவளி அயல் நாடான இந்தியாவை நோக்கி தற்போது நகர ஆரம்பித்துள்ளதன் காரணமாகவே வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அக்கரப்பத்தனையில் இருவர் மரணம்



அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகரில் உள்ள கடையொன்றில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மின்பிறப்பாக்கி இயந்திரத்தின் விஷ வாயுவை  சுவாசித்தமையினால் அவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கும்  பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மந்திரி சபையில் தமிழருக்கு ஆப்பு; தமிழ்- முஸ்லிம் முரண்பாட்டை கொம்பு சீவி விடும் பேரினவாதத்தின் சூழ்ச்சி!


-சண் தவராஜா-
மனித வாழ்வில் மனதுக்குப் பிடித்தமில்லாத பல விடயங்கள் நடந்து விடுவதைத் தடுக்க முடியாது எனத் தெரிந்தும் அதனைத் தடுத்து விட மனம் ஏங்கும்.
ஏதாவது ஒரு காரணத்தினால் அது நடந்து விடாமற் போகாதா என மனம் ஏங்கிய வண்ணமேயே இருக்கும். ஆனால், அதனையும் மீறி அந்த விடயம் நடந்து விடும்போது மனம் பாரிய அவஸ்தைக்கு உள்ளாகும்.
கிட்டத்தட்ட இதைப் போன்ற உணர்வே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கான சம்மதத்தை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்குவதாகத் தெரிவித்த போதில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.
இறுதித் தருணம் வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளச் சம்மதிக்காதா என – அதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை என நன்றாகத் தெரிந்திருந்தும் – ஏங்கிய தமிழ் உள்ளங்கள் பல இலட்சங்கள். அவர்களது அந்த எதிர்பார்ப்பானது, மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் நிர்மூலம் ஆக்கப்பட்ட பின்னாளில், தமிழ் மக்களுக்கான ஆகக் குறைந்தளவான அதிகாரப் பரவலாவது கிட்டக்கூடாதா என்ற ஆதங்கத்தின் விளைவே.
உணர்ச்சி பூர்வமான, தமிழ் இனவாத ஊடகத்துறையைப் பெரிதும் கொண்டுள்ள தமிழ் இனம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவைப் பலவாறாக விமர்சித்துத் தனது பழியைத் தீர்த்துக் கொண்டது.
தொடர்ந்தும் அத்தகைய கருத்துக்களே ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டும் வருகின்றன.
அது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே ஆயினும் பொதுவில் தமிழர் தாயகத்திலும், குறிப்பாகத் தென் தமிழீழத்திலும் மிகவும் அவசியமான தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு இத்தகைய கருத்துக்கள் எந்தளவு தூரம் உதவும் என்ற அடிப்படையில் இந்த விடயம் அணுகப்படாமை வேதனை தருவதாக உள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள ஆட்சியின் சாதக பாதகங்களை புதியதொரு கண்ட்டத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத ஆட்சி அமைவது முரண்பாடான ஒரு விடயமே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதே போன்று, தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் ஒன்றிணைவிலான ஆட்சி அமையாமற் போனமையும் துர்ப்பாக்கியமே.
(ஆனால், இவை இரண்டும் – வாய்ப்பிருந்தும் – அமையாமற் போனமைக்குக் காரணம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே என்பது தனியாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம்.)
அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு இனம், தனது அரசியல் கோரிக்கைகளை ஜனநாயகப் பிரதிநிதித்துவ வழிமுறைகளுக்கு ஊடாக வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளமை ஒரு பின்னடைவே.
இந்தப் பின்னடைவானது, எத்துணை தாக்கமுடையது என்பது புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் வழங்கியுள்ள செவ்வியில் தெளிவாகப் புரிகின்றது.
முன்னைய முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மகாணத்திற்கு காணி, மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தேவையில்லை என்று மாத்திரமே கூறி வந்தார்.
புதிய முதலமைச்சரோ, சிறிலங்காவைப் போன்ற பரப்பளவில் சிறியதொரு நாட்டிற்கு மாகாண சபை முறைமையே தேவையற்ற ஒன்று எனக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம் பாரபட்சமாக நடத்தப் படுகின்றொம் என்ற தமிழ் மக்களின் புரிதலின் விளைவாகவே தனிநாடு கோரிய தமிழ் மக்களின் போராட்டம் உருவானது.
அந்தப் போராட்டத்தின் விளைவாக உருவாகிய மாகாண சபை அமைப்பை அவசியமற்ற ஒன்று எனக் கூற முனைவது, வரலாற்றில் இருந்து பாடம் கற்க மறுக்கும் போக்கையே உணர்த்தி நிற்கின்றது.
தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகள் தனியே தமிழ் மக்களின் எதிர்கால நலவாழ்வுக்கான ஒன்று மாத்திரமல்ல. அது தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் நலவாழ்வுக்குமானதே.
இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முன்வரா விட்டாலும், உள்ளடக்கத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவு தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாகவே உள்ளது என்பதே உண்மை.
