கிழக்கின் முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதற்கும் முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் அப்துல் மஜீதையும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரையும் நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மு.கா.தலைவர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அறிய வருகின்றது.
இதன் மூலம் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பெருமையை நஜீப் அப்துல் மஜீத் பெற்றுக் கொள்கிறார்.
அதேவேளை கிழக்கின் புதிய ஆட்சி அமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் பிரகாரம் மு.கா. சார்பில் அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகிய இருவரும் இந்த அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தமிழ் சமூகத்தின் சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சிங்கள சமூகத்தின் சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தவிசாளர் பதவிக்கும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை பிரதி தவிசாளர் பதவிக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.