அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 5 டிசம்பர், 2012

ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் நான் சும்மா விடமாட்டேன் – ஸர்மிளாவின் சகோதரி


-நமது செய்தியாளர்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ.ஹுஸைன் நேற்று முன்தினம் (3.12.2012) திங்கட்கிழமை ஏறாவூர் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
investigationபி.பி.சி.தமிழோசை வானொலியில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா ஸெய்யித் என்பவரின் சகோதரியான பர்சானா என்பவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு தொடர்பாக மேற்படி ஊடகவியலாளர் ஹுஸைன் விசாரணைக்காக அழைக்கப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா ஸெய்யித் என்பவர் விபச்சாரத்தை இலங்கையில் சட்ட பூர்வமாக்குவது பல நன்மைகளைத் தரும் என்று கூறிய கருத்துத் தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் கலந்துரையாடுவதற்காக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஸர்மிளாவின் பெற்றோர் வசிக்கும் ஏறாவூர் இல்லத்திற்கு கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்தது.
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் ஹாஜியார் தலைமயில் இங்கு சென்ற சம்மேளன உறுப்பினர்களுடன் சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் ஊடகவியலாளர் ஹுஸைனும் அங்கு சென்றிருந்தார்.
அப்போது ஸர்மிளா ஸெய்யித்தின் தந்தையுடனான சம்மேளனத்தின் சந்திப்பை செய்தியாக மேற்படி ஊடகவியலாளர் ஹுஸைன் ஊடகங்களில் வெளியிட்டதுடன் ஸர்மிளாவின் தந்தை இது தொடர்பில் கூறிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தி தொடர்பாகவே ஸர்மிளாவின் சகோதரி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கெதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ஸர்மிளாவின் சகோதரி பர்ஸானா செய்த முறைப்பாடு தொடர்பில் ஏறாவூர் பள்ளிவாயல் சம்மேளனத்தின் சார்பாக அவருடைய வீட்டிற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சம்மேளன உறுப்பினர்கள் உலமாக்கள் மௌலவிமார்கள் ஊர்ப்பிரமுகர்கள் ஆகியோர் ஏறாவூர் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டு வந்த பின்னணியிலேயே மேற்படி ஊடகவியலாளர் ஹுஸைனும் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியாலும் இந்த செய்தியில் பிரசுரிக்கப்பட்ட தனது புகைப்படத்தினாலும் தனக்கும் தனது வாழ்க்கைக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஊடகவியலாளர் ஹுஸைன் மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியோருக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த முறைப்பாட்டில் ஸர்மிளாவின் சகோதரி பர்ஸானா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக வெளிவந்த ஸர்மிளாவின் கருத்து தொடர்பில் எரிந்து கொண்டிருந்த ஒரு பிரச்சினையை தணித்து தீர்த்து வைக்கும் நோக்குடனேயே சம்மேளனம் அங்கு சென்றது எனவும் ஊடகங்களின் ஊடாக இந்தப் பிரச்சினை வெளிக் கொண்டு வரப்பட்டதால் ஊடகங்கள் மூலமாகவே அந்தப் பிரச்சினையின் விபரீதத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று சம்மேளனம் கருதியதாலும், சம்மேளனம் எனது உதவியை நாடியிருந்தது.
அதன்படி ஸர்மிலாவின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலமையையும் குறிப்பாக பர்ஸானாவினால் நடத்தப்படும் முன்பள்ளிக்குத் தீவைக்க எத்தனிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிகழ்வையும், அவரது தந்தையின் கருத்தையும் வெளியுலகத்திற்குக் கொண்டு செல்வதற்காகவே ஸர்மிளாவின் குடும்பத்தினருடனான சம்மேளனப் பிரதிநிதிகளின் சந்திப்பை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டதாக ஊடகவியலாளர் ஹுஸைன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
ஓஐசி:  ’உங்களுக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் சமூகத்தில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடாமல் பாதுகாத்து சமாதான வழிமுறையொன்றின் அணுகு முறையாகவே இவர்கள் எல்லோரும் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
