அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு


கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

-அபூ ஜுமைல்-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு தெரிவாகிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வீட்டில் பாரிய வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனுக்கு சொந்தமான வீட்டிலிருந்தே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பி.மானவடு தெரிவித்தார்.

சிலாவத்துறையில் 50 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா


சிலாவத்துறையில் 50 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா


-ஜமாஅத்தே இஸ்லாமி தகவல் பிரிவு-
குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸின் அனுசரனையில் மன்னார்  மாவட்டத்தில் அமைந்துள்ள சிலாவத்துறையில் 50 வீடுகள் நிர்மாணிப்பு பணியை ஆரம்பித்து வைக்குமுகமாக  அடிக்கல் நாட்டுவிழா  30.09.2012 அன்று நடைப்பெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ யாகூப் யூசுப் அல் அதீகி அடிக்கல் நாட்டு விழாவை ஆரம்பித்து  வைத்தார்.
இவ்விழாவிற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிப்புக்குரிய ஹூசைன் பாரூக் மற்றும் முத்தாலி பாவா பாரூக், முசலி பிரதேச சபை தலைவர் டபிள்யூ.எம்.எஹியன், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவைப்பிரிவு செயலாளர் மௌலவி எம்.அப்துர் ரஹ்மான அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த  வீட்டுத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேற ஆரம்பித்துள்ள அகதி மக்களின் நலனுக்காக அமைக்கப்படுகின்றன. மேலும் இலங்கை ஜமா- அத்தே இஸ்லாமி குவைத் நாட்டின் நிவாரண குழுவுடன் இணைந்து நனத்தன் பிரிவுக்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் 42 வீடுகளை  ஏற்கனவே கட்டி முடித்து பொதுமக்களின் பாவனைக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் தவறாளிகளை நீதவான் முன் கொண்டு செல்லத் தயங்காதீர்கள் – அப்துல் அஸீஸ்


சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் தவறாளிகளை நீதவான் முன் கொண்டு செல்லத் தயங்காதீர்கள் – அப்துல் அஸீஸ்

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
இலங்கையில் சிறுவர் உரிமை தொடர்பில் பரந்த நோக்குடன் சர்வதேச தராதரங்கள் சட்டங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசும், சமூகமும் சிறுவர்களின் அதி உயர் நலனுக்காக அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடற்பாடு இருக்கின்றதென்பதை அனைவர்களும் உணரவேண்டும்.
எமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது எமது நாட்டிற்கு மட்டுமின்றி எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஓர் பிரச்சினை.
அதிகமான சிறுவர்கள் இம்சைகளினால் பாதிக்கப்பட்டிருந்தும் இதற்குப் பொறுப்பான குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றம் மூலம் தண்டனை பெறுகின்ற வீதம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினர்கள் இதனை பெரிதுபடுத்தாமல் மூடிமறைக்கின்றனர். எனவே சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் தவறாளிகளை, நீதவான் முன் கொண்டு செல்லத் தயங்காதீர்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் துறைநீலாவனை வித்தியாலயத்தில் இளைஞர், யுவதிகளுக்கான செயலமர்வின் போது வளவாளராகக் கலந்து கொண்ட அஸீஸ் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டில் சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருப்பது மட்டும் போதுமாகாது. அவைகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் மக்கள் கலாச்சார விழுமியங்கள், பெறுமானங்கள் உலக அடையாளம் என்பவற்றை தனதாக்கி கொள்கின்றார்கள; சிறுவர் உரிமை சாசனம் ஒரு நாட்டின் அரசானது சட்டத்தினுடாகவும், நிர்வாகத்துறை நடவடிக்கைகள் மூலமாகவும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பிற்கு அமைய, அரச கொள்கை மூலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விதப்புரைக்கு அமைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களது அபிலாசைகள், தன்னாதிக்கம் தொடர்பாக ஊக்கமளித்தல் வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அரசு உடல், உளரீயான அபிவிருத்தி, ஒழுக்கம், சமயம், சமூக தேவைப்பாடுகள் போன்ற அபிவிருத்தியினை மேம்படுத்துவதுடன, துஷ;பிரயோகம் போன்றவற்றிலிருந்;து அவர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் உறுதிப்படுத்துகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  மன உளைச்சல் பிரதான காரணியாகும். கணிப்பின்படி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் 33 வீதமும் பெண்களும் 25 வீதமும்,  ஆண்களும் இந்த நிலைக்கு உட்படுகின்றார்கள். இது சமூகத்திற்கும்     மற்றும் உடல் உள ரீதியான சுகாதாரத்திற்கும் எவ்வளவு பாரியதொரு பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. சிறுவர்களைக் கண்கானித்தல், பாதுகாத்தல், இவர்களது அபிவிருத்தி தொடர்பான இலக்குகளில் உறிய நிறுவனரீதியான ஒழுங்குகள், சட்ட ஏற்பாடுகள் போன்றவை திருப்தியளிக்கக் கூடியவையாகும்.
சர்வதேச ரீதியில் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவர் உரிமை சமவாயம் முதலிடத்தைப் பெறுகிறது. இச்சமவாயத்தில் வாழ்வதற்கான உரிமை, அபிவிருத்திக்கான உரிமை, பாதுகாப்புக்கான உரிமை, பங்குபற்றும் உரிமை என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு;ள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர்; விவகார அமைச்சின் தலைமையின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸ் திணைக்களம், சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவைகளுக்கு சிறுவர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அறிவுறுத்தல்கள்; வழங்கப்பட்டுள்ளன.
சிறுவர் உரிமைகளை மீறக்கூடிய சிறுவர் துஷ்பிரயோகம் அதனால் அவர்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுகின்ற இழப்பு, பாதிப்பு தொடர்பாக அனைவர்களும் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடங்களாக சிறுவர் துஷ்பிரயோகம் கடல் போன்று விசாலத்தன்மை கொண்டது. இதன் பாரதூரத்தை நாம் நாளாந்தம் கேள்விப்படுகின்ற முறைப்பாடுகளில் இருந்து கண்டுகொள்ளலாம்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 2010ம் ஆண்டில் 57560 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்;டுள்ளது. அதில் 334 முறைப்பாடுகள் சிறுவர்களைக் கொடுமைப்படுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாகவும, 47 முறைப்பாடுகள் சிறுவர் வஞ்சக்கடத்தல் தொடர்பாகவும் (வயதெல்லை வரையறுக்கப்படாமல்) 1854 முறைப்பாடுகள் கற்பழிப்பு அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பாகவும் காணப்படுகின்றது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பிரதிபலனாக தேவையற்ற கருத்தரித்தல்,பாலியல் தொற்று நோய்கள்,  பாலியல் குற்றம்களை செய்வதிலுள்ள ஆர்வம் போன்றவைகளும் நீண்ட காலத்தில் உளரீதியான விரக்தி மனப்பாங்கு, தற்கொலை போன்றவற்றையும் பாலியல் துஷபிரயோகத்துக்குட்பட்ட சிறுவர்களில் வெகுவாகக் கண்டறியப்பட்டுள்ளன என அஸீஸ் மேலும் தெரிவித்தார்.

