அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 22 அக்டோபர், 2012

கிணற்று நீர் வரி அறவீட்டுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு



'கிணற்று நீர் பயன்பாட்டுக்கு  வரி அறவிடுவது தொடர்பில்   எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  நீர்ப்பாசன அமைச்சு எதிர்ப்பதாகவும்  இந்த தீர்மானத்தை அதிகாரிகள் மீளாய்வு செய்ய வேண்டும்' என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவரத்தன கூறியுள்ளார்.

நீர்பாசன அமைச்சின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்பதால் நீர்வழங்கல் அமைச்சர் என்ற வகையில் இது போன்ற ஒரு வரிக்கு ஆதரவாக நான் ஒரு போதும் கையுயர்த்த மாட்டேன்' என அவர் கூறினார்.

சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசில், கோட்டாபய பங்கேற்ற நிகழ்வில் கடமை தவறிய இரு பொலிஸார் இடைநிறுத்தம்



பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் பாதுகாப்பு வழங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் இருவர் தங்களின் கடமையை அலட்சியம் செய்தமைக்காக அவ்விருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 07 இலுள்ள 120 வருடங்கள் பழமை வாய்ந்த குதிரைப் பந்தயத்திடல் பார்வையாளர் கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறக்கப்பட்ட தினத்தன்று பாதுகாப்பு கடமையில் சரியாக ஈடுபடாத இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையே கறுவாத் தோட்ட பொலிஸார் இன்று திங்கட்கிழமை இடைநிறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது மோட்டார் சைக்கிள் ஒன்று மேடைக்கு அருகில் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

"இதன்போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மோட்டார் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால் கடமையில் அலட்சியம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்" என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. (சுபுன் டயஸ்)

இலங்கை பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த 150 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!



சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் 150 பயணிகள் உயிர் தப்பினர்.


சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (21) மாலை 3.40 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது.

இதில் மொத்தம் 150 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

விமானம் புறப்பட தயாரான போது, விமானி கடைசியாக விமானத்தை பரிசோதனை செய்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.

உடனடியாக இதுபற்றி விமான நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் தாமதமாக இலங்கை புறப்பட்டு செல்லும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

விமானி உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 150 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

5 மாகாணங்களாக குறைக்க திட்டம்: மனோ ஆரூடம்



இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் இல்லாது ஒழித்து, நாட்டிலுள்ள  ஒன்பது மாகாணங்களின் எல்லைகளையும்  மீளமைத்து ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.  இந்த இலக்கை முன் வைத்தே அரசாங்கம் இன்று காய் நகர்த்துகிறது. முடியுமானால் அரசாங்கத்தின் உத்தியோகாரபூர்வ பேச்சாளர் இந்த தகவலை மறுக்கட்டும். அதேபோல் அரசில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் இதற்கு பதில் சொல்லட்டும்" என அவர் குறிப்பிட்டார்.

13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுவே இவர்களது திட்டமாகும். இதன் முதற்கட்டமாக 13ஆவது திருத்தமும்  அதையோட்டிய மாகாண சபைகளும் ஒழிக்கப்படும். இரண்டாம் கட்டமாக நாட்டின் மாகாணங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு ஒன்பது மாகாணங்கள் ஐந்து மாகாணங்களாக குறைக்கப்படும்.

இதன் மூலம், எந்த ஒரு மாகாணத்திலும்  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கமாட்டார்கள். மூன்றாவது கட்டமாக அனைத்து நிர்வாக மற்றும் தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்க முடியாத நிலைமை உருவாக்கப்படும்.

இன்று வட மாகாணத்தில் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மாகாணங்களுக்கு உள்வரும் மாவட்டங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படும்.

அனைத்து மாகாணங்களுக்கும் கடல் எல்லை அவசியம் என்ற காரணத்தை காட்டி மாகாண எல்லைகளை மீளமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மாகாண மற்றும் மாவட்டங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு  அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் சனத்தொகை குடிபரம்பல் மாற்றி அமைக்கப்படும். 

இதுதான்  தேசிய இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வாகும். இந்த இலக்கை நோக்கியே அரசாங்கம் பயணம் செய்கிறது. இதன் முதல் கட்டமாகவே  13வது திருத்தத்திற்கும் மாகாண சபைகளுக்கும் எதிரான பிரச்சார இயக்கத்தை அரசாங்கம் இன்று தனது பங்காளி கட்சிகள் மூலமும் பாதுகாப்பு செயலாளர் மூலமும் ஆரம்பித்துள்ளது.  

site counter