அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

'துப்பாக்கி' தவறுக்கு பிராயச்சித்தம்; முஸ்லிமாக நடிப்பாராம் விஜய்



துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அறிவித்துள்ளார் அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்துள்ளன. நபிகள் நாயகத்தை அவமதித்த ஹொலிவூட் திரைப்பட விவகாரத்தில் இந்த அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல நகரங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன.

இதே நிலை துப்பாக்கி திரைப்படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் விஜய் ஆகியோர், அதிரடியாக முடிவொன்றை அறிவித்துள்ளனர்.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் நேற்று சென்னையில் சந்தித்த இயக்குநர் முருகதாஸ், தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர். காட்சிகளை நீக்கவும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, கருத்து வெளியிட்டுள்ள விஜயின் தந்தையும் இயக்குனருமாக எஸ்.ஏ.சந்திரசேகரன், 'என் மகன் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. ஜாதி, மத வேறுபாடுகளே அவனுக்கு இல்லை.

இந்த திரைப்படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம். இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் ஒரு திரைப்படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார்' என்றார்.


துப்பாக்கி படக்குழுவினர் முஸ்லிம்களிடம் பகிங்கர மன்னிப்பு-


சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் கதையும் காட்சிகளும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விதத்தில் அமைந்ததை அறிந்து, தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் கொதித்தனர். இதன் காரணமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என விவாதித்த சமுதாயத் தலைவர்கள்,
 முதலில் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதத்தில் படக்குழுவினரை தொடர்பு கொண்டு, திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாட்டை செய்ய வேண்டினர். இதன் அடிப்படையில் (14-11-2012) எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் 20 பேர் துப்பாக்கி திரைப்படத்தை பார்த்தனர்.இதன் அடிப்படையில் இதுபற்றி மேல் நடவடிக்கைகளுக்காக இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு இன்று சென்னையில் கூடியது. இக்கூட்டத்தில் திரைப்படத்தின் கதை, காட்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஏக மனதாக கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.





1. திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட தவறான காட்சிகளை முழுமையாக நீக்க வேண்டும்.

2. படக்குழுவினர் நடந்த இந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


இந்த இரண்டு நிபந்தனைகளையும் படக்குழுவினர் ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து அமைப்புகளும் இத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை திரைப்படக் குழுவினரிடம் பேச்சுவார்த்தையின் மூலம் தெரிவிப்பதற்கு 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பக்ருதீன், ஆகியோரை உள்ளடக்கிய இக்குழு இன்று மாலை துப்பாக்கி படக்குழுவினரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் துப்பாக்கி திரைப்படத்தை எதிர்ப்பதற்கான காரணங்களையும், அத்தகைய காட்சிகளையும் தெளிவாக தலைவர்கள் விளக்கினர். இதன் உண்மைத் தன்மையையும், எதார்த்தத்தையும் உணர்ந்து கொண்ட படக்குழுவினர் மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டனர். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குப்பின் பத்திரிக்கையாளர்களை அந்த இடத்திலேயே சந்தித்த படக்குழுவினர் நடந்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர். அதோடு தவறான அந்த காட்சிகளை தாங்கள் நீக்கப் போவதாக அறிவித்தனர். அத்தோடு முஸ்லிம்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லுகிற படங்களை தாங்கள் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்தனர். வரும் காலத்தில் முஸ்லிம்களின் தோழனாக விஜய் நடிப்பார் என அவரது தந்தை அறிவித்தார். இதன் மூலம் கடந்த நான்கு நாட்களாக துப்பாக்கி திரைப்படத்தைப் பற்றி நடந்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதுவரை முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்களை விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்கள் நடித்த, மணிரத்னம் போன்றவர்கள் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் எதிர்ப்பு ஒற்றுமையுடன் வெளிப்படாததால் எதிர்ப்பின் பலனை முஸ்லிம்கள் பெறவில்லை. இப்போது ஓரணியில் நின்று ஒற்றுமையுடன் போராடியதால் முஸ்லிம்களின் நிபந்தனைகளை ஏற்கவேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது முஸ்லிம்கள் கற்க வேண்டிய முக்கிய பாடமாகும்.

இதன் மூலம் வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் தங்களது திரைப்படத்தில் இடம்பெற்றால் ஏற்படும் சூழ்நிலைகளை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் இனிமேலாவது வராது என்று எதிர்பார்ப்போம்.

வாழ்க முஸ்லிம்களின் ஒற்றுமை! வெல்வோம் நமது உரிமைகளை!

90 மாணவர்கள் வைத்தியசாலையில்



அரிப்பு, குமட்டல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்றும் 90 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலங்கொடை வெலிகேபொல ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போதே ஆரம்ப பிரிவு மாணவர்கள் இவ்வாறான உபாதைகளுக்கு முகம்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  ஒவ்வாமை காரணமாக கம்பளையை சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

10 மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி மீண்டும் திறப்பு!