ஹொங்கொங் படகு விபத்தில் 36 பேர் பலி


ஹொங்கொங் படகு விபத்தில் 36 பேர் பலி

ஹொங்கொங்கிற்கு அப்பால் இரு பயணிகள் படகுகள் மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தபட்சம் 36 பேர் பலியாகியுள்ளனர்.

வாணவேடிக்கையை பார்வையிடுவதற்காக சுமார் 120 பேரை ஏற்றிச்சென்ற படகுகளிலொன்று நேற்று திங்கட்கிழமை இரவு லமா தீவுக்கருகில் விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து படகின் அரைவாசிப்பகுதி நீரில் மூழ்கத் தொடங்கியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

28 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சுமார் 100 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் 8 பேர் பின்னர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 மீட்பு நடவடிக்கைகள் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம்  கடலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட 100 பேர் 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் 9 பேர்  ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் ஹொங் கொங் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், ஹொங் கொங்கின் கடல்வழியில் வழமையை விட போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

3 மாத சம்பளம் வழங்குவதாக அறிவித்தமையால் விரிவுரையாளர்கள் வேலைக்கு திரும்புவர்: உயர் கல்வியமைச்சு


(ஒலிந்தி ஜயசுந்தர)


வேலைக்கு திரும்பும் விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்குவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளமையால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைக்கு திரும்புவரென உயர் கல்வியமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

அமைச்சரின் அறிவித்தலை நிராகரித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின் தாம் வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளதாக கூறியுள்ளது.

அமைச்சின் முன்மொழிவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளபோதிலும், சிலர் மனம் மாறி வேலைக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிடுமெனவும் அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜயந்த நவரட்ன கூறினார்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் தொடர்பிருப்பதாகவும் இந்தளவில் அவர்களின் 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரியபீட மகாநாயக்கர்களின் இணக்க முயற்சிகளை தாம் ஆதரிப்பதாகவும் ஏனைய முயற்சிகள் தோல்வியடையின் மகாநாயர்களுடன் பேசுவதற்கு திகதி குறிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் செலவை அதிகரிக்கவும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கென விசேட கல்விச்சேவையொன்றை உருவாக்கவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முன்மொழிவுகள் தெளிவில்லாமலிருப்பதாகவும் இவை தமது கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லையெனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. 

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை


எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை
===================================

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.

அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலகநாடுகளும் , அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல் அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.

ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித்தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

site counter