அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 19 நவம்பர், 2012

பம்பலப்பிட்டியில் காரினுள் இருந்து சடலம் மீட்பு!


பம்பலப்பிட்டி, சமுத்ரா மாவத்தையில் கார் ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாவத்தின் பங்குதாரி மு.கா.; பஷீர், ஹரீஸ் கறுப்பு ஆடுகளா?


 

 ஜனநாயகத்துக்கு நான்கு தூண்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம், அரச நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியவையே ஜனநாயகம் என்கிற கட்டிடத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் அந்த 04 தூண்களுமாகும். இந்தத் தூண்களில் ஒன்று உடைந்து போனாலும் – கட்டிடம் காலி!
ஏற்கனவே, நாட்டில் ஊடகச் சுதந்திரம் மரணப்படுக்கையில் இழுத்துக் கொண்டு கிடக்கிறது. நாட்டின் ஆட்சியாளர்களை துணிந்து நின்று எழுதி வந்த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் பெரெற்றிகா ஜான்ஸ் – தனது இரண்டு குழந்தைகளுடன் நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டார். ஆட்சியாளர்களின் ஆயிரத்தெட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் இருந்து கொண்டுதான் இவர் எழுதி வந்தார். கடைசியில், உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில்தான் இந்த முடிவுக்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.
‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்’ எனும் சர்வதேச அமைப்பின் தரப்படுத்தலின் படி, ஊடக சுதந்திரத்தில் இலங்கை 163 ஆவது இடத்தில் உள்ளது. அதாவது 179 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இந்த மோசமான இடம் கிடைத்திருக்கின்றது. சாதாரணமாக நாளாந்தம் கொலைகளும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஈராக் போன்ற நாடுகள் இலங்கையை விடவும் ஊடக சுதந்திரத்தில் முன்னேறியுள்ள நாடுகளாக இந்த தரப்படுத்தலில் மதிப்பிடப்பட்டுள்ளதுன. குறித்த பட்டியலில் ஈராக் 152 ஆவது இடத்தில் உள்ளது.
இது ஒருபுறமென்றால், நீதித்துறையும் நாட்டில் மிகக் கடுமையான நெருக்குவாரங்களுக்கு உள்ளாகி வருவதை அண்மைக் காலங்களில் கண்டு வருகின்றோம். அதுவும், ஆட்சியாளர்களாலேயே நீதித்துறை அதிக ஆபத்தைச் சந்தித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையானது – நீதித்துறை மீதான அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய நடந்து கொள்ளாமையினாலேயே பிரதம நீதியரசரை இவ்வாறான குற்றப் பிரேரணையொன்றின் மூலம் அவரின் பதவியிலிருந்து தூக்கி வீசுவதற்கு ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையினை ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். அந்தக் குழுவில் ஆளுந்தரப்பைச் சேர்ந்தவர்களே அதிமாக உள்ளனர் என்பது கவனத்துக்குரிய விடயமாகும். பிரதம நீதியரசரை அவரின் பதவியில் இருந்து அகற்றுவதென்பது – ‘இன்றைக்கு நினைத்து நாளை முடிக்கும்’ காரியமல்ல. அதற்கு சில மாதங்கள் செல்லும். கடைசியில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இதற்குத் தேவைப்படும். அப்போது – அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கும் என்பது மிகவும் கவனிக்கப்படும்.
ஏற்கனவே, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 15 தமிழ் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இவர்களில் 07 பேர் முஸ்லிம் உறுப்பினர்கள். இந்த 07 பேரில் இருவர் மு.காங்கிரசைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றவர் எச்.எம்.எம். ஹரீஸ்.
அந்தவகையில், மு.கா.வைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமைதான் இன்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களுக்குரிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது.
இந்த நிலையில், தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் – பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்ட விவகாரத்தினை முஸ்லிம் காங்கிரஸ் ‘போட்டுப் புதைப்பதற்கு’ எடுத்த எத்தனங்கள் எவையும் பலிக்கவில்லை. அதனால், கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு தமது உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து விட்டு, மு.கா. தலைவரும் – செயலாளரும் நாடகமொன்றினை ஆடினார்களல்லவா? அதைப் போல இந்த விடயத்திலும் – மு.கா. தலைமை நாடகமொன்றுக்குத் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது.
