அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 31 அக்டோபர், 2012

திவிநெகும விடயத்தில் மு.க. தலைவர் மற்றும் செயலாளர் விசாரிக்கப்பட வேண்டும்!


குற்றத்துக்கு உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும் விசித்திரம்!
கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விசாரிக்கவென அதன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளமை குற்றத்துக்கு உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும் விசித்திரம் நடை பெறுகிறது என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது, திவிநெகும சட்ட மூலத்தை காலையில் எதிர்த்த ஸ்ரீலங்கா மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாலையில் ஆதரித்தனர். இதற்குக் காரணம் கேட்டபோது ஆதரிக்கும்படி தலைவர் குறுஞ்செய்தி அனுப்பியதனாலேயே தாம் ஆதரித்ததாக கட்சியின் குழுத்தலைவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. பின்னர் தலைவரால் குறுஞ்செய்தி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியானதை தொடர்ந்து தாம் அவ்வாறு கூறவில்லை என கட்சிக் குழுத்தலைவர் அறிவித்தார்.
கட்சியின் செயலாளர், பிரதி செயலாளர் இது பற்றி கடுமையான ஆவேசம் தெரிவித்ததன் காரணமாக இது பற்றி ஆராய்ந்த கட்சியின் உயர் சபை இவற்றை விசாரிக்கவென கட்சித்தலைவர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை மிகப் பெரிய வேடிக்கையாக உள்ளது.
இது விடயத்தில் தலைவரின் அனுமதியை பெற்றே வாக்களித்ததாக சொல்லப்படுவதால் தலைவரும் இவ்விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தாம் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என அவர் இன்னமும் மறுக்கவில்லை. இந்த நிலையில் குற்றஞ்சாற்றப்பட்டவர்களை விசாரிக்கும் நடுவர் விசாரணை குழுவின் தலைவராக தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளதானது மக்களையும் தமது கட்சி உயர்பீடத்தையும் கேலி செய்வதாக உள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் நீதிபதி முன்பாக அவரது மகன் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரனை வந்த போது அந்த நீதிபதி விசாரணையிலிருந்து விலகிய செய்தியை கண்டு வியந்த உலகம், குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரனைக்கு தலைமை தாங்கும் நிலையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் கண்டு தலை குணிகிறது.
உண்மையில் இந்த விடயத்தை விசாரித்து உண்மையை காண வேண்டுமாயின் கட்சி சாரா உலமாக்கள் தலைமையில் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும், கட்சியின் செயலாளர், மற்றும் தலைவரும் விசாரிக்கப்பட வேண்டும். அதன் மூலமே இது விடயத்தில் திருகு தாளத்தை மேற்கொண்ட சமூகத்துரோகிகள் யார் என அடையாளம் காணமுடியும். இதனை விடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட தலைவரே விசாரணைக் குழுத்தலைவராக இருப்பது திருடர்களை விசாரிக்க திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட தலைவரே தலைமை வகிப்பது போன்றதாகும்.

மட்டு.கல்லடி பாலம் இன்றிரவு மூடப்படும்: வீதி அபிவிருத்தி சபை


மட்டக்களப்பையும் அம்பாறை மாவட்டத்தையும் இணைக்கும் பிரதான பாலமான கல்லடி பாலம் இன்று புதன்கிழமை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மூடப்படவுள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



புதிய பாலத்தின் நிர்மானப்பணிகள் நடைபெற்றுவருதாலேயே இப்பாலம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபையும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகவே அமைகின்றது!



