
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பதுளை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அங்கு சென்றுள்ள ரவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில்,
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன. அவ்வாறானதொரு குற்றப்பிரேரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதமும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளது.
இதன்போது முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இல்லாமல் செய்வதற்காகவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நாம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் அண்மைக்காலமாக பதுளையிலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இதில் ஒரு அங்கமாவே பார்க்கவேண்டியுள்ளது
பதுளையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் கொண்டுசென்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பதுளையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.