அதாவது, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் மு.கா.வின் நிலைப்பாடு குறித்தோ, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டமை தொடர்பிலோ மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இதுவரை மூச்சுக்கள் விடவில்லை. இதேவேளை, கட்சியின் செயலாளர் ஹசனலியாரோ திவிநெகும சட்ட மூலத்தில் நடந்து கொண்டமை போன்று, இந்த விடயத்திலும் ‘ஒளித்து விளையாட’த் துவங்கியுள்ளார். ‘பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கட்சியின் தலைவரும், தானும் கையொப்பமிடவில்லை’ என்பதை ஊடகங்களுக்கு திரும்பத் திரும்ப அழுத்திக் கூறிவருகின்றார் ஹசனலியார்! இதனூடாக – தலைவர் ஹக்கீமையும், தன்னையும் இந்த விவகாரத்தில் புனிதர்களாகக் காட்டிக் கொள்வதோடு, கையொப்பமிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளாகப் பார்க்குமாறும் செய்துள்ளார்.
உண்மையில், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹரீஸ் ஆகியோர் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் ஏன் கையொப்பமிட்டார்கள். கட்சித் தலைவர் ஹக்கீம் இதற்குப் பின்னணியில் எவ்வாறு இருந்துள்ளார் என்பதையெல்லாம் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான் இந்த விவகாரத்தில் திருவாளர் பொதுஜனங்களுக்கு ஓரளவாவது தெளிவு கிடைக்கும்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பம் இடுவதற்கு முன்னர், அது தொடர்பில் மு.காங்கிரஸ் 03 கூட்டங்களை நடத்தியுள்ளது. முதல் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமை தாங்கினார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓரிருவரைத் தவிர, ஏனையோர் அந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தனர்.
இதற்கு முதல் நாள் – அதாவது, 29 ஆம் திகதியன்று, கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. அதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு மு.கா. தலைவர் ஹக்கீமிடம் ஜனாதிபதி கேட்டிருக்கின்றார். ஆனால், தான் நீதியமைச்சராக இருப்பதால் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையெழுத்திட மாட்டேன் என்று ஹக்கீம் கூறியதாக அறிய முடிகிறது. இருந்த போதும், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுத் தருவதாக ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளார்.
எனவே, 30 ஆம் திகதி நடந்த கூட்டத்தில், அதற்கு முந்தைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டம் குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் – தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி தன்னிடம் விடுத்த வேண்டுகோள் பற்றியும் ஹக்கீம் கூறினார். எனவே, சிரேஷ்டத்துவம் குறைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவது, பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பம் இட வேண்டும் என்று ஹக்கீம் கூறினார். அதிலும், தௌபீக் எம்.பி. கட்டாயமாக கையொப்பம் இட வேண்டும் என்றார் ஹக்கீம்.
இதன்போது ஹரீஸ் எம்.பி. ஒரு விடயத்தை முன்வைத்தார். அதாவது, ‘எங்களின் சமூகப் பிரச்சினைகள் என்று வரும் போது அரசு அலட்டிக் கொள்வதில்லை. மு.காங்கிரசுக்கும் உரிய இடம் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும் போது, அரசாங்கத்துக்கு இவ்வாறான விடயங்களில் மு.கா. ஏன் உதவ வேண்டும் என்பதை ஜனாதிபதி விளங்கப்படுத்துதல் வேண்டும்’ என்றார். இவ்விடயம் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டது. 31 ஆம் திகதி மு.கா. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்குமாறு ஜனாதிபதி நேரம் வழங்கினார்.
இதற்கிணங்க, அலறி மாளிகையில் 31 ஆம் திகதி அந்தச் சந்திப்பு இடம்பெற்றது. மு.கா. தலைவர் ஹக்கீம், செயலாளர் ஹசனலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், தௌபீக் மற்றும் அஸ்லம் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். இதன்போது, பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். சவாலான முறையில் நீதித்துறை செயற்படும் போது, அரசாங்கத்தினைக் கொண்டு நடத்துவதிலுள்ள கஷ்டங்கள் குறித்து ஜனாதிபதி பேசியதாகத் தெரிய வருகிறது.
இதன்போது, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் பேசியுள்ளனர். குறிப்பாக, தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இது தொடர்பில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பிலான மு.கா.வின் மூன்றாவது கூட்டம் நவம்பர் 01 ஆம் திகதி நடைபெற்றது. ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஹரீஸ் மற்றும் பஷீர் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாக இருந்தது. எனவே – ஜனாதிபதிக்கு உறுதியளித்தமைக் கிணங்க மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டே ஆகவேண்டியிருந்தது. ஆனால், மு.கா.வின் வேறு நாடாளுன்ற உறுப்பினர்கள் எவரும் அந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருக்க வில்லை. இந்த நிலையில்தான் பஷீர் மற்றும் ஹரீஸ் ஆகியோர் உடனடியாக நாடாளுமன்றம் சென்று பிரேரணையில் கையொப்பமிட்டதாகத் தெரிய வருகிறது.