-குகன்-
மத்திய அரசாங்கம் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு முயற்சித்து வரும் வேளையில், கிழக்கு மாகாண சபையின் சில நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு துணைபோகும் வகையில் அமைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் விசனம் வெளியிட்டுள்ளார்.
செங்கலடி பதுளை வீதியிலுள்ள கிராம மக்களுக்கு விஜயம் செய்த அவர் சமகால அரசியல் நிகழ்வு குறித்து மக்களுக்கு விளமக்களிக்கையிலே இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
அவர் குறித்த சந்திப்பில் தொடர்ந்து விளக்கமளிக்கையில்!
கிழக்கு மாகாண சபை முதலாவது அமர்வு இடம்பெற்ற 48 மணிநேரத்துக்குள் திவிநெகும சட்ட மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் இந்த சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை துணைபோனது.
அண்மைக் காலங்களில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வின் அடித்தளமான 13ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பாகவே அமைகின்றது. மத்திய அரசாங்கத்திலே பலம் பொருந்திய அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூட 13ஆவது அரசியலமைப்பு நீக்கப்பட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். கீறல் விழுந்த இசைத்தட்டு போல் 13ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்து ஆளும்தரப்பு சில அரசியல்வாதிகளிடம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
போருக்குப் பின்னர் ஜனாதிபதி இந்தியா போன்ற நாடுகளுக்கு அளித்த உத்தரவாதத்தில் 13 பிளஸ் அதிகாரப் பகிர்வை அதாவது அதற்கு மேல் வழங்குவதாகக் கூறியிருந்தார். ஆனால் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் 13பிளஸ் அல்ல அது இப்போ மைனஸ் ஆகும் வகையில் திவிநெகும சட்டம் அமைகிறது.
அதாவது அதிகாரங்களைக் குறைக்கின்றது. அடுத்த கட்டம் அதனை இல்லாமல் செய்வதற்கு ஒரு சாரார் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அமைகின்றன. தமிழ் மக்கள் தங்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கும் வேளையில் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் ஏற்கனவே கொடுத்த அதிகாரங்களைக் கூட அரசாங்கம் பறித்தெடுக்க முற்படுகின்றது.
அண்மையில் அமைச்சர் தினேஸ் குணவர்தன கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளை மாகாண சபைக்கு வழங்கியமையானது மத்திய அரசாங்கம் விட்டதவறு மாகாண சபைகளுக்கு வழங்கியமையானது மத்திய அரசாங்கம் விட்ட தவறு மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்தது என்று கூறியிருந்தார். இந்த கருத்து மாகாண சபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களைக் கூட எதிர்காலத்தில் பறிப்பதையே காட்டுகின்றது.
மத்திய அரசாங்கம் இருக்கும் அதிகாரங்களை உள்ளுராட்சி மற்;றும் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கிறது. திருகோணமலை மீன் சந்தை நகர சபையின் அனுமதியோ, ஆலோசனையோ இன்றி மத்திய மீன் பிடித்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. திருகோணமலை ஆதார வைத்தியசாலை மத்திய அரசினால் பொறுப்பேற்கப்படவுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்தியை காரணம் காட்டி மாகாண சபை அமைச்சர்கள் வாரியம் இதற்கு துணைபோகிறது.
தற்போது கிழக்கு மாகாண சபை முதலாவது அமைச்சரவை வாரியம் இந்த கைங்கரியத்தை செய்துள்ளது. அப்படி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வது என்றால் மாகாண சபைக்கு முடியாதா? இவற்றை உற்று நோக்கினால் கிழக்கு மாகாண சபையும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகவே அமைகின்றது என்றார்.

கோவிலுக்கும், பள்ளிக்கும், தேவாலயங்களுக்கு போவதற்கு எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்!


மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார். அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். அதிலும் இஸ்லாமிய சகோதர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கால கட்டத்தில் பெருநாள் பரிசு என இதை செய்து தந்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அனுராதபுரம் மல்வத்து ஓய மத்ரஸா கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது;
நாடு முழுக்க அங்கே, இங்கே என்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து சிங்கள பெளத்தம் என்ற புதிய கொலைவெறி மதம் பரவி வருகிறது. இது கருணையையும், அன்பையும், அஹிம்சையையும் போதிக்கும் பெளத்த மதம் இல்லை. சிங்கள பெளத்தம் இலங்கையில் புதிதாக வேரூன்றி வளர்ந்து வரும் மதம்.
இது இந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அஸ்வர் எம்பி உட்பட அரசாங்கத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் எம்பீக்களும் நன்கறிவர். இந்த புதிய மதம்தான், நாடு முழுக்க இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வணக்க ஸ்தலங்களை தாக்கி அழிக்கின்றது என்பது இன்று சிறு குழந்தையும் அறிந்துள்ள உண்மை.
இந்த மதவாதிகள் அரசாங்கத்துக்கு உள்ளேதான் இருக்கிறார்கள். அல்லது அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறார்கள். வெளியே இல்லை. இத்தகைய சம்பவங்கள் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை நாம் எதிர்த்து நிறுத்தவேண்டும். அல்லது எங்கள் மதங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டி வரும். கோவிலுக்கும், பள்ளிக்கும் தேவாலயங்களுக்கும் போவதற்குகூட, நாம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்.
எனவே, இந்த இன-மத வாதத்தை வந்த பின் அல்ல, வரும்போது அல்ல, வருமுன், அனைத்து மனிதநேய சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டும். எங்களுடன் சேர்ந்து எதிர்க்க முடியாவிட்டால், அஸ்வர் எம்பி போன்றவர்கள் உள்ளே இருந்தபடியாவது எதிர்க்க வேண்டும். தமது தலைவரை அஸ்வர் எம்பி வானளாவ புகழ்வதில் எமக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது. அது அவரது கடமையாக இருக்கலாம். ஆனால், அவருக்கு தனது சமூகத்தை நோக்கிய கடைமையும் இருக்கிறது. எனவே அஸ்வர் எம்பி போன்ற தமிழ் பேசும் எம்பீக்கள், தமது தலைவரை புகழ் பாடுவதுடன் சேர்த்து இந்த இன-மத தீய சக்திகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படியும், அவருக்கு எடுத்து சொல்லவேண்டும்.

site counter