ஆனாலும் துர்வாய்ப்பாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இந்த உண்மையைப் பண்பளவில் வெளிக்காட்டத் தவறியது மட்டுமன்றி முஸ்லிம் மக்களுக்கு இந்த உண்மையைப் புரிய வைக்கவும் தவறி விட்டது.
இந்தத் தவறைச் சுய விமர்சனத்துக்கு உட்படுத்தி முஸ்லிம் மக்களின் நலன்களையும் உள்ளடக்கி அரசியலை முன்னகர்த்திச் செல்வதற்கான தலைமைத்துவம் தமிழ் மக்கள் மத்தியிலும், அதற்கான தேவையைப் புரிந்து கொண்டு தமிழ் பேசும் இனங்களுக்கான விடுதலையை வென்றெடுக்க ஒன்றிணந்து பயணிக்கத் தேவையான தலைமைத்துவம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இல்லாமை இன்றைய நிலையில் ஒரு பாரிய இடைவெளியாகவே தென்படுகின்றது.
இந்த இடைவெளி கிட்டிய எதிர்காலத்தில் நிரப்பப்படக் கூடிய ஏதுநிலைகளும் தென்படாமை கவலைதரும் விடயமாகும்.
கிழக்கு மாகாணத் தேர்தல்களின் பின்னான நிலைமைகள் கிழக்கும் வடக்கும் தாமதமின்றி இணைக்கப் பட்டாக வேண்டும் என்பதை முன்னிலும் விட அதிகம் வேண்டி நிற்கின்றன.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் மருந்துக்குக் கூடத் தமிழர்கள் இல்லாத ஒரு ஆட்சி உருவாக்கப் பட்டுள்ளமை ஒரு தற்செயல் நிகழ்வல்ல.
பிரித்தாழும் தந்திரத்தின் உச்சக் கட்டமாக மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் இந்த நிலை சிங்களப் பேரினவாதத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைக் கொம்பு சீவி விடும் நோக்கிலேயே தமிழர்கள் கிழக்கு மாகாண மந்திரி சபையில் தவிர்க்கப் பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தமிழர்கள் எவருமே மந்திரி சபையில் இடம்பிடிக்காமற் போனமை இரா சம்பந்தன் அவர்களின் தவறே எனப் பகிரங்கமாகவே பசில் ராஜபக்ஸ கூறியிருப்பதானது தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் திருப்பி விடும் கபட நோக்கிலானது என்பது சிறு பிள்ளைக்குக் கூடப் புரியும்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்ததன் பின்னணி தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி நாம் கதைப்பது பொருத்தமாக இருக்காது.
அந்த முடிவு தொடர்பில் கருத்துக் கூற உரித்துடையவர்கள் அக் கட்சிக்கு வாக்களித்த மக்களே.
ஆனால், தமிழர்களுக்கு மிகவும் தேவையான முஸ்லிம் மக்களின் நல்லெண்ணத்தையும் அவர்களை ஓரளவுக்கேனும் பிரதிநிதித்துவம் செய்யும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நல்லெண்ணத்தையும் எதிர்காலத்தில் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் தமிழர் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்.
கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம் மக்களுடன் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தத் தக்க பொறிமுறை ஒன்றை அவை கண்டறிய வேண்டும். இதுவொன்றே கிழக்கில் தமிழ் மக்களுடன் ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ போல வாழும முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரே வழி.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன்வந்தமை தொடர்பில் விசனமடைந்துள்ள முஸ்லிம் புத்திஜீவிகள், ஆன்மீகவாதிகள், நலன் விரும்பிகள் பலர் இருக்கின்றார்கள்.
அவர்களை இனங் கண்டு காலந் தாழ்த்தாது அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள தமிழர் தலைமைகள் முனைய வேண்டும்.
அதேபோன்று சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு எமக்கு உவப்பானதாக இல்லாத போதிலும் அத்தகையதொரு முடிவை எடுப்பதற்கான ஜனநாயக உரிமை அக்கட்சிக்கு உள்ளது என்பதைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் ஒரு ஐக்கியத்தைக் கட்டி வளர்ப்பதற்கான முன்முயற்சிகளைத் தமிழர் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.
எமது இளைய சகோதரன் வழி தவறிச் சென்று விட்டான் என்பதற்காக அவனை ஒரேயடியாக ஒதுக்கி வைத்து விட முடியாது. புத்திமதி கூறி அவனை அரவணைத்துக் கொள்வதே அறிவுடைய மூத்த சகோதரன் செய்யக் கூடிய காரியம்.
அதனைத் செய்யும் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளதா எனும் நியாயமான சந்தேகம் உள்ள போதிலும், இன்றைய சூழலில் அவ்வாறு நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பதை விட தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லை என்பதே யதார்த்தம்.
அதேவேளை மாகாண சபைத் தேர்தல் காலத்திலும் முடிவுகள் வெளியான பின்னரும் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் பல்வேறு கருத்துக்கள் முஸ்லிம் அமைப்புக்கள், கட்சிகள் மத்தியில் இருந்தும் தனி நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்தும் வெளிவந்திருக்கின்றன, வெளிவந்து கொண்டும் இருக்கின்றன.
இத்தகைய நட்புச் சக்திகளை இனங் கண்டு, அவர்களோடு தொடர்பு கொண்டு உறவை வளர்த்தெடுக்க வேண்டிய பணியிலும் தமிழர் தலைமைகள் கவனஞ் செலுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை இன்றைய சூழலில் தமிழர்கள் தமது அரசியல் இலக்கை அடைவதற்கான முன் நிபந்தனை என்பதைப் புரிந்து கொள்வதிலேயே இச் செயற்பாட்டின் வெற்றி தங்கியுள்ளது என்பது வெறும் கூற்றல்ல.

முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவில் பெய்த கடும் மழை காரணமாக ஒட்டுச்சுட்டானைச் சேர்ந்த 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.

முல்லைத்தீவில் பெய்த மழையினால் ஒட்டுச்சுட்டான் - முல்லைத்தீவு வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுச்சுட்டானில் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியாவில் 48 வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறைந்தது 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.(யொஹன் பெரேரா, சரசி பரணமன்ன)

மேல்கொத்மலை நீரணையின் வான்கதவு திறப்பு

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மேல்கொத்மலை ஓயா ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் தலவாக்கலை நகருக்கு அருகிலுள்ள மேல்கொத்மலை நீரணையில் நீர் மட்டம் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்த நீரணையின் வான் கதவொன்று திறந்து விடப்பட்டது.

இவ்வாறு வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளதால் மேல்கொத்மலைஓயா ஆற்றோரக் கீழ்ப்பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நானுஓயா, ரதல்ல, லிந்துலை பகுதிகளில் தற்போது நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் இந்தப்பிரதேசத்தில் பலமணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மின்பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கினிகத்தெனை - ஹற்றன் பிரதான பாதையிலும் பத்தனை – நாவலப்பிட்டி பிரதான பாதையிலும் ஆங்காங்கே சிறியளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள போதும் வாகனப் போக்குவரத்துகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்




ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன் 700 தொன் தங்கத்தை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்ய கப்பலொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேற்படி கப்பல், கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையுடன் ஒக்ஹொட்ஸ்க் கடலுக்கு கிழக்கில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹரானிலிருந்து ஒக்ஹொட்ஸ்க் கடலூடாக பெக்லிஸ்டோவ் தீவை நோக்கி இந்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கப்பலில் உள்ள தங்கத்தின் பெறுமதி தொடர்பில் அறிவிக்க பொலிமெடல் சுரங்க நிறுவனம் மறுத்து வருகின்றது. இருப்பினும் வழமையாக பயணிக்கும் வழியிலேயே இம்முறையும் அந்த கப்பல் பயணித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன கப்பலைத் தேடுவதற்காக மூன்று கப்பல்கள், ஹெலிகொப்டர் மற்றும் கரையொதுக்கும் கப்பல் போன்றன அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் காணாமல் போன கப்பல் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் ஏற்பட்டுள்ள கடும் அலை சீற்றத்தால் கப்பலைத் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற் பகுதியில் சுமார் 13 அடி உயரத்துக்கு அலைகள் எழுவதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கப்பலிலுள்ள அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை உதவி கோரியுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில் இன்றைய தினமே கப்பல் காணாமல் போயுள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.  

திங்கள், 29 அக்டோபர், 2012

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; வடக்கு கிழக்கில் பலத்த காற்று வீசும் அபாயம்; மலையகத்தில் மண்சரிவு!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று இலங்கையை சூழவுள்ள கடல் பிரதேங்கள் கொந்தளிப்பாக காணப்படுகின்றன.
அதேவேளை வடக்கு கிழக்கு கடற்பகுதியில் மணித்தியாலயத்திற்கு 70 தொடக்கம் 80 மிலோ மீற்றர் வேகத்தில் இன்று இரவு காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில்,அதி கூடிய 187.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கந்தாய் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் சூரியகுமாரன் குறிப்பிட்டுள்ளார்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரத்மலானையில் இருந்து பலாலி நோக்கிய விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரத்மலானை விமானம் நிலையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, மலையகத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீரேந்தும் பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி காணப்படுவதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்து வருகின்றன.
லக்ஷபான நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்ததால் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் நேற்று திறக்கப்பட்டன.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்வதால் ஆங்காங்கே சிறியளவிலான மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி பி ஜீ குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹட்டன் பிரதேசத்தில் பல இடங்களில் சிறிய அளவிளான மண்சரிவு ஏற்பட்டுள்ளன.
ஹட்டன் டன்பார் மைதானத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று குடியிருப்புகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அங்கு தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் காமினிபுற, சமநலகம மற்றும் பண்டாரநாயக்க நகரம் போன்ற பிரதேசங்களில் அனர்த்தங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் 072 7878787 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தலைவர் அழகமுத்து நந்தகுமர் பொது மக்களை கேட்டுள்ளார்.
முல்லைத்தீவிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்தின் கடல் சமாச தலைவர் கூறுகிறார் ஸ்ரீகந்தராஜா அருள்ஜெனீபர் கூறியுள்ளார்.

பாரிசவாத நோயினால் வருடாந்தம் 06 மில்லியன் பேர் மரணம்!


உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்.
இலங்கையில் நாளொன்றுக்கு 40-50 பேரளவில் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக பாரிசவாத தினம் இன்று (29) திகதியாகும். இத்தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேற்படி தகவல் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் படி ஆட்கள் பாரிசவாதத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்நாட்டில் ஆஸ்பத்திரிகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணை புரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது.
இதேநேரம் இந்நாட்டில் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இரு மடங்குகள் படி அதிகரித்து வருகின்றது. அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இந்நாட்டில் 15-59 வயதுக்கு இடைப்பட் டோரின் மரணத்திற்கு துணைபுரியும் காரணிகளில் பாரிசவாதம் 5 வது இடத்தில் உள்ளது.
என்றாலும் உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இம்மரணங்களில் 80 % வறிய மற்றும் வளர்முக நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
அதேநேரம் மதுப்பாவனை, புகை பிடித்தல் பாவனை தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு உப்பு பாவனையைக் குறைப்பதுடன் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகளவில் உட்கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தினத்தை முன்னிட்டு இலங்கை மருத்துவர்கள் சங்க மண்டபத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பத்மா குணசேகர எழுதியுள்ள பாரிசவாத நிவாரணம் என்ற நூல் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

சனி, 27 அக்டோபர், 2012

நிந்தவூர் தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றுகாலை 6.20 மணியளவில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் குத்பா பிரசங்கத்தின் ஒளிப்பதிவு


வழமைபோன்று இம்முறையும் நிந்தவூர் தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றுகாலை 6.20 மணியளவில் நடைபெற்றது.
மௌலவி எம்.றியாஸ் அவர்களால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரழான மக்கள் ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.
அங்கு நடைபெற்ற குத்பா பிரசங்கத்தின் காணொளியை இங்கு பார்வையிடலாம்.




 


வெள்ளி, 26 அக்டோபர், 2012

நிர்வாண படத்தை 'தலைக்கு' பொருத்தியவர் கைது



பாடசாலை அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இருவரின் தலைகளுக்கு நிர்வாணமான படங்களை பொருத்தி நீச்சல் தடாகத்தில் இருப்பதை போல வடிவமைத்து பேஸ் புக் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்புக்கு அண்மையிலுள்ள ஹோமாகவை அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆCரியைகள் இருவரின் தலைகளுக்கே இவ்வாறு நிர்வாணப் படங்கள் பொருத்தப்பட்டு  பேஸ் புக்கில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை கைது செய்த கஹத்துடுவ பொலிஸார் அவரை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாடசாலை வைபவமொன்றில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பயன் படுத்தியே குறித்த நபர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகைப்பட கலைஞர் குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டமை தொடர்பில் மேலே குறிப்பிட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆரியைகள் அவரை எச்சரித்ததை அடுத்தே புகைப்பட கலைஞர் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். 

வியாழன், 25 அக்டோபர், 2012

3,400 ரூபாவை கூட பெற முடியாத 18 இலட்சம் குடும்பங்கள் உள்ளன: பஸில்



மிகக் குறைந்த மாதாந்தச் செலவினமான ரூபா 3400ஐக் கூட பெற்றுக்கொள்ள முடியாத 18 இலட்சம் குடும்பங்கள் இலங்கையில் உள்ளன என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'நாட்டில் நிலவும் இவ்வாறானதொரு வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்' என்றும் குறிப்பிட்டார். (அஜித் மதுரப்பெரும) 

13வது திருத்த சட்டம் அவசியம்; திவிநெகுமவும் தேவை; முதலமைச்சர் வேட்பாளர் நானே!


13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கம் அவசியம் என்பதுடன், திவிநெகும சட்டமூலம் அமுல்படுத்தப்படுவதும் அவசியம் என ஈ.பி.டி.பி. தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் இரத்துச் செய்யப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிலர் குறுகிய அரசியல் லாப நோக்கத்தில் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் அரசியல் கட்சிகள் உரிய பிரயோசனத்தை பெறவில்லை.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தானே போட்டியிட போவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இரு சிறுமியர் வல்லுறவு; சாரதி கைது


 (சி.எம்.ரிக்பாத்)

இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர் செய்த முறைப்பாடுகளை அடுத்தே குறித்த சந்தேக நபரை தெல்தெனிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அம்பானையை சேர்ந்த இந்த நபர்,  10 மற்றும் 12 வயதுகளையுடைய சிறுமிகளையே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம்?



