அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 8 அக்டோபர், 2012

த.தே. கூட்டமைப்பு 13ஆவது சட்டத்திருத்தத்தை ௭ப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தன்


 

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படிகொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை தமிழர் இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை ௭ன்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையே தாம் நாடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, 13ஆவது சட்டத் திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இலங்கை அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் ௭ன்றும் தொடர்ந்து கூறி வருகிறது.

அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசு போதிய அக்கறை காட்டவில்லையென தமிழகத்தில் குரல்கள் அதிகமாக ௭ழுந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி செல்கின்றனர். இந்த விஜயம் தொடர்பாக இரா. சம்பந்தன் பி.பி.ஸிக்கு அளித்த செவ்வியில், 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றத் தயார் ௭ன்று அரசு கூறவில்லை, அதை அரசியல் தீர்வாக அவர்கள் முன்னிறுத்தவும் இல்லை ௭ன்று சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் குறை ந்தபட்ச அதிகாரங்களைப் பறிக்கவே திவிநெகும சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது ௭ன்றும், இந்நிலையில் அரசியல் பிரச்சினைக்கு 13ஆவது சட்டத் திருத்தம் தீர்வாகாது ௭ன்றும் அவர் குற்றம்சாட்டினார். அதேநேரம் இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பார்களா? ௭ன்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியாவுக்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை ௭ன்றும் சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சேரச் சொல்லி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தம் ஏதும் வரவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார்.

அட்டனில் இளைஞர் தற்கொலை : இலங்கை கிரிக்கெட் அணி தோற்றதன் விரக்தியா?



அட்டன் குடாஓயா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியைப் பார்த்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்த இந்த இளைஞன் வீட்டின் அறை ஒன்றின் கதவினை மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதால் ஏற்பட்ட விரக்தியில் இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் இது வரை அந்த விடயம் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

13 ஆம் திகதி ஜனாதிபதி குவைத் பயணம்


நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி குவைத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



குவைத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கோப்ரேட் டயலொக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குவைத் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது குவைத்தின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஆசிய கோப்ரேட் டயலொகின் மாநாடு கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதுடன் சுமார் ஒன்றரை வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த விஹாரைகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்; பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி!



பங்களாதேசில் பௌத்த விஹாரைகள் மற்றும் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
“பௌத்த மக்களை மட்டுமன்றி மிக நீண்ட வரலாற்றை உடைய பௌத்த விஹாரைகள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை தான் நன்கறிவேன். இந்தத் தாக்குதல் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.
தாக்குதலுக்கு இலக்கான விஹாரைகளை புனரமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. சம்பவத்தின் பின்னணி குறித்து கண்டறியப்பட்டுள்ளது” எனவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பண நோட்டுகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை!



பண நோட்டுகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை!
பண நோட்டுகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
500 ரூபா, 1000 ருபா, 2000 ரூபா, மற்றும் 5000 நோட்டுக்கள் போலியாக அச்சிடுவது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் 1000 ரூபா போலி நோட்டுக்கள் 150வுடன் மூன்று இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கந்தளாய் பிரதேச வர்த்தகர் ஒருவரினால் குறித்த நோட்டுகள் தொடர்பில் சந்தேகம் எழுத்ததை தொடர்ந்து அவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே, போலி நோட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமான இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

T-20 போட்டியில் இலங்கை கோடடை விட்டதால் இரு இளைஞர்கள் தற்கொலை!



ஹட்டன் மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் இறுதி போட்டியை பார்த்த பின்னரே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் குடாஓயா பிரதேசத்தில் 22 வயது தமிழ் இளைஞன் ஒருவர் நேற்றிரவு கிரிக்கட் போட்டியை பார்த்து விட்டு வீடு திரும்பிய நிலையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன்போது இவர் அதிக மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை குறித்த இளைஞன் தமது வீட்டின் அருகில் இருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு குறித்த இளைஞர் கிரிக்கட் போட்டியை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய தமது புதல்வர் காலை வேளையில் வீட்டில் இல்லாமை குறித்து அவரின் தாயார் தேடியுள்ளார்.
இதன் போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் இரத்த தான நிகழ்வு



-ஹப்றத்-
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு நேற்று (07) கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜ் முயற்சியுடன் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் வைத்தியர்களான எம்.ரீ.என்.சிபாய, எச்.ஏ.என்.பிரியாகெலும் மற்றும் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். தங்கவேல் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
மேலும் இந்த இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.சி.சி டுவென்டி டுவென்டியில் மேற்கிந்திய தீவுகள் சம்பியன்



சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணியானது இலங்கை அணியைத் தோற்கடித்து உலக டுவென்டி டுவென்டி சம்பியன்களாகத் தெரிவானது.

கொழும்பு ஆர்.பிரேமதான மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது ஓவரிலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, தங்களது முக்கியமான வீரரான கிறிஸ் கெயிலை 6ஆவது ஓவரில் இழந்தது. அப்போது அவ்வணி 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக 59 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும் அவ்வணி 3ஆவது விக்கெட்டின் பின்னர் தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்தது. ஆனால் மார்லன் சாமுவேல்ஸ், டரன் சமி ஆகியோர் இறுதிநேரத்தில் ஓட்டங்களைக் குவிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 137 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக 56 பந்துகளில் 78 ஓட்டங்களையும், டரன் சமி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அஜந்த மென்டிஸ் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அன்ஜலோ மத்தியூஸ் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும், அகில தனஞ்சய 3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரண்டாவது ஓவரின் முதலாவது பந்திலேயே திலகரட்ண டில்ஷானை இழந்த இலங்கை அணி அதன் பின்னர் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டத்தால் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், சங்கக்காரவின் விக்கெட்டின் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன 36 பந்துகளில் 33 ஓட்டங்களையும், நுவான் குலசேகர 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 26 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சுனில் நரைன் 3.4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், டெரன் சமி 2 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சாமுவேல் பத்ரி, ரவி ராம்போல், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார். போட்டித் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் ஷேன் வொற்சன் தெரிவானார்.

இலங்கை அணியை ஊக்குவிக்க மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த


சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மைதானத்துக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்ற நிலையில் இலங்கை அணியை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

site counter