10 மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்துடன் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய அதிபராக ஜனூர்டீன் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திரலால் அம்பேவத்தவினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
இலங்கை தொழில்நுட்பக் கல்விச் சேவையின் 3ஆம் தர அதிகாரியான இவர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பல வருடங்கள் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றினார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது. கடந்த 10 மாதங்களாக இயங்காமல் இருந்த தொழில் நுட்பக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்துடன் நேற்று திறக்கப்பட்டது.
தொழில் நுட்பக் கல்விச் சேவையில் இல்லாத ஒருவர் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய நிலையில், தொழில் நுட்பக் கல்விச் சேவையை சேர்ந்த ஹசன் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது.
அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையில் கடந்த வாரம் அமைச்சில் இடம்பெற்ற நல்லிணக்க பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை தொழில்நுட்பக் கல்வி சேவையின் அதிகாரியான ஜனூர்டீனை அதிபராக நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் நேற்று கடமையை பொறுப்பேற்றார். அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி மூடப்பட்ட நிலையில் அதில் கடமைபுரிந்த உத்தியோகத்தர்கள் அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு போன்ற தொழில் நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாக கடமை புரிந்து வந்தனர்.

சிங்களப் பெண்களே..! அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள்:- மேர்வின்


சிங்களப் பெண்களிடம் அதிகளவான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களான சிங்களப் பெண்களிடம் இந்தக் கோரிக்கையை நான் விடுத்துள்ளேன். கூடுதலான பிள்ளைகளை பெற்றெடுக்குமாறு நான் கோரியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது மகனுக்கும் லம்போகினி கார் வாங்கிக் கொடுப்பேன். எனது மகன் லம்போகினி காரை விரும்பினால் அதனை நான் வாங்கிக் கொடுப்பேன்.

கிரிக்கெட் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏன் மோட்டார் கார் பந்தயக்காரர்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது.

பந்தயக் கார்கள் மட்டுமன்றி, பந்தய விமானங்களை செலுத்தக் கூடியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டம் பல்வேறு நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நானும் பந்தயக் கார் செலுத்துவேன், என்னுடன் எவரேனும் மோத விரும்பினால் மோதலாம் என அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

நாட்டில் இன்று மீண்டும் சிவப்பு மழை - உடனடியாக மருத்துவ ஆய்வும் ஆரம்பம்


பொலன்நறுவை, மனம்பிட்டிய பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை  சிவப்பு மழை பெய்துள்ளது. இதேவேளை செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்தில் நேற்று சிவப்பு மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

செவனகல மற்றும் மன்னம்பிட்டி பகுதிகளில் பெய்த சிவப்பு மழை தொடர்பில் மருத்துவ ஆய்வு நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. ஆய்வுகளுக்கான நீர் மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அணில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் நிலைமை எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மன்னம்பிட்டி பகுதியில் இன்றும் செவனகல பகுதியில் நேற்றும் பெய்த இந்த சிவப்பு மழைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்திலும் அண்மையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதாகவும் அதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கூறினார்.

உம்ராவுக்கு செல்வோரும் முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்!



-அஸ்ரப் ஏ சமத்-
உம்ரா கடமையை நிறைவேற்ற மக்கா செல்வோரும் முஸ்லிம் சமய திணைக்களத்தின் பதிவு செய்தே செல்ல வேண்டும். இவர்களை கூட்டிச் செல்லும் முகவர்களும் திணைக்களத்தில் பதியப்படல் வேண்டும். இது சம்பந்தமாக அடுத்த வாரம் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்படும் என்று சிரேஸ்ட அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.
அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இவ்வருடம் ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக 6245 போ் முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 3500 போ் இவ்வருடம் சென்று விட்டனர்.
2013 ஆம் ஆண்டுக்குச் செல்வோருக்கான பதிவு 3501 ஆம் இலக்கத்தில் இருந்து ஆரம்பமாகும்.
இவ்வருடம் 2800 பேருக்கே ஹஜ் செல்லுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த்து. ஆனால், எமது செல்வாக்கு மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவராலயத்தின் ஒத்துழைப்பினால் மேலும் 500 பேருக்கு விசா கிடைத்தது.
இவர்கள் ஹஜ் பயண தங்குமிட கட்டனத்திற்காக முகவர்களுக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ருபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என சொல்லியிருந்தோம். ஆனால், சில முகவர்கள் 5, 6, 7 இலட்சம் அறிவிட்டுள்ளனர். சில பதிவு செய்தவர்கள் அந்தப் பதிவுகளை 50 அல்லது 1 இலட்சம் ருபாவுக்கு விற்றுள்ளனர்.
இவ்வாறு கூடிய பணம் செலுத்தியவர்கள் எழுத்து முலமாக திணைக்களத்திற்கு முறையிட முடியும். இதுவரை எவ்வித முறைப்பாடும் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை. அவ்வாறு யாராவது முறையிட்டால் அவர்களை இடை நிறுத்த முடியும்.
அறபு நாடுகள் நோன்பு காலத்தில் இலவசமாக வழங்கும் ஈத்தம் பழத்திற்கு அரசு வரி அறிவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இது வரியல்ல vat & Pal இது அத்தியவசியமாக எந்தப் பொருளையும் இறக்குமதி செய்வதென்றால் இதனைச் செலுத்தியாகவே வேண்டும். இதனை திணைக்களமே செலுத்துகின்றது. இப் பணம் அரசுக்கே செல்கின்றது.
அடுத்த வருடம் (2013) ஹஜ் கடமை நிறைவேற்றுவருக்கு முகவர்களாக அரசாங்க திணைக்களம் ஊடாக செயற்படுவதற்கு என முஸ்லிம் அமைச்சர்களுடனும் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் பௌசி மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நவவி; முஸ்லிம் திணைக்களத்தின் கட்டிடத்தை அரசே நிர்மாணிக்கின்றது. இக்கட்டிடத்தை நிர்மாணிக்க எந்தவொரு நாட்டில் இருந்தும் பணம் கிடைக்கவில்லை. திரைசேரி 2011 இல் 129 மில்லியன் ருபாவும் 2012 இல் 144 மில்லியன் ருபாவும் இம்முறை பஜட்டில் 180 மில்லியன் ருபாவையும் ஒதுக்கியுள்ளது என்றார்.

