( சி.எம்.ரிக்பாத்)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய மகன் ஆகிய மூவருக்குமே கண்டி மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க மரணத் தண்டனை விதித்துள்ளார்.
ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதான முதியன்ஸலாகே செனரத் பண்டா என்பவர்; கூரான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்கானப்பட்ட அதே தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து கோவிந்தசாமி (வயது 54), அவரது மனைவியான இந்திராணி வைத்தியலிங்கம் (வயது 49) மற்றும் அவர்களுடைய மகனான கோவிந்தசாமி ஆகிய மூவருக்குமே மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்குற்றச்சாட்டு தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதன் பின்னர் வழக்கு கண்டி மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
இவ்விசாரணைகளின் போது மனுதாரர் தரப்பில் அரச சட்டத்தரணி உதய கருணாதிலக்கவும் எதிராணிகள் சார்பில் சட்டத்தரணி மர்வின் சில்வாவும் ஆஜராகி வந்தனர்.
இருதரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளின் பின்னர் வழக்கு விசாரணைகள் முடிவுற்றதையடுத்து இது குறித்து ஆராய்ந்த நீதவான் கொலைக்குற்றச்சாட்டில் மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மூவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.