நடந்த விடயம் இப்படியிருக்க, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் தவிசாளர் பஷீர் மற்றும் ஹரீஸ் எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்டமை தொடர்பில் மு.கா. தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசனலி ஆகியோர் ஒளித்து விளையாடுவதற்கு முற்படுதல் என்பது, நயவஞ்சகமான செயற்பாடாகும் என்கிறார் மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்!
பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. பிரதம நீதியரசர் ஷிராணிக்கு எதிராக அரச தரப்பினர் முன்வைத்துள்ள பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை சிறுபிள்ளைத் தனமானவை. அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால், பிரதம நீதியரசர் ‘நல்ல பிள்ளை’யாகவே இருந்திருப்பார் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
இதேவேளை, பிரதம நீதியரசர் தொடர்பில் இன்னுமொரு கருத்தும் உள்ளது. ‘ஷிராணி ஒன்றும் அத்துணை புனிதமான நீதி தேவதையல்ல. இவரின் கணவருக்கு தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பதவியினை ஆட்சியாளர்கள் வழங்கியபோது – அதை மகிழ்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு வகையில், ஷிராணிக்கு ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட லஞ்சம்தான் அவரின் கணவருக்கு வழங்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கி தலைமைப் பதவியாகும்’ என்கின்றனர் இன்னுமொரு தரப்பினர்.
இந்த நிலையில், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதொன்றும் பெரிய பாவமல்ல. இது அரசியல். எனவே, அரசியலை அரசியலாகவே கையாள வேண்டியுள்ளது என்கின்றனர் பிரேரணைக்கு ஆதரவான அரசியல்வாதிகள். ஆனால், இந்த ஆட்சியாளர்களின் சர்வதிகாரப் போக்கின் இன்னொரு செயற்பாடுதான் பிரதம நீதியரசர் ஷிராணி மீதான நடவடிக்கையாகும். எனவே, ஆட்சியாளர்களின் இந்தப் போக்குக்கு ஆதரவு வழங்குவதானது – ஜனநாயகத்துக்கு மேலும் மேலும் ஆபத்தாக அமைந்து விடும் என்கின்றனர் குற்றப் பிரேரணைக்கு எதிரானவர்கள்.
இவ்வாறானதொரு சிக்கலான சேற்றுக்குள்தான் – மு.கா.வும் தனது கால்களை விட்டுள்ளது. தமிழ் சமூகத்தின் அரசியல் கட்சியாக த.தே.கூட்டமைப்பு பார்க்கப்படுவது போல, முஸ்லிம்களின் அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் பார்க்கப்படுகிறது. அதனால்தான், மு.காங்கிரசின் செயற்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. அதாஉல்லாவோ, டக்ளஸ் தேவானந்தாவோ பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியமையானது ஆச்சரியமானதொரு விடயமே அல்ல! இன்னொரு வகையில் சொன்னால், குறித்த குற்றப் பிரேரணையை மேற்படியாளர்கள் எதிர்த்திருந்தால்தான் அது – ஆச்சரியமான செய்தியாகி இருக்கும். எனவே, இந்த விடயத்தில் மு.கா.வை ஊடகங்கள் குறிவைத்துத் தாக்குகின்றன என்று, மு.கா. தரப்பினர் சிலர் கூறுகின்ற குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவையாகும்.
பிரதம நீதியரசர் விவகாரத்தில் மு.காங்கிரஸ் ஆகக்குறைந்தது – பக்கம் சாராததொரு நிலைப்பாட்டினை எடுத்திருக்கலாம் என்கிற குரல்கள் மு.கா.வுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால், அரசோடு ஆட்சியில் இருந்து கொண்டு, மணிக்கூட்டுக்குள் அசைந்து கொண்டிருக்கும் ‘பென்டியுலம்’ போல் மு.கா.வால் செயற்பட முடியாது என்கிறார் மு.கா.வின் முக்கிய ‘தலை’யான ஒருவர்! அரசோடு இருந்தால் – அரசுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும். இல்லையென்றால் – ஆட்சியை விட்டு வெளியேறி எதிர்த்தரப்பில் உட்கார வேண்டும். அதாவது, அடித்தால் மொட்டை, வைத்தால் குடுமி என்பதுதான் சரியான நிலைப்பாடு என்கிறார் அவர்!
சரி, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதில்லை என்கிற முடிவினை மு.கா. தலைமை எடுத்து விட்டால் மட்டும் – மற்றைய எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்குக் கட்டுப்பட்டு விடுவார்களா என்ன? ஆட்சியாளர்களுக்கு தமது விசுவாசத்தினைக் காட்டுவதற்காக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குத் துரோகம் செய்தால் என்ன செய்வது? ஆக, வழமையோல் கட்சியைக் காப்பாற்றுவதற்காக, பிரதம நீதியரசருக்கு எதிரான விடயத்திலும் ஆதரவளிப்பதென்கிற முடிவை மு.கா. தலைவர் எடுத்திருக்கலாமல்லவா? என்று மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் கூறிய பதில் கவனத்துக்குரியது. அதாவது, ‘பிழைகளை அங்கீகரிப்பதென்பது கட்சியைக் காப்பாற்றுவது என்று ஆகிவிடாது. தவிரவும், மு.காங்கிரஸ் என்பது அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அர்த்தமாகியும் விடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவி விடாமல் பார்த்துக் கொண்டிருப்பது – கட்சியினைக் காப்பாற்றி விடுவதாகாது. மு.காங்கிரஸ் தலைவரின் முடிவே மு.காங்கிரசின் முடிவாகும். ஆண்டாண்டு காலமாக அப்படித்தான் இருந்து வருகிறது. எனவே, பிரதம நீதியரசர் விடயத்திலும் மு.கா. தலைமை வெட்டொன்று துண்டிரண்டு எனும் வகையிலான முடிவொன்றினை எடுத்திருத்தல் வேண்டும். சிலவேளை, அரசுக்கு விருப்பமற்ற முடிவாகக் கூட அது இருக்கலாம். அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் – மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரெல்லாம் கட்சியின் தீர்மானத்துக்கு மாறு செய்து விட்டு, ஆட்சியாளர்களுடன் இணைகிறார்கள் என்பதை சமூகம் கண்டு கொள்ளும். பிறகு அவ்வாறானவர்களின் எதிர்கால அரசியலை சமூகம் தீர்மானிக்கும். எனவே, தனது தடுமாற்றத்துக்கும், இயலாமைக்கும் மு.கா. தமைமையானது இன்னுமின்னும் – கட்சியைக் காப்பாற்றும் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது’ என்றார் அந்த முக்கியஸ்தர்.
கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஜனநாயகத்தின் கால்களை (தூண்களை) உடைத்து விடும் பாவத்தில் மு.கா.வுக்கும் பங்கு உள்ளது என்பதை மட்டும் மறுத்து விட முடியாது.
பாவத்துக்கு இரண்டு விதமான பரிகாரங்கள்தான் உள்ளன. ஒன்று தண்டனை. மற்றையது பிரார்த்தனை!
-தம்பி@சுடர்ஒளி-

கிழக்கு மாகாணத்திலே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்களுடைய ஹோட்டல்களாம்!



கிருஸ்ண பரமாத்மாவின் தர்ம யுத்த கீதை உபதேசத்தை இனப்படுகொலை புரிந்த அதர்ம யுத்தம் மேற்கொண்டவர்களை வைத்து கொச்சைப்படுத்தப்பட்மைக்கு சீ.யோகேஸ்வரன் எம்.பி தனது கண்டனத்தை சபையில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிருமிச்சை என்னும் இடத்தில் 1000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு அங்கு கடற்படையினரின் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டி அரசின் இராணுவ வீடமைப்புத் திட்டத்தின் பின்னணியில் தமிழர் விகிதாசாரத்தை குறைக்கும் சதித்திட்டம் உள்ளதாகவும் கூறினார்.
பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான 6ம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
2013ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண மக்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டமைப்பில் அரசில் நம்பிக்கை கொண்டுள்ளமையை சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதற்கு கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவு அமைவதாக அவர் எண்ணப்பாங்கு இருந்திருக்கின்றது. உண்மையிலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் நியாயமாகவோ அல்லது நேர்மையாகவோ நடைபெறவில்லை. அதற்கு மாறாக அரசாங்கம் இதில் வெற்றிகொள்ளும் வகையினை அச்சுறுத்தல் சதி முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும் கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 11 உறுப்பினரை தெரிவு செய்ததன் மூலம் அரசாங்கத்தின் நம்பிக்கை இன்மையை சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரே ஒரு தமிழ் உறுப்பினர் முன்னால் கிழக்கின் முதலமைச்சர் அரசாங்கம் வாக்கெண்ணும் நிலையத்தில் மேற்கொண்ட சதிமுயற்சியால் தெரிவாகி இருக்கின்றார். அதாவது தெரிவு செய்யப்பட்ட பன்னிரண்டு தமிழ் உறுப்பினர்களின் ஒருவர் மாத்திரமே அரசாங்கத்தால் பெற முடிந்திருக்கின்றது.
பொதுவாக வடக்கு கிழக்கு மாகாணம் கடந்த கால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், தமிழ் குடும்பங்கள் இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் இதுவரை அவர்களுக்கான அடிப்படை வசதிகளையேனும் இந்த அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை. அவர்களுக்கான வீடுகளோ, அடிப்படை வசதிகளோ, மீள்குடியேற்ற கொடுப்பனவுகளோ அல்லது பாதிப்பு நஷ்ர ஈடுகளோ முற்றுமுழுதாக வழங்கப்படாத நிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட அந்த மக்களை கைவிட்டு இன்று இராணுவத்திற்கு அதாவது பாதுகாப்பு படையினருக்கு வீடமைக்கின்ற செயற்றிட்டத்திற்கு இவ்வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருகின்றது. இது எந்த வகையில் நியாயமானது.
இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50000 வீடுகள் அமைப்பதற்காக நிதியை இரண்டு வருடங்களுக்கு முன் வழங்கியிருந்தது. இதிலே இன்றும் 49000வீடுகளை இவ்வரசாங்கம் கட்டிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் சார்பாக இந்த மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எந்தவொரு வீடுகளையும் இதுவரை கட்டிக்கொடுப்பதற்கு அவர்கள் முன்வரவில்லை. அதுசார்பாக இந்த வரவு செலவுத் திட்டத்திலும் எதுவித நிதியும் ஒதுக்கப்படவும் இல்லை. 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் இம்மீள்குடியேற்ற மக்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதனால் மிகவும்; மனவேதனையடைகின்றேன். மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வன்னியில் மழை, வெள்ளம், வெயில் போன்றவற்றால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பெரும் அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை சகலரும் அறிவீர்கள். அத்தோடு வாழ்வாதார ரீதியிலும் மிகவும் கஷ்ரப்படுகின்றனர். இந்நிலையில் அவர்களை கவனியாது அவர்கள் பற்றி சிந்தியாது பாதுகாப்பு படையினருக்கு வீடுகள் அமைக்கின்ற திட்டத்தையும் அவர்களுக்கு வசதிகளை எற்படுத்துகின்ற நிலைமையையுமே இந்த வரவு செலவு திட்டம் கொண்டிருக்கின்றது.
2006ம் ஆண்டு பிற்பகுதியிலே யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மக்கள் படுவான்கரை என்னும் இடத்திலே மீள்குடியேற்றப்பட்டார்கள். ஆனால் அந்த மக்களுக்கு கிட்டத்தட்ட 20000க்கு மேற்பட்ட வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இதுவரை அவை அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
அதுமாத்திரமா! மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வழங்கப்படுகின்ற ரூபாய் 25,000.00 கிட்டத்தட்ட 29,851 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு ரூபாய் 746 மில்லியன் தேவையென மாவட்ட செயலகம் கூறுகின்றது. அது கூட இன்னும் வழங்கப்படவில்லை. அதுதவிர அங்கவீனர்கள், இறந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவு கூட இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வகையில் மீள்குடியேற்றம் சம்பந்தமாக இந்த வரவு செலவுத் திட்டத்திலே எதுவும் குறிப்பிடாமலிருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது. எனவே இதுசார்பாக இச்சபை கவனஞ்செலுத்த வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் இங்கு நோக்கும் போது அரசாங்கம் படையினருக்கு வீடு அமைக்கின்ற செயற்றிடத்திலே இன்னுமொரு சதித்திட்டத்தை கொண்டிருக்கின்றது. என்னவென்றால் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கின்ற படையினர்களுக்கு அங்கே வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டமொன்றைக் கொண்டு வந்திருப்பதானது, அங்கு தமிழர்களுடைய குடித்தொகையை குறைத்து, சிங்கள மக்களுடைய குடித்தொகையை கூட்டுவதற்காக அரசாங்கம் செய்கின்ற ஒரு சதிமுயற்சியே என்பதை நான் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சைப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணிகள் இதற்காக பெறப்பட்டு இருக்கின்றது.
இந்தக் காணிகளில் கடற்படையினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்களை அங்கு குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் குடித்தொகையை குறைத்து, சிங்கள மக்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சதி முயற்சியின் அடிப்படையில் அங்கு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுப்புத் தரப்பினர்களுக்கு வீடு அமைத்து கொடுக்கப்படும் என்ற திட்டத்தின் கீழ் தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பொதுவாக இன்று சிந்தித்துப் பாருங்கள்! சம்பூரில் இடம்பெயர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இன்று கிளிவெட்டி, கட்டபரிச்சான் பகுதிகளிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலே வாழ்கின்றார்கள். இந்த மக்களுக்கு அண்மைக் காலமாகக் கொடுத்து வந்த உணவுப் பொருட்களைக் கூட தற்பொழுது நிறுத்திவிட்டார்கள். இதனால் அவர்கள் வாழ்வாதார ரீதியாக மிகவும் கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் தற்போது இவர்களிடத்தில் இல்லை.
அதுதவிர அம்பாறை மாவட்டத்திலே கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், சாகமம் போன்ற பகுதிகளிலே மக்கள் தாங்களாகவே போய் குடியேறியிருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, தாங்களாகவே குடியேறிய அந்த மக்களுடைய அடிப்படை வசதிகளைக் கூட இந்த அரசாங்கம் இன்று வரை செய்து கொடுக்கவில்லை. இதுசார்பான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான எந்தத் திட்டத்துக்கும் இவ்வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்படவில்லை.
அதுமாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வன்னிப் பிராந்தியத்திற்கு சென்று கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1032 குடும்பங்கள் அண்மையில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்திருக்கின்றனர். எனினும் இவர்களை மீள்குடியமர்த்துவதற்கோ அல்லது அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கோ எந்த விதமான நடவடிக்கையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தில் அது சார்பாக எந்த செயற்பாடும் உள்வாங்கப்படவில்லை. ஆகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படாமல் இருப்பதை நான் இந்த சபையிலே சுட்டிக்காட்டுவதுடன், அதனை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த கால யுத்த சூழலில் வடக்கு கிழக்கில் உள்ள பல தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. எனினும் இன்றுவரை அந்த தொழிற்சாலைகள் புனரமைக்கப்படவில்லை. இவற்றைப் புனரமைத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு தொழில் வழங்கும் மனப்பாங்கோ, வெற்றிடமோ இந்த அரசிடம் இல்லை. அங்கு கைத்தொழிற்சாலைகள் எதையும் உருவாக்கும் நிலைமை இல்லை. இன்று அந்த மண்ணில் வாழுகின்ற மக்கள் தொழில் இன்மையால் மிகவும் கஷ்ரப்படுகின்றார்கள். இன்று அங்குள்ள பல இளைஞர்கள் தொழில் இன்மை காரணமாகவும் வடக்கு கிழக்கிலே நிலவுகின்ற அச்சுறுத்தல் காரணமாகவும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.
அதுமாத்திரமின்றி வடக்கு கிழக்கு மண்ணிலே மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களுக்கான வாழ்வாதார ரீதியில் எற்படுகின்ற கஷ்ர நிலைமை காரணமாக தென்மாகாணங்களில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தொழில் தேடிச் செல்கின்றார்கள். அங்கு அவர்கள் தொழில் செய்கின்ற போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இவ்வாறான துன்பகரமான செய்திகள் எங்களுடைய காதுகளை அடிக்கடி எட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் வடக்கு கிழக்கு மண்ணிலே ஆடைத் தொழிற்சாலையை ஏற்படுத்தி மீள்குடியேற்றத்தினால் கஷ்ரப்படுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தை கூட்டும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை எற்படுத்தாமையே எனக்கூற விரும்புகின்றேன். இவ்வரவு செலவு திட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பற்றி குறிப்பிட்டாலும் கூட அது வடக்கு கிழக்கு மண்ணை சென்றடைவது மிகக்குறைவு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நாட்டின் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதாக இங்கு கூறப்படுகின்றது. ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இதுவரை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவதாக பேச்சளவிலும் எழுத்தளவிலும் தெரிவித்த பொழுதிலும் கூட இன்றுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ அதிகாரிகளின் ஆட்சியே நிலவுகின்றது. இராணுவம் அங்கு குவிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றது. இதுவரை இவ் அரசாங்கம் தமிழ் மக்கள் சார்பாக கூறிய எவ்விடயத்தையும் அமுல்படுத்தவில்லை, இனியும் அமுல்படுத்துமா? என்பது சந்தேகம் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எனவே இவ்விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வரவு செலவு திட்டத்தில் சமய நிறுவனங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்காக நன்றி தெரிவிக்கின்றேன். இருப்பினும் கடந்த யுத்த சூழலில் வடக்கு கிழக்கில் 1471 இந்து ஆலயங்கள் பாதிக்கப்பட்டது. மத விவகாரங்கள் அமைச்சு அவ் ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இலட்சம், ஐம்பதாயிரம் என்ற வகையில் வழங்கி உதவி செய்திருந்தது. இன்றுவரையில் பல இந்து ஆலயங்கள் பாதிப்பிலிருந்து மீளவில்லை. ஏனெனில் ஆலயங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி நேரடியாக ஆலயங்களுக்கு வழங்கப்படாமல் மாவட்ட செயலகத்தினூடாகவும், பிரதேச செயலகத்தினூடாகவும் வழங்கப்படுவதனால் அவை சிறு தொகை நிதியை சுவீகரித்துவிட்டு நீண்ட நாட்களின் பின்னரே மிகுதி நிதியை அவ்வாயலங்களுக்கு வழங்குகின்றனர். இவ்வாறு தாமதமாக நிதி வழங்கப்படுவதால் ஆலயப் புனரமைப்பு வேலைகள் தாமதப்பட்டுக் கொண்டிருக்கின்றதென்பதை இச்சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதற்கு மாறாக திட்டமிட்ட வகையில் வடக்கு கிழக்கு மண்ணிலே பௌத்த ஆலயங்கள் தாபிப்பது தமிழர்களின் பூர்வீக, ஆன்மீக இருப்பிடங்கள் சுவீகரிப்பதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது வடக்கு கிழக்குக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் வடக்கு கிழக்கி;ல் தமிழர்களின் பூர்வீக வாழிடங்களில் பௌத்தர்கள் வாழாத பகுதியில் பௌத்த விகாரையை அமைக்கும் செயற்பாட்டுக்கும், இந்துக்களின் பூர்வீக இடங்களை தொல்பொருளுக்கு உட்படுத்தி பௌத்த செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கைக்குமே வழிவகுக்க உள்ளது என்பதை இதில் கூறிவைக்க விரும்புகின்றேன். சென்ற வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையுத் கூறி வைக்க விரும்புகின்றேன்.
திரு.ரவிக்குமார் என்பவர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்து பௌத்த சங்கம் ஒன்றை நிறுவி அச்சங்கத்தின் மூலம் ‘ஆசியாவின் சிங்கம்’ என்னும் பெயரில் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சஞ்சிகையில் இந்து சமயம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்துக்களின் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதத்திலே கீதை உபதேசமானது கிருஷ்ணபகவான், அருச்சுணன் போன்றோர் கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் வெளியீடு செய்துள்ள ‘ஆசியாவின் சிங்கம்’ என்னும் சஞ்கையிலே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் முகத்துக்கு எமது மேதகு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்களுடைய முகத்தையும், அருச்சுணனின் முகத்துக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுடைய முகத்தையும் பொருத்தி காட்டியிருக்கின்றார்கள்.
இது இந்து சமயத்தை துஸ்பிரயோகம் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். ஏனெனில் கிருஷ்ண பரமாத்மா இறைவன். அது மாத்திரமல்ல மகாபாரதத்திலே நடைபெற்றது தர்ம யுத்தம், ஆனால் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு நடைபெற்றது தர்ம யுத்தமல்ல அது ஒரு இனத்தை அழிக்கின்ற அதர்ம யுத்தம். ஆகவே இங்கு அதனைச் சித்திரிப்பதையிட்டு வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வாறு சித்திரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வரசாங்கம் சமர்ப்பித்துள்ள இந்த வரவு செலவுத் திட்டத்திலே பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பல பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளன. அதை நான் வரவேற்கின்றேன். ஆனால் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே சில துறைகளுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்யப்பட்டபொழுது அவர்கள் தங்களுடைய ஆதரவாளர்கள் இல்லை என்ற ரீதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே இந்த பட்டதாரிகளுக்காக நியமனங்கள் அரசாங்க கட்சியின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் வழங்கப்படுகின்றனவா? என்று கேள்வியை உண்டுபண்ணியிருக்கின்றது. ஆகவே படித்து விட்டு வேலையற்றிருக்கின்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்படுகின்றபொழுது எந்தவித பாரபட்சமுமின்றி துறைசார் நியமனங்களை வழங்கப்பட வேண்டுமென இந்தச் சபையிலே கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். ஒரு நாட்டின் கௌரவத்துக்கு அதுதான் உகந்ததாக அமையுமென கூறிக் கொள்கின்றேன்.
அரசாங்கம் சுற்றுலாத்துறையின் மூலம் இந்த நாட்டுக்கு பெருமளவு வருமானம் கிடைக்கின்றதெனவும் சுட்டிக்காட்டி, சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் முக்கிய நோக்கம் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால் கிழக்கு மாகாணத்திலே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களைப் பார்க்கும் பொழுது அவற்றுள் சில அமைச்சர்களுடைய ஹோட்டல்களாகவும், பிரதி அமைச்சர்களுடைய ஹோட்டல்களாகவும், சில அரச ஆதரவாளர்களுடைய ஹோட்டல்களாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் அந்த மண்ணிலே சுற்றுலாத்துறையிலே என்ன செய்கின்றார்கள்? அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் தாம் தங்களது ஹோட்டல்களை வைத்திருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனவந்தர்களுக்கு ஹோட்டல்களை அமைப்பதற்கு அவர்கள் இடங்கொடுக்கவில்லை. இதனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் தனவந்தர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த சுற்றுலாத்துறை சார்பாக நடவடிக்கை எடுப்பதனால் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமையளிக் கவேண்டுமென்று இந்த சபையிலே நான் கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் காலதாமதப்படுத்தி வருகின்றது. அதை வழங்கும் நோக்கம் அதற்கு இல்லையென்று தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இன்று அதற்கு மாறாக அரசியல் தீர்வு சார்பாக ஒவ்வொரு செயற்பாடு வரும் போதும் தமிழ் மக்களின் புலனைத் திசைதிருப்புவதற்காகவும், வெளிநாடுகளின் எண்ணப்பாங்கை மாற்றுவதற்காகவும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒன்று முன்பு நடைபெற்ற ‘கிறிஸ் மனிதன்’ அதன் பிற்பாடு உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலம், அதற்குப் பின் இப்போது 13வது திருத்தச் சட்டம் இவற்றையெல்லாம் மாற்றுவதும் திருத்துவதும் என்ற செயற்றிட்டங்களை கொண்டு வந்து மக்களின் புலன்களை மாற்றியமைக்கின்றது.
ஆகவே ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் என்ற வகையில் நியாயமானதொரு அரசியல் தீர்வை அந்த மக்களுக்கு வழங்க முன்வரவேண்டுமென்று இந்த சபையிலே நான் வேண்டிக் கொள்கின்றேன். உண்மையிலே ஒரு நாட்டில் யுத்தம் முடிந்தால் அந்நாட்டில் அதன் நிமிர்த்தம் கைது செய்யப்பட்டவர்கள் மனிதாபிமான முறையில் விடுதலை செய்யப்படுவர். ஆனால் ஜே.வி.பீயினர் மேற்கொண்ட கிளர்ச்சியை அடக்கிய அரசு அவர்களை சிங்கள மக்கள் என்ற வகையில் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்திருந்தது.
ஆனால் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாழும் உறவுகளை மனிதாபிமான முறையில் விடுதலை செய்யத் தவறியுள்ளதுடன், அவர்களைச் சிறையில் வதைத்து கொலை செய்யும் படலத்தையும் ஆரம்பித்துள்ளது. இதனை நிறுத்த வேண்டுமென்று இச்சபையில் வேண்டுகின்றேன். அதுமாத்திரமல்ல கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்த சூழல்களில் கடத்தப்பட்டவர்கள் சார்பாக எந்த நடவடிக்கைகளையும் இன்றும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
அதனைக் கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கையெடுக்கவில்லை. 2008ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பில் மீள்குடியேறியற்றப்பட்ட பின்பு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் சார்பாக ஆராய்வதற்கோ அல்லது அவர்கள் சார்பாக நடவடிக்கை எடுப்பதற்கோ இவ்வரசு முன்வரவில்லை. ஆகவே அரசு கொண்டுவந்திருக்கின்ற இந்த வரவு செலவு திட்டமானது இந்த நாட்டின் மக்களாகிய தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை என்பதை இச்சபையில் கூறிக் கொள்கின்றேன்.

site counter