காஸா-இஸ்ரேல் மோதல்: 15 பலஸ்தீனியர்கள், 3 இஸ்ரேலியர்கள் பலி!


-MJ
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இதுவரைக்கும் 15 பலஸ்தீனியர்களும், 3 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்களுள் ஹமாஸ் இயக்கத்தின் கொமாண்டர் அகமட் ஜபாரி என்பவரும் உள்ளடங்கியிருக்கின்றார்.
புதன்கிழமை காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய குடியேற்ற தொடர்மாடி ஒன்றில் விழுந்ததால் 3 இஸ்ரேலியர்கள் உடன் பலியாகி இருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இன்று காலை இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் காஸாவில் இடம்பெற்றன. இதில் சிறுவர்கள், குழந்தைகள் உட்பட மேற்படி 15 பேர் பலியாகி இருக்கின்றனர்.
‘நாங்கள் மேற்கொண்டு எதனையும் செய்வோம்’ என இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாகு கர்ஜித்திருக்கின்றார்.
இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை எகிப்தின் ஜனாதிபதி அகமட் முர்ஸி காஸாவிற்கு சமாதான விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மண்முனைப்பற்றில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு!



மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலைய திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை ஆகியோர் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளதாவது;
மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலையமொன்றை திறப்பதற்கு தனியார் வர்த்தகரொருவர் தொடர்ந்தும் முயற்சிகளையும் அதற்கான நடவடிக்கைகளையுமெடுத்து வருவது பற்றி இப்பிரதேச மக்களினாலும், பொது அமைப்புகளினாலும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆறாவது மதுபான விற்பனை நிலையமொனறு திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் சில வாரங்களுக்கு முன்பு ஆர்பாட்ட பேரணியொன்றை நடாத்தி பிரதேச செயலாளரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் மகஜர் கையளித்ததையும் தாங்கள் அறிவீர்கள்.
குறித்த விடயம் தொடர்பாக கடந்த வருடம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த ஆண்டு மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு இந்த பிரதேசத்தில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பதில்;லை என தீர்மானங்கள் எடுக்கப்பட்டதையும் இவ்வேளையில் சுட்டிக் காட்டுகின்றோம்.
மேலும் இந்த பிரதேசம் கடந்த கால யுத்தம், சூறாவளி, மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகின்ற இன்றைய சூழ்நிலையில் தொடர்ந்தும் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பது மது பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் அந்த பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரிலும் மண்முனைப் பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் கவனத்தில் கொண்டு புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிடப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதி மண்முனைப் பற்று பிரதேச செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரில் ‘தேசத்திற்கு நிழல்’ மர நடுகை வைபவம்!



தயட்ட செவண “தேசத்திற்கு நிழல்” மர நடுகை விழா இன்று வியாழக்கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், பிரதித் தவிசாளர் எம்.எம்.எம்.அன்சார், பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் சுலைமாலெப்பை, பிரதேச சபையின் உறுப்பினர்கள், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் தௌபீக், நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அல்ஹாஜ் Dr முனீர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், மௌலவிமார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் “நிந்தவூரை பசுமையாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சுமார் 50 மரங்கள் பிரதான வீதியில் நடப்பட்டன. பிரதான வீதியில் மரம் நடுகைக்கான அனுமதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் அல் ஹாஜ் ALM நிசார் வழங்கினார்.

site counter