கிழக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்ட போதிலும்  அதிகாரிகள் மட்டத்திலேயே விரைவில்  மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி செயலகத்திலிருந்தே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஜனாதிபதியின் பேச்சாளராக கடமையாற்றி வரும் பந்துல ஜயசேகர இடமாற்றப்பட்டு அவரது வெற்றிடத்துக்கு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வரும் மொஹான் சமரநாயக்க நியமிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றும் அனுராதா கே. ஹேரத் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் புதிய பேச்சாளர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பேச்சாளரான பந்துல ஜயசேகர டெய்லி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் தமிழில் பேசுகின்றனர்!


நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தமிழில் பதிலளித்தார்.

ஆனால் சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க கூறினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ.எச்.எம்.அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது. இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என தெரிவித்தார்.
அதேவேளை மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த கருணாதிலக்க கூறினார்.

13ஆவது திருத்தத்தை நீக்கும் நோக்கம் இல்லை: அரசாங்கம்

13ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

அரச ஊழியர்களுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் 2,535 முறைப்பாடுகள்



(சுபுன் டயஸ்) 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள 2,535 முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை அரசாங்க ஊழியர்களுக்கு எதிரானவையாக உள்ளன எனவும் இது அரசாங்க சேவையில் ஊழல் கணிசமாக அதிகரிப்பதை காட்டுகின்றது எனவும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளில் 130 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு அதில் 69 முறைப்பாடுகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்குகளில் 32 முடிவுக்கு வந்துவிட்டன. இதில் 17 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டன.

பிரதேச செயலகங்கள், பொலிஸ் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த ஆணைக்குழு, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரி.ஜயவர்தனவுக்கு எதிராக தரக்குறைவான எண்ணெய் இறக்குமதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

தென்மேற்கு கரை புவித்தட்டில் பிளவு



நாட்டின் தென்மேற்கு கரை புவித்தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பதனால் நிலநடுக்கத்தின் தாக்கமும் பாதிப்புகளும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டு உபகுழுவின் தலைவர் சகபந்தே இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார்.

கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்து தெரிவிக்கையில்,

'நாட்டின் தென்மேற்கு கரைக்கு அப்பால் 500 - 700 கிலோ மீற்றர் தொலைவில், இந்தோனேசிய - அவுஸ்திரேலிய புவித்தட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், புதிய புவித்தட்டு ஒன்று உருவாகி வருகிறது. இதன்காரணமாக, எதிர்காலத்தில் நிலநடுக்கத்தினால் இலங்கையில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் 1615ஆம் ஆண்டு பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எதிர்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட நகர மையத்தின் அருகே நிலநடுக்கம் நிகழுமானால், தற்போதைய அபிவிருத்தி மற்றும் சனத்தொகையின் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்படும்' என்றார்.

புதன், 24 அக்டோபர், 2012

கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணத்தண்டனை


                                                                            ( சி.எம்.ரிக்பாத்)

புஸ்ஸலாவ, ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கூரான ஆயுததத்தால் வெட்டியும் பொல்லுகளால் தாக்கியும் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்க கண்டி மேல் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய மகன் ஆகிய மூவருக்குமே கண்டி மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க மரணத் தண்டனை விதித்துள்ளார்.

ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதான முதியன்ஸலாகே செனரத் பண்டா என்பவர்; கூரான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்கானப்பட்ட அதே தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து கோவிந்தசாமி (வயது 54), அவரது மனைவியான இந்திராணி வைத்தியலிங்கம் (வயது 49) மற்றும் அவர்களுடைய மகனான கோவிந்தசாமி ஆகிய மூவருக்குமே மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்குற்றச்சாட்டு தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதன் பின்னர் வழக்கு கண்டி மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

இவ்விசாரணைகளின் போது மனுதாரர் தரப்பில் அரச சட்டத்தரணி உதய கருணாதிலக்கவும் எதிராணிகள் சார்பில் சட்டத்தரணி மர்வின் சில்வாவும் ஆஜராகி வந்தனர்.

இருதரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளின் பின்னர் வழக்கு விசாரணைகள் முடிவுற்றதையடுத்து இது குறித்து ஆராய்ந்த நீதவான் கொலைக்குற்றச்சாட்டில் மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மூவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் கைது


 (சி.எம்.ரிக்பாத்)

மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் பாடசாலை அறையொன்றில் வைத்து மாணவியின் முன்னிலையில் தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக நின்றுள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த அதிபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்



சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்தியர்கள் நாளை வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அவசர நடவடிக்கைகளில் மாத்திரமே வைத்தியர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

யாழ், கிளிநொச்சியில் காணி கோரும் இராணுவம்: யாழ்.பிராந்திய பணிப்பாளர்



(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றைப் பெறுவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 26 ஏக்கர் காணி இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழு தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினால் பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட காணி உரிமப் பத்திரங்களைத் யுத்த காலத்தில் தொலைத்தவர்கள் மீண்டும் உரிமப் பத்திரங்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, குறித்த பகுதியில் வசித்ததை உறுதிப்படுத்தி கிராம அலுவலர், பிரதேச அலுவலர் ஆகியோரின் கடிதங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றோடு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் யாழ் பிராந்தியத்துடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்குரிய உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மின்னல் தாக்கத்தினால் சிங்க பாதத்திற்கு சேதம்



மின்னல் தாக்கத்தினால் சீகிரியா குன்றின் சிங்க பாதத்தின் அருகிலுள்ள சுவரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தம்புள்ள பகுதியில் கூடுதலான மழை வீழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை பாதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் மாபெரும் விழா சம்மாந்துறையில்


நேற்று மாலை சம்மாந்துறை பிரதான வீதியில் நடைபெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் மாபெரும் விழாவும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மற்றும் மகளிர் விவகாரம்,இளைஞர் விவகாரம் என பல அமைச்சுக்குப் பொறுப்பான எம்.ஐ.மன்சூர் அவர்களுக்கு 
பாராட்டுத்தெரிவிக்கும் விழாவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும் கெளரவ அதிதியாக கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவுத் மற்றும் கிழக்கு மாகாணாமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்குமாகாண சபை உருப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ,எம்.ஜெமீல்.ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரும் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றதாக எமது சம்மாந்துறை செய்தியாளர் தெரிவித்தார்.











உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத் திட்ட தயாரிப்பும் வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடும்!


ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் குறிக்கோள்கள், கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயார் செய்தல், அவற்றை அமுல்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பிரதான கருவியாக வரவு செலவுத்திட்டம் உள்ளது.
மேலும் திட்டமிடல் செயற்பாட்டின் முன்னேற்றத்தை கண்காணிப்புச் செய்து வித்தியாசங்களை கட்டுப்படுத்துவதற்குவுள்ள வினைத்திறன்மிக்க நிதி முகாமைத்துவ ஆவணமாகவும் வருடாந்த வரவு செலவுத் திட்டமே பயன்படுகின்றது.
குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களை அமைத்துருவாக்கும் சட்டங்களுக்கு அமைய வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்வதானது, சட்ட ரீதியான தேவைப்பாடாகுமென்பதுடன் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது கவனமாகவும் சரியாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கவாறும், அமுல்படுத்தக்கூடிய வகையிலும், மக்களின் பங்கேற்பு உபாய முறைகளின் அடிப்படையில் தயார் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
அதற்கமைய மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 211 முதல் 217 வரையான பிரிவுகளின் மூலமும், நகர சபைகள் கட்;டளைச் சட்டத்தின் 178 (1) முதல் 179 வரையான பிரிவுகளின் மூலமும், பிரதேச சபைகள் சட்டத்தின் 168 ஆம் பிரிவினதும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இந்த சட்டத் தேவைப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நகர முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் தயார் செய்கின்ற வரவு செலவுத் திட்டமானது முறையான நிதி முகாமைத்துவமின்றி தயார் செய்யப்படுகின்ற வெறும் ஆவணமாக மாத்திரம் உள்ளதுடன் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற அல்லது மக்களின் எதிர்பார்ப்புகளை உச்சளவில் நிறைவேற்றக் கூடியவாறு இது தயார் செய்யப்படுவதாகத் தெரியவில்லை.
அது மட்டுமன்றி, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திட்டமிடப்படாத செலவினங்களைச் செய்வதனாலும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொகைகளையும் தாண்டி செலவினங்களைச் செய்வதனாலும் கணக்காய்வு வினாக்களுக்கு உட்பட முடியும்.
உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சிபார்சுகள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான பங்கேற்புத் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத்திட்டத்தை தயார் செய்வது பற்றிய வழிகாட்டல் தொகுப்பு, 2009 டிசம்பர் 18 ஆம் திகதிய 1632ஃ26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தேசிய உள்ளூராட்சிக் கொள்கைக்கு அமைய தயார் செய்யப்பட வேண்டும்.
எனவே வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போதும், வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாட்டின் போதும் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
01 வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது கிராம மட்டத்தில் அல்லது வட்டார மட்டத்தில் பிரேரணைகளைப் பெற்றுக் கொள்ளல்.
02 வருமானம் மற்றும் செலவினத்தை மதிப்பீடு செய்யும் போது யாதாயினுமொரு விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் தரவுகளைக் கணிப்பிடுகின்ற மரபுரீதியான முறையிலிருந்து விடுபட்டு உண்மையான வருமானம் மற்றும் செலவினங்களைக் கணிப்பிடுதல் வேண்டும். மேலும் வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்யும் செயற்பாட்டின் வெற்றிகரமான தன்மையை இலகுபடுத்துவதற்காக வருமான மதிப்பீடுகளைத் தயார் செய்வதை முதலிலும், செலவின மதிப்பீடுகளைத் தயார் செய்வதை அதன் பின்னரும் மேற்கொள்ளல் வேண்டும். முதலில் செலவின மதிப்பீடுகளைத் தயார் செய்து அதற்குப் பொருத்தமானவாறு தவறாக வருமானத்தை அதிகரித்துக் காட்டி வருமான மதிப்பீடுகளைத் தயார் செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
03 உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த வருமானத்தில் 60மூஐ மீண்டுவரும் செலவினங்களுக்குப் பயன்படுத்துவதும், அவற்றில் 50மூ ஐ வீதிகள், கட்டடங்கள் மற்றும் நிலையான சொத்துக்களின் புதுப்பித்தல்கள் மற்றும் பராமரிப்புக்காக ஒதுக்குவதற்கும், சபையின் சுயஉருவாக்க வருமானத்தில் ஆகக் குறைந்தது 20மூ ஐ பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒதுக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
04 வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் குறிப்பிட்டதொரு விகிதத்தை இளைஞர் அபிவிருத்திக்கும், பயிற்றுவிப்புகளுக்கும், விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும், மந்தபோசனையை ஒழிப்பதற்கும் பயன்படுத்தல்.
05 வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் செயற்பாட்டில் சமுதாய சேவைகளை வழங்கும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
*ஆற்றப்படுகின்ற சேவைகளைத் தற்போதிலும் பார்க்க எவ்வாறு வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும்?
