அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 25 அக்டோபர், 2012

3,400 ரூபாவை கூட பெற முடியாத 18 இலட்சம் குடும்பங்கள் உள்ளன: பஸில்



மிகக் குறைந்த மாதாந்தச் செலவினமான ரூபா 3400ஐக் கூட பெற்றுக்கொள்ள முடியாத 18 இலட்சம் குடும்பங்கள் இலங்கையில் உள்ளன என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'நாட்டில் நிலவும் இவ்வாறானதொரு வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்' என்றும் குறிப்பிட்டார். (அஜித் மதுரப்பெரும) 

13வது திருத்த சட்டம் அவசியம்; திவிநெகுமவும் தேவை; முதலமைச்சர் வேட்பாளர் நானே!


13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கம் அவசியம் என்பதுடன், திவிநெகும சட்டமூலம் அமுல்படுத்தப்படுவதும் அவசியம் என ஈ.பி.டி.பி. தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் இரத்துச் செய்யப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிலர் குறுகிய அரசியல் லாப நோக்கத்தில் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் அரசியல் கட்சிகள் உரிய பிரயோசனத்தை பெறவில்லை.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தானே போட்டியிட போவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இரு சிறுமியர் வல்லுறவு; சாரதி கைது


 (சி.எம்.ரிக்பாத்)

இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர் செய்த முறைப்பாடுகளை அடுத்தே குறித்த சந்தேக நபரை தெல்தெனிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அம்பானையை சேர்ந்த இந்த நபர்,  10 மற்றும் 12 வயதுகளையுடைய சிறுமிகளையே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம்?



கிழக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்ட போதிலும்  அதிகாரிகள் மட்டத்திலேயே விரைவில்  மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி செயலகத்திலிருந்தே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஜனாதிபதியின் பேச்சாளராக கடமையாற்றி வரும் பந்துல ஜயசேகர இடமாற்றப்பட்டு அவரது வெற்றிடத்துக்கு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வரும் மொஹான் சமரநாயக்க நியமிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றும் அனுராதா கே. ஹேரத் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் புதிய பேச்சாளர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பேச்சாளரான பந்துல ஜயசேகர டெய்லி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் தமிழில் பேசுகின்றனர்!


நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தமிழில் பதிலளித்தார்.

ஆனால் சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க கூறினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ.எச்.எம்.அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது. இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என தெரிவித்தார்.
அதேவேளை மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த கருணாதிலக்க கூறினார்.

13ஆவது திருத்தத்தை நீக்கும் நோக்கம் இல்லை: அரசாங்கம்

13ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

அரச ஊழியர்களுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் 2,535 முறைப்பாடுகள்



(சுபுன் டயஸ்) 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள 2,535 முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை அரசாங்க ஊழியர்களுக்கு எதிரானவையாக உள்ளன எனவும் இது அரசாங்க சேவையில் ஊழல் கணிசமாக அதிகரிப்பதை காட்டுகின்றது எனவும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளில் 130 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு அதில் 69 முறைப்பாடுகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்குகளில் 32 முடிவுக்கு வந்துவிட்டன. இதில் 17 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டன.

பிரதேச செயலகங்கள், பொலிஸ் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த ஆணைக்குழு, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரி.ஜயவர்தனவுக்கு எதிராக தரக்குறைவான எண்ணெய் இறக்குமதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

தென்மேற்கு கரை புவித்தட்டில் பிளவு



நாட்டின் தென்மேற்கு கரை புவித்தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பதனால் நிலநடுக்கத்தின் தாக்கமும் பாதிப்புகளும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டு உபகுழுவின் தலைவர் சகபந்தே இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார்.

கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்து தெரிவிக்கையில்,

'நாட்டின் தென்மேற்கு கரைக்கு அப்பால் 500 - 700 கிலோ மீற்றர் தொலைவில், இந்தோனேசிய - அவுஸ்திரேலிய புவித்தட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், புதிய புவித்தட்டு ஒன்று உருவாகி வருகிறது. இதன்காரணமாக, எதிர்காலத்தில் நிலநடுக்கத்தினால் இலங்கையில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் 1615ஆம் ஆண்டு பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எதிர்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட நகர மையத்தின் அருகே நிலநடுக்கம் நிகழுமானால், தற்போதைய அபிவிருத்தி மற்றும் சனத்தொகையின் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்படும்' என்றார்.

site counter