இவர் ஒரு ஊடகவியலாளர் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும், உங்களது பாலர் பாடசாலை நிகழ்வுகளுக்காக நீங்கள் அவரை ஏற்கெனவே அழைத்து அந்த செய்தியை ஊடகங்களில் போடுமாறு கேட்டிருக்கிறீர்கள். அந்தச் செய்தி இணையத் தளங்களில் வந்திருக்கின்றது.
பர்சானா : இவர் ஊடகவியலாளர் என்று நீண்டகாலமாகவே எனக்கு நன்கு தெரியும். ஆனால் சம்பவ தினத்தன்று ஊடகவியலாளராகத்தான் வந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.
ஊடகம் என்று சொல்லியிருந்தால் வீட்டுக்குள் அனுமதித்திருக்க மாட்டோம் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருப்போம். ஊடகவியலாளர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் அதனால் இதனை நான் சும்மா விட்டு வைக்க மாட்டேன்.
ஓஐசி : ஊடகவியலாளர் என்றால் அவர் செய்தி சேகரிப்பார் என்று உங்களுக்குத் தெரியாதா ?
உங்களது நிறைய நிகழ்வுகளுக்கு இந்த ஊடகவியலாளர் வந்திருக்கின்றார். அது தெரியுமா உங்களுக்கு ? இவர் ஒரு ஊடகவியலாளர் என்பது உங்களுக்கு நீண்டகாலமாகத் தெரியும். இன்று நேற்று தெரிந்தவர் அல்ல அவர். நீங்கள் அன்று தான் கண்டவர் என்பதல்ல பலதடவைகள் நீங்கள் சந்தித்திருக்கின்றீர்கள். இதற்கு முதல் நீங்கள் அவரை அழைத்திருக்கிறீர்கள். இணையத் தளங்களில் உங்கள் முன்பள்ளி நிகழ்வுகளை படத்தோடு செய்தியாகப் போடச் சொல்லி அது வெளிவந்தும் உள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையை சுமுகமாக சமாதான வழிமுறையில் தீர்த்து வைக்கும் நோக்கோடுதான் இவர்கள் எலலோரும் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அங்கு வந்தவர்கள் சமயத் தலைவர்கள், உலமாக்கள், சம்மேளனப் பிரதிநிதிகள் ஊர்ப்பிரமுகர்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இணையத்தளத்தில் வந்த செய்தியில் உங்கள் பெயரோ உங்கள் கருத்தோ உங்களை அலங்கோலமாகவோ எதுவும் இடம் பெறவில்லை. உங்களுக்கு உதவ முன்வந்தவர்கள் சமயத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர்த் தலைவர்கள்தான். உங்கள் பாலர் பாடசாலைக்கு தீவைத்ததாக நீங்கள் வந்து முறைப்பாடு செய்யும் முன்பே இங்குள்ள ஒரு அரசியல் பிரமுகர் மௌலானாதான் எங்களுக்குச் சொல்லி உங்களுக்குப் பாதுகாப்பை வேண்டி நின்றார்கள். அவரோடு உள்ளவர்கள்தான் இவர்கள். பேச்சு வார்த்தையில் நடந்த விடயங்களைப் பற்றி உங்களுக்குத் தீங்கானதாக அவர்கள் எதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. பேச்சு வார்த்தை நடக்கும் போது நீங்கள் எதுவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மீடியாவும் இருக்கிறது என்றும் உங்களுக்கு நன்கு தெரியும். இவர் ஒரு மீடியா என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது அப்படியென்றால் அவர் செய்தி சேகரிக்கத்தான் வந்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே !
பர்சானா :மீடியா என்று எனக்குத் தெரியும் ஆனால் செய்தி சேகரிக்கத்தான் வந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் வீட்டுக்குள் எடுத்திருக்க மாட்டோம் விட்டை விட்டு வெளியேற்றியிருப்போம்.
ஓஐசி :இது ஒரு குற்றமான வழக்கு இல்லை. இது ஒரு சமாதானத்திற்கான முயற்சிதான் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. சமாதான செயற்பாட்டுக்கு எதிராக வழக்கு எடுக்க முடியாது. ஊடகவியலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முயற்சித்தால் இயல்பாகவே சம்மேளனத்தையும் வழக்குக்குள் இழுக்க வேண்டிவரும்.
பர்சானா: ஆம் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் ஊடகவியலாளரைச் சேர்த்துக் கொண்டு வந்தபடியால் அவர்களுக்காக என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
நான் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளருக்கு எதிராகவும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். இந்த விடயத்தை வழக்காடவே நான் விரும்புகின்றேன். தந்தை மன்னிப்புக் கேட்டார் என்ற செய்தி என் வாப்பா சொல்லிய விடயங்கள் அல்ல. வாப்பா அப்படிச் சொல்லவில்லை. அந்த ஒலிப்பதிவு இருந்து அது உண்மையாக இருந்தால் அதை இப்பவே இவ்விடத்திலேயே போட்டுக்காட்டினால் நான் இப்பவே முறைப்பாட்டை வாபஸ் வாங்குவேன். ஆனால் எனக்கு இந்தப் பிரச்சினையை இலேசாக விட்டுக் கொடுக்கும் ஐடியா இல்லை. ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் நான் சும்மா விடமாட்டேன்.

சிங்களவர் பிள்ளைகள் பெறுவதை குறைத்துள்ளதால் பௌத்த பிக்குகளுக்கு தட்டுப்பாடு




சிங்களக் குடும்பங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் எண்ணிக்கையில் குறைவு காணப்படுகின்றது இது எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என  மஹாநாயக்கர் பரவாஹர சந்தரதன தேரர் பிரான்ஸில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் சிங்களக் குடும்பங்கள் தற்போது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் எண்ணிக்கையினைக் குறைத்துள்ளது இதனால் எதிர்காலத்தில் பௌத்த துறவிகளை உருவாக்குவதில் பாதிப்பு ஏற்படும்.

எனவே எதிர்காலத்தில் இலங்கையில் 5 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் சிங்களக் குடும்பத்திற்கு பரிசில்களும் உதவிகளும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டமானது எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இலங்கையில் உள்ள சிங்களக் குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பங்களாதேசிலிருந்து பிள்ளைகள் வரவழைக்கப்பட்டு பௌத்த துறவிகளாக மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கள இனம் அழிவடைந்து செல்கின்றது என்றார்.  

சூரிய மண்டலத்தில் புதிய பகுதி கண்டுபிடிப்பு


கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற விண்கலன்களை விண்ணில் செலுத்தியது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1977-ம் ஆண்டு இவை அனுப்பப்பட்டன. தற்போது இவை சூரிய மண்டலத்தில் ஊடுருவி பயணம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் வாயேஜர்-1 விண்கலம் சூரிய மண்டலத்தின் புதிய பகுதிக்குள் நுழைந்து விட்டது. அது விண்வெளிக்கும், நட்சத்திர கூட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகும். சூரிய மண்டலத்தில் இதுவரை இந்த பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை என நாசாவின் வாயேஜர் திட்ட இயக்குனர் எட்ஸ்டோன் தெரிவித்துள்ளார். 

மேலும், வாயேஜர்-1 விண்கலத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே, வாயேஜர்-2 விண்கலம் தற்போது 900 கோடி மைல் தூரத்தில் பயணம் செய்து வருகிறது. 

ரஷ்யாவில் வாழும் 20 மில்லியன் முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு உதவுவர்; அமைச்சர் ஹக்கீமிடம் ரஷ்ய தூதுவர்!




ரஷ்யாவின் முப்தி உடனும் அங்கு வாழும் முஸ்லிம் அறிஞர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அலெக்சாண்டர் ஏ.கர்ச்சாவாவிடம் கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் இங்கு பதவியேற்றுள்ள இலங்கைக்கும் மாலைதீவுக்குமான ரஷ்யத் தூதுவர் கர்ச்சாவா, அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான உரையாடல் நீதியமைச்சில் நடைபெற்றபொழுது, ரஷ்யாவில் 20 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக கூறினார். அத்துடன் இலங்கை முஸ்லிம்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் முன்வருவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ராஜதந்திர நல்லுறவு 60 ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு ரஷ்யா ஆதரவு வழங்கியதாகவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டு பிரஸ்தாப மனித உரிமைகள் மன்றத்தில் ரஷ்யா இடம்பெறாத போதிலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு தொடரும் என்று தூதுவர் கூறினார்.
கொழும்பு 7, எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் புதிய ரஷ்ய தூதரக வளவை அண்மித்ததாக நிறுவப்பட்டிருப்பதால், தூதரகத்தின் புதிய கட்டிடம் அமையும் போது ஏற்படக் கூடிய நடைமுறை பிரச்சினை பற்றி தூதுவர் கூறியதோடு நகர அபிவிருத்தி அதிகார சபையோடு சம்பந்தப்பட்டதாக இருப்பதால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு தாம் அதுபற்றி கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ரஷ்யத் தூதுவரும் தம்மிடம் இது பற்றி கூறியதாகவும், சமயம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் உணர்வுபூர்வமாகவும் பொறுப்புணர்ச்சியோடும் அணுகப்பட வேண்டியது என்றும் அமைச்சர் ஹக்கீம் ரஷ்யத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.

அஸ்வர் எம்.பி. இனித் தலைமை தாங்க முடியாது; சபாநாயகர் ஆப்பு!


நாடாளுமன்ற சபைக்கு தலைமை தாங்கும் தவிசாளர் குழாமிலிருந்து ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் நீக்கப்பட்டுள்ளார்.
அக்கிராசனத்தில் இருந்து சபைக்கு தலைமை தாங்கும் போது பக்கசார்பாக நடந்து கொள்கின்றார் என எதிர்க் கட்சியினர் செய்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த குழாமிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை நீக்குவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் தலைமை தாங்காத சந்தர்ப்பங்களில் தவிசாளர் குழாமிலுள்ள ஒருவர் அவைக்கு தலைமை தாங்குவார்.
குறித்த அந்த குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்குமான அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை படைத்த அதி கூடிய வயது மூதாட்டி மரணம்!


உலகில் அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்பட்ட பெஸி கூப்பர் தனது 116 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
1896 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பெஸி கூப்பர் உலகில் நீண்ட ஆயுளை கொண்ட பெண்ணாக கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

site counter