தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 16 வருடங்களாக மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமும் அதனோடிணைந்த மாவட்ட நிர்வாக அலுவலகமும் செயற்பட்டு வந்தது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் அயராத முயற்சியால் ஒரு அரச நிறுவனத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் கரையோர பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. அதன்படி, அம்பாறை நகருக்கு வெளியே கரையோர பிரதேசத்தில் அமையப்பெற்ற ஒரிரு மாவட்ட நிர்வாக அலுலகங்களில் ஒன்றாக இது செயற்பட்டு வருகின்றது.
இம்மாவட்டத்தின் அரச நிர்வாக நகராக திகழும் அம்பாறைக்கு இவ் அலுலகத்தை மாற்றிவிட சில சக்திகள் நீண்டகாலமாக முயற்சி செய்து வந்ததாக அறிய முடிகின்றது. இந்நிலையிலேயே சிங்களப் பிரதேசமான அம்பாறை நகருக்கு மாற்றிவிட இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
இது குறித்து பிரதேசவாசிகளும் நலன்விரும்பிகளும் விசனம் தெரிவித்துள்ளனர். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களிலேயே அதிகளவான பயிற்சி நிலையங்களும் மாணவர்களும் இருக்கின்ற நிலையில் மிகக் குறைந்த நிலையங்களையும் மாணவர்களையும் கொண்ட ஒரு பிரதேசத்திற்கு மாவட்ட அலுவலகத்தை கொண்டு செல்ல முனைவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவ்விடயம் அரசியல்வாதிகள் பலரதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Source: Jaffna Muslim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக