அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 5 நவம்பர், 2012

மரண தண்டனை குறித்து ஆராய குழு: ஹக்கீம்

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன் என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

"மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இக்குழுவை நியமிக்கும் படி நீதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். எனினும் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு" எனவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னார்ட் சவேஜ் மற்றும் அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.  இதன்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"விரைவில் நியமிக்கப்படவுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையிலான இக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் உளவியல் நிபுணர் ஒருவரும் இடம்பெறுவார்.

இந்த குழு கூடி ஆராய்ந்து விதந்துரைக்கும் விடயங்களைப் பொறுத்து மரண தண்டனையை சிறை தண்டனையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்' என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், தற்பொழுது பல நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை" என்றார்.

சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ரிஸானா நபீக் பற்றியும் இந்த சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.   

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் செய்து சட்டமுறைமை மற்றும் நீதிச் சீர்திருத்தங்கள் பற்றி கண்டறிவதற்கான வாய்ப்பை தமது தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவிற்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஏற்படுத்தித் தருமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை தூதுவர் பேர்னார்ட் சவேஜ் ஏற்றுக்கொண்டதோடு, அது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இலங்கையில் மரண தண்டனை இறுதியாக 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. 2002ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

கடந்த ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையில் பெண்கள் மூவரும் 377 ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக 453 ஆண்களும் 20 பெண்களும்; மேன் முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தவறானது என்கிறார் பீரிஸ்!


பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சில சர்வதேச அமைப்புகள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை நிலைமைகளை புரிந்து கொள்ளாமலேயே சில நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு விரோதமான வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது பற்றி கூட அறிந்து கொள்ளாமல் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் இலங்கையை நோக்கும் விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் சகல சட்டங்களையும் பின்பற்றியே நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் மீதான பிரேரனையிலும் மு.கா.இரட்டை வேடம்; பஷீர், ஹரீஸ் கையொப்பம்; புரட்டிப் போட்டு கதை அளக்கிறார் ஹசனலி!


-அய்யாஷ்-
 பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரட்டை வேடம் பூண்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கட்சிக்குள்ளும் இவ்விடயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவரும் செயலாளரும் இப்பிரேரணையில் கையொப்பமிடாத நிலையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் இருவர் அதில் கையொப்பமிட்டுள்ள விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்த பிரேரணை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாமல் தடுமாறி நிற்கின்ற அதேவேளை தமது கட்சி எம்.பிக்கள் இப்பிரேரணை விடயத்தில் விரும்பியவாறு செயற்படலாம் என்று கட்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பிரகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் அதில் கையொப்பமிட்டதாகவும் மு.கா.செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அதேவேளை இக்கருத்தை குறித்த எம்.பிக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தாம் இருவரும் அதில் கையொப்பமிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் கையொப்பமிட்ட விவகாரத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் வெளியிட்டுள்ள கருத்தானது இரட்டை வேடம் பூணுவதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதை நன்கு அறிந்திருந்தும் கட்சியின் தீர்மானத்தை செயலாளர் நாயகம் வெளிப்படையாகவே கொச்சைப்படுத்த முனைவது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என கட்சிப் பிரமுகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் பிரேரணையில் மு.கா. கையொப்பமிடுவது தொடர்பில் மூன்று தடவைகள் ஆராயப்பட்டுள்ளது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டங்கள் இரண்டில் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலியும் கலந்து கொண்டு கையொப்பமிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தினமான நவம்பர் முதலாம் திகதி மு.கா. தலைவரின் இல்லத்தில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மூன்றாவது தடவையாக நடைபெற்றது. இதில் ஹஸனலி பங்கு பற்றவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவே அவர் அன்று பங்குபற்ற வில்லை.
அன்றைய கூட்டத்தில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரேரணையில் கையொப்பமிட வேண்டுமென தலைவர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர்களான பசீர் சேகுதாவூதும் ஹரீஸும் கையொப்பமிட்டுள்ளனர்.
நீதியமைச்சர் என்ற வகையில் தன்னை கையொப்பமிட வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தியதாகச் சுட்டிக்காட்டிய மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அரசின் பங்காளிக்கட்சி என்ற வகையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கையொப்பமிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதன் பின்னரே தலைமைக்கு கட்டுப்பட்டு மேற்படி இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்ப மிட்டனர் என அப்பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்றே ’திவிநேகும’ நாடகமும் அரங்கேறியதா?
இப்படித்தான் திவிநேகும சட்ட மூலத்திற்கும் மு.கா. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாண சபையில் ஆதரவளிக்குமாறு தலைவர் ஹக்கீம் தமது மாகாண சபை உறுப்பினர்களை வலியுறுத்தி இருக்கக் கூடும் என்றும் அப்பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் செயலாளர் ஹசன் அலி அதனையும் இப்படித்தான் வேறு விதமாக ஊடகங்களுக்கு தெரியப்புத்தி சமூகத்தை பிழையாக வழி நடத்தியுள்ளார் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு அதன் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாமல் விலங்கிடப்பட்டிருக்கும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் ஹசன் அலியைக் கொண்டு ஊடகங்களுக்கு தவறானதும் கோமாளித்தனமானதுமான அறிக்கைகளை விடுக்கச் செய்து சமூகத்தை ஏமாற்றி வருகின்றார் என்பதும் அதற்கு கட்சியின் சில எம்.பிக்களும் உயர்பீட உறுப்பினர்களும் துணை போயுள்ளனர் என்பதும் இதன் மூலம் நன்கு புலப்படுகிறது.
எமக்கு பதவிகளும் சொகுசுகளும் வேண்டும்; சமூகம் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்கின்ற தாரக மந்திரத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் பயணிக்கின்றனர் என்று முஸ்லிம் சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சந்திரிகா தலைவிரி கோலமாக ஆடைகளின்றி, வீதியில் ஒடும் காலம் நெருங்கி விட்டது; அமைச்சர் எஸ்.பி.



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆடைகளின்றி, வீதியில் ஒடும் காலம் கிட்டியுள்ளதாக உயர் க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகப் பெரிய கட்சியாகும். இந்த கட்சியின் செயலாளராக இருந்த நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசர்பிடித்து ஆடியதால், அந்த பதவியையும், கட்சியையும் விட்டுச் செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார் என்று நான் முன்னர் கூறியது தற்போது நடந்து வருகிறது.
தற்போது உண்மையில் சந்திரிகாவுக்கு விசர்பிடித்துள்ளது. அவர் தலைவிரி கோலமாக ஆடைகளின்றி வீதியில் ஓடும் நாள் மிக விரைவில் வரும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

site counter