அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 19 டிசம்பர், 2012

பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைக்கு எதிராக ஷிராணி வழக்குத்தாக்கல்



பிரதம நீதியரசர் ஷிராணி தனக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சற்றுமுன் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென பாராளுமன்றத் தெரிவிக்குழுவொன்று சபாநாயகரால் நியமிக்கப்பட்டது.
எனினும் விசாரணைகளின் இடைநடுவே தான் உரிய முறையில் நடத்தப்படவில்லையெனக் கூறி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வெளிநடப்புச் செய்தார்.
இவரைத் தொடர்ந்து தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெறவில்லையெனக் கூறி குழுவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.
எனினும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டதாகவும் இதில் 3 இல் பிரதம நீதியரசர் குற்றவாளியாக இணங்காணப்பட்டதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க த தனக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

21 ஆம் திகதி உலகம் அழியாது மாத இறுதியில் பூமியதிர்ச்சி ஏற்படும்


உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில்

எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிற்கு காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும்.

2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013 ஆம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரசாரமாகும். ஆனால், எதிர்வரும் 29 ஆம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படாது.

பூமியின் மீது 2013 இல் விண்கற்கள் விழும் என்று நான் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் எதிர்வு கூறினேன். அதன்பின்னர் இதுகுறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறு துண்டுகளாக உடைத்தெரியும் நடவடிக்கையில் இறங்கினர்.

அதேபோன்று, 2004 ஆம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவு இலங்கையில் இடம்பெறும் என்று 2002 ஆம் ஆண்டிலேயே கூறினேன். அதற்கு அமைவாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி தாக்கின.

இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முடிந்து விட்டன.

எனவே 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது. 29 ஆம் திகதி இலங்கையில் பூமியதிர்வு ஏற்படும். இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். 2019 ஆம் அமெரிக்கா, ஆரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளை சந்திக்கும் எனக் கூறினார்
.

தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இறக்காமம், வரிப்பொத்தான்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால்...


தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இறக்காமம், வரிப்பொத்தான்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் சில வேளாண்மை பூமிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதிகளில் வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொண்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடர்ந்தும் இம்மழை விடாமல் பெய்யுமாயின் இவ்வேளாண்மை பயிர்ச்செய்கையை முற்றாக கைவிடவேண்டிய நிலை வருமோ என விவசாயிகளின் மனதில் ஒரு கேள்விகுறி எழுந்துள்ளது.

தகவல் : சன்சீர்









தொழிற்பயிற்சி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்




(ஏ.எல்.நிப்றாஸ்) 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நாடெங்கும் இயங்குகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டுக்காக பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி அம்பாறை மாவட்டத்திலுள்ள 15 நிலையங்களினால் வழங்கப்படும் 60 கற்கைளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. 

இதன்படி தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிலையங்களான- நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தொழிற்சாலைக்கான மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், வானொலி தொலைக்காட்சி மற்றும் அதனோடிணைந்த உபகரணங்கள் திருத்துதல், தையல் (பெண்கள்), சாரதிப்பயிற்சி போன்ற கற்கைகளுக்கும் சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், தொழிற்சாலை மின்னிணைப்பாளர், வாகன திருத்துனர், குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர், ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், பேக்கரி தொழில்நுட்பம், மோட்டர் வைண்டிங் போன்ற பயிற்சிகளுக்கும் மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல் (பெண்கள்), ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு மின்னிணைப்பாளர், மர கைவினைஞர், அறை பராமரிப்பாளர், சமையற்காரர், உணவு பரிமாறுபவர் ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், மர கைவினைஞர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்திலுள்ள மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகளுக்கும் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும்  ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிநெறிகளுக்கு பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த மற்றும் இடைவிலகிய இளைஞர் யுவதிகள்; விண்ணப்பிக்கலாம். சில கற்கைகளை குறைந்த கட்டணத்திலும் மேலும் சில கற்கைகளை இலவசமாகவும் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சியை பூர்த்தி செய்வோருக்கு இலங்கை மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமை அடிப்படையிலான (என்.வி.கியு. மட்டம் 3 மற்றும் 4) சான்றிதழ் கிடைக்கும். அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட பயிற்சிநெறிகளின் பயிலுனர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவும் பயணத்திற்கான பருவகாலச்சீட்டும் பெற்றுக் கொடுக்கப்படும்.

விண்ணப்பங்களை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு, அல்லது 'உதவிப்பணிப்பாளர், மாவட்ட தொழிற்பயிற்சி வளாகம் பிரதான வீதி, நிந்தவூர்' என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


அமெரிக்காவில் மீண்டும் பீதி - பாடசாலைகள் மீது மர்ம மனிதன் தாக்கலாமென பரபரப்பு



அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணம் நியூடவுண் நகரில் உள்ளது சாண்டி ஹூக் தொடக்க பள்ளி. இங்கு கடந்த 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளி ஆசிரியை நான்சியின் 2வது மகன் ஆடம் லான்சா (20) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 20 குழந்தைகள், பள்ளி முதல்வர், மனநல பிரிவு ஆசிரியர் உள்பட 28 பேர் பலியாயினர். வீட்டில் அம்மா நான்சியை கொன்று விட்டு பள்ளிக்கு ஆடம் வந்து சரமாரி துப்பாக்கிச் சூடு தானும் தற்கொலை செய்து கொண் டான். 

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நியூடவுண் நகரில் இருந்த 32 கி.மீ. தொலைவில் உள்ள ரிட்ஜ்பீல்டு நகரில் உள்ள பள்ளிகளில் மர்ம மனிதன் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரிட்ஜ்பீட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. எல்லா பள்ளிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தில் பலியானவர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு - நிவாரணங்கள் தாமதம்..!




நாட்டின் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கணிப்பிட்டுள்ளது.

பதுளை - பசறை கோனகெல தோட்ட வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் பலியானர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்தனர். நேற்று குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் பிரதேசவாசிகள் இன்றைய தினமே அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 10 மற்றும் 14 வயதைக் கொண்ட ஆண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர்களின் தாய் வெளிநாடு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை கெலேபொக்க பகுதி மக்கள் தாம் தொடர்ந்தும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள போதும், இதுவரை எந்த நிவாரணங்களும் கிடைக்கப் பெறவில்லை என முறையிட்டுள்ளனர்.
.
இதேவேளை, தெல்தெனிய - துனுவில பிரதேச வீடொன்றின் மீது மண்மேடு இடிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்திருந்த 40 வயதுடைய பெண்ணொருவர் இன்று மரணமானார். மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக முன்னதாக அவரது ஐந்து வயதான குழந்தை மரணமானது.

இந்தநிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மாத்தளை - ரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட போதிகொடுவ, திக்கும்புர, மடகும்புர மற்றும் மெதவத்த ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த பகுதிகளை சேர்ந்த 500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரத்தோட்டை பிரதேச செயலாளர் பீ எம் விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாத்தளை - ரத்தோட்டை நிகோலோயா தோட்டத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்தத்தில் தொடர் குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதமடைந்தது. இந்தநிலையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்ளை வான்படையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் இயற்கையின் சீற்றம் - (பிரத்தியேக படங்கள் இணைப்பு)











Shource: Jafnamuslim






வெள்ளத்தினால் மக்கள் அவதி; ஊர் சென்று உதவுங்கள் என்று மக்கள் பிரதிநிதிகளைக் கோருகிறார் அஸாத் சாலி!


Azath

மழை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க, மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வீசுகின்ற கடும் காற்று மற்றும் அடை மழை என்பன காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பல கிராமங்களில் மக்கள் மூட்டை முடுச்சுகளுடன் சொந்த இடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்னும் சிலர் அதற்கு கூட வழியின்றி வெள்ள நீருடன் தமது வீடுகளே தஞ்சம் என்று தவித்து வருகின்றனர்.
உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபையிலும், நாடாளுமன்றத்திலும் இந்த மக்களின் பிரதிநிதிகளாக வீற்றிருக்கும் ஜாம்பவான்கள எங்கே என்று மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர். கதைகதையாக அள்ளி வீசி, வீராப்பு பேசி, மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சுருட்டி பதவிகளைத் தேடிக்கொண்டவர்களுள் ஒருவர் கூட இன்னமும் இந்த மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் வாக்குகளைச் சுருட்டுவதற்காக எமது வாசல் கதவுகளை இவர்கள்; தட்டினார்கள். ஆனால் இன்று அந்த வாசல் கதவுகளை மூட வழியில்லாமல் வெள்ள நீரின் நடுவே திறந்து வைத்து காத்துக்கொண்டிருக்கின்றோம். எமக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைச் சூறையாடிச் சென்ற இந்தப் பிரதிநிதிகள் இப்போது எங்கே என்று இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்ட்டுள்ள மக்கள், தங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுவரை அந்தப் பக்கம் தலைநீட்டக்கூட இல்லையே என்று மேலும் சீற்றம் அடைந்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் மக்களை நாடிச் செல்ல வேண்டிய நேரம் இதுதான்.
தங்களது மக்கள், வெள்ளத்திலும் காற்றிலும் அல்லலுறும்போது வெள்ள நீரும் காற்றும் நமக்கு அலர்ஜியே என்று வேறு இடத்தில் பதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பது மக்கள் பிரதிநிதிகளுக்கு அழகல்ல.
கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தமது ஏனைய வேலைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக தமது சொந்த இடங்களுக்குச் சென்று தமது அரசியல் அதிகாரம், செல்வாக்கு என்பனவற்றை முழுமையாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்து நிவாரணங்களும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என மிகவும் அன்போடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

site counter