*சேவைகளின் தரத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்?
*தற்போது ஆற்றப்படுகின்ற சேவைகளில் விஸ்தரிக்க வேண்டிய சேவைகள் உள்ளனவா?
*தற்போது சபையினால் ஆற்றப்படுகின்ற சேவைகளில், அச்சேவைகளை நுகர்வோரிடமிருந்து கட்டணம் அறவிட்டுக் கொண்டு தனியார் துறையினால் ஆற்றக்கூடிய சேவைகள் உள்ளனவா?
போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
06 வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போது மக்களின் பங்கேற்பை அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதுடன், வரவு செலவுத்திட்ட செயல்ரீதியான திட்டத்தையும் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போது பிரதேச மக்களின் சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் உதவி மற்றும் பங்கேற்பைப் பெற்றுக் கொள்வதும் மிக முக்கியமாகும். இந்த உதவியையும், பங்கேற்பையும் பல்வேறு வழிமுறைகளில் பெற்றுக் கொள்ள முடியும். சபையினால் வரவு செலவுத்திட்டக் கொள்கை தீர்மானிக்கப்பட முன்னர் வரவு செலவுத்திட்டம் மற்றும் சேவைகள் பற்றிய மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் கோர முடியும்.
வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போது மக்களின் பங்கேற்புடன் அதனைத் தயார் செய்வதன் தேவை மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல் பொருத்தமானதாகும்.
07 வரவு செலவுத்திட்டத்திற்கு சமூகத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் போது உத்தேச ஆண்டுக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ள மொத்த வருமானம் எவ்வளவு என்பது தொடர்பான பருமட்டான மதிப்பீட்டைச் செய்து கொள்வது மிகவும் பொருத்தமானதாகுமென்பதுடன், மேற்படி மதிப்பிடப்பட்ட வருமானம் தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதன் மூலம் மக்கள் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகள் மற்றும் கருத்துக்களை செயல்ரீதியாக அமுல்படுத்துவதை இது இலகுபடுத்தும்;.
08 உள்ளூராட்சி மன்ற வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்வது தொடர்பாக உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய ஆணைக்குழுவினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள பின்வரும் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும் கால அட்டவணைக்கு அமைய வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்வது சிறந்ததாகும்.
பணி – இலக்குத் திகதி – பொறுப்பு 
01. வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்வது பற்றிய அறிவுரைகளைத் தயார் செய்து வெளியிடல் - ஏப்ரல் (15) – நகர ஆணையாளர்/செயலாளர்
02. வட்டாரக் குழுக்களில் பிரேரணைகளைச் சமர்ப்பித்தல்- ஜுன் (30)- வட்டாரக்குழு
03. வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றி அவ்வவ் பிரிவுகளின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் – ஜுன் (30) – பிரிவுத் தலைவர்கள்
04. ஆரம்ப மதிப்பீடுகளைத் தயார் செய்தல்- ஜுலை( 15) – கணக்காளர் /கணக்குப் பதியுனர் /வரவு செலவுத் திட்ட அலுவலர்கள்
05.நிலையான குழுக்களின் அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளல் – ஜுலை (31) – நகர ஆணையாளர் /செயலாளர்
06.நகர முதல்வர்/தவிசாளரின் மீளாய்வு -ஆகஸ்ட் (15) -நகர முதல்வர் /தவிசாளர்
07.வரவு செலவுத் திட்டக் கொள்கையைத் தீர்மானிப்பதும், சபையில் சமர்ப்பிப்பதும். – ஆகஸ்ட் (31) – நகர முதல்வர் /தவிசாளர்
08.பிரிவுகளின் அடிப்படையிலான வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்தல் – செப்தம்பர்(30) – பிரிவுத் தலைவர்கள்
09.இறுதி வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயார் செய்வதும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தை வரைவு செய்வதும். – அக்டோபர்(31 – கணக்காளர் /கணக்குப் பதியுனர் /வரவு செலவுத் திட்ட அலுவலர்கள்
10.நிதி நிலையியல் குழுவினால் வரைவு வரவு செலவுத் திட்டம் ஆராயப்படுதல் – நவம்பர் (15) – நகர ஆணையாளர் /செயலாளர்
11.வரவு செலவுத் திட்டச் செய்தியைத் தயார் செய்தல் – நவம்பர் ( 20) – நகர முதல்வர் /தவிசாளர்
12.வரைவு வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தல் – நவம்பர் ( 30) – நகர முதல்வர் /தவிசாளர்
13.தேவையாயின் திருத்திய வரவு செலவுத் திட்டத்தை இரண்டாவது முறை சபையில் சமர்ப்பித்தல் – டிசம்பர்( 15) – நகர முதல்வர் /தவிசாளர்
14.வரைவு வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் – டிசம்பர்( 15) – சபை
15.வரவு செலவுத் திட்ட ஆவணத்தை அச்சிட்டு விநியோகித்தல் – டிசம்பர்( 31) – நகர ஆணையாளர் /செயலாளர்
09.வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆண்டினுள் அதற்கமைய நிதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது அத்தியாவசியமாகு மென்பதுடன், ஆண்டினுள் வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட வேண்டியது, யாதாயினும் தடுக்க முடியாத அத்தியாவசிய நடவடிக்கைகள் மாத்திரமாகுமென்பதுடன் அதற்கும் உடனடியாகத் தேவையான சபைத் தீர்மானங்களையும், குறைநிரப்பு மதிப்பீடுகளை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.
10.வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படாதுள்ள யாதாயினுமொரு விடயத்தை அமுல்படுத்துவதற்கான குறைநிரப்பு வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது சபையின் நிலையான வைப்புகளுக்குப் பதிலாக முதலீடு செய்துள்ள நிதி வருமான மூலமொன்றல்ல என்பதையும் கவனத்தில கொள்ளல் வேண்டும்.
11.வரவு செலவுத் திட்டத்திலுள்ள வருமானங்கள் மற்றும் செலவினங்களை உண்மையான வருமானங்கள் மற்றும் செலவினங்களுடன் ஒப்பிட்டு வருமானங்கள் தொடர்பாக மாதாந்தமும் செலவினங்கள் தொடர்பாக மூன்று மாதங்களுக்கொரு முறையும் வரவு செலவுத் திட்டக் கண்காணிப்பை மேற்கொள்வதானது பயனுள்ளதாக அமையும்.
12.வரவு செலவுத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமானங்களை உரிய ஆண்டினுள் உருவாக்கிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு சேகரிக்கப்படுகின்ற வருமானங்களுக்கு அமைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
13.வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதனை முறையான முகாமைத்துவத்துடன், ஆண்டினுள் உரிய வகையில் அமுல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.
எம்.ஐ.எம். வலீத் (B.A.)
நிகழ்ச்சித்திட்ட அதிகாரி
ஆசியா மன்றம்

திங்கள், 22 அக்டோபர், 2012

கிணற்று நீர் வரி அறவீட்டுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு



'கிணற்று நீர் பயன்பாட்டுக்கு  வரி அறவிடுவது தொடர்பில்   எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  நீர்ப்பாசன அமைச்சு எதிர்ப்பதாகவும்  இந்த தீர்மானத்தை அதிகாரிகள் மீளாய்வு செய்ய வேண்டும்' என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவரத்தன கூறியுள்ளார்.

நீர்பாசன அமைச்சின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்பதால் நீர்வழங்கல் அமைச்சர் என்ற வகையில் இது போன்ற ஒரு வரிக்கு ஆதரவாக நான் ஒரு போதும் கையுயர்த்த மாட்டேன்' என அவர் கூறினார்.

சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசில், கோட்டாபய பங்கேற்ற நிகழ்வில் கடமை தவறிய இரு பொலிஸார் இடைநிறுத்தம்



பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் பாதுகாப்பு வழங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் இருவர் தங்களின் கடமையை அலட்சியம் செய்தமைக்காக அவ்விருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 07 இலுள்ள 120 வருடங்கள் பழமை வாய்ந்த குதிரைப் பந்தயத்திடல் பார்வையாளர் கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறக்கப்பட்ட தினத்தன்று பாதுகாப்பு கடமையில் சரியாக ஈடுபடாத இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையே கறுவாத் தோட்ட பொலிஸார் இன்று திங்கட்கிழமை இடைநிறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது மோட்டார் சைக்கிள் ஒன்று மேடைக்கு அருகில் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

"இதன்போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மோட்டார் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால் கடமையில் அலட்சியம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்" என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. (சுபுன் டயஸ்)

இலங்கை பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த 150 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!



சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் 150 பயணிகள் உயிர் தப்பினர்.


சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (21) மாலை 3.40 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது.

இதில் மொத்தம் 150 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

விமானம் புறப்பட தயாரான போது, விமானி கடைசியாக விமானத்தை பரிசோதனை செய்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.

உடனடியாக இதுபற்றி விமான நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் தாமதமாக இலங்கை புறப்பட்டு செல்லும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

விமானி உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 150 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

site counter