அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 5 நவம்பர், 2012

மரண தண்டனை குறித்து ஆராய குழு: ஹக்கீம்

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன் என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

"மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இக்குழுவை நியமிக்கும் படி நீதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். எனினும் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு" எனவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னார்ட் சவேஜ் மற்றும் அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.  இதன்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"விரைவில் நியமிக்கப்படவுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையிலான இக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் உளவியல் நிபுணர் ஒருவரும் இடம்பெறுவார்.

இந்த குழு கூடி ஆராய்ந்து விதந்துரைக்கும் விடயங்களைப் பொறுத்து மரண தண்டனையை சிறை தண்டனையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்' என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், தற்பொழுது பல நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை" என்றார்.

சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ரிஸானா நபீக் பற்றியும் இந்த சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.   

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் செய்து சட்டமுறைமை மற்றும் நீதிச் சீர்திருத்தங்கள் பற்றி கண்டறிவதற்கான வாய்ப்பை தமது தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவிற்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஏற்படுத்தித் தருமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை தூதுவர் பேர்னார்ட் சவேஜ் ஏற்றுக்கொண்டதோடு, அது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இலங்கையில் மரண தண்டனை இறுதியாக 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. 2002ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

கடந்த ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையில் பெண்கள் மூவரும் 377 ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக 453 ஆண்களும் 20 பெண்களும்; மேன் முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter