அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 20 நவம்பர், 2012

பிரச்சினைக்குரிய அரசியல் களத்தில் ஈடுபட்டிருக்கும் என் போன்றவர்களுக்கு ஓர் அலாதியான ஆறுதலைத் தருகிறது!


இஸ்லாமிய நவீன சிந்தனைக்கு ஏற்ப முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாட்டில் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் சில நெகிழ்வுத் தன்மைகளோடு எவ்வாறான சட்ட நுணுக்கங்களை கையாளலாம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆன்மீகப் பரப்பில் பிக்ஹூல் அக்லியாத் என்ற பிரிவில் இஸ்லாத்தின் அடிப்படை உசூல்களுக்கு மாற்றமில்லாத வகையிலும், குர்ஆனிய சட்டங்களை மீறாத வகையிலும் ஷரீஅத்திற்கு ஏற்ப எங்களது சமூகம் சார்ந்த சட்டங்களை சிறப்பாகவும் திறம்படவும் செலுருப்படுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றங்களை உட்புகுத்தி அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது பற்றி விரிவாக ஆராயப்படுகிறது.
இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்;
கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸர்மிளா ஸெய்யித் எழுதிய ‘சிறகு முளைத்த பெண்’ கவிதை நூல் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது;
இலக்கியவாதிகள் மத்தியில் உரையாற்றக்கிடைத்ததை பெரும்பேறாக கருதுகிறேன். ஸர்மிலா ஸெய்யத் ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க காலம் பணியாற்றியவர் என்பதால் தேடல் பற்றிய நுண்ணறிவு அவருக்கு உண்டு. பிரச்சினைக்குரிய அரசியல் களத்தில் ஈடுபட்டிருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு இவ்வாறான நிகழ்வுகளில் பங்கெடுப்பது ஓர் அலாதியான ஆறுதலைத் தருகிறது.
பெண்கள் கவிதை எழுதும் பொழுது அதற்கு கடிவாளம் இடுவதற்கு பலதரப்பினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்ணொருவர் கவிதை எழுதும் பொழுது இஸ்லாமிய சமூகம் அவரை உற்றுநோக்குகின்றது. என்னுடைய பார்வையில் கவிதை யாக்கும் பெண்களை பலர் கவிதாயினி என கூறுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதில் ஆண் பெண் பால் வித்தியாசம் பார்ப்பது அவசியமில்லையென நான் கருதுகின்றேன். கவிஞர் என்ற பொதுப் பெயரால் இருபாலாரையும் விளிப்பது சிறந்ததென கருதுகின்றேன்.
இவரது துணிகரம் அதுவும் சொல்ல நினைக்கின்ற விஷயத்தை அச்சமின்றி கூற விளைகின்ற துணிச்சல் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதனை ஒவ்வொருவரும் பார்க்கின்ற பார்வை வித்தியாசமானதாய் இருக்கலாம். அவரது ஆக்கங்களுக்கு அளவுக்கதிகமான கடிவாளங்களை போடவேண்டிய அவசியமில்லையென கருதுகிறேன்.
பெண் கவிஞர் ஒருவர் யதார்த்த பூர்வமாக ஏதாவது ஒன்றை நோக்குகின்றார் என்றால் அதில் ஏதோவொன்று தொக்கி நிற்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அவரது கவிதையொன்றில் தத்ரூபமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
விலைமாது பற்றிய அவரது கவிதையொன்றும் என்னைக் கவர்ந்தது. ‘என்னில் எதைத் தேடுகிறாய்’ என்று ஒரு விலைமாது கேட்கும் போது, அவளது அவலம் நன்கு புலப்படுவது அந்தக் கவிதை எடுத்துக்காட்டுகிறது.
முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இலக்கிய ஆர்வம் கரைபுரண்டோடுவதை அண்மைக்காலமாக நன்கு அவதானிக்க முடிகிறது. இக் கூட்டத்தில் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா முஸ்லிம் தனியார் சட்;டம் பற்றி பிரஸ்தாபித்ததை நான் நன்கு செவிமடுத்தேன்.
எங்களுடைய சமூகக் கட்டமைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம், விவாக விவாகரத்துச் சட்டம் என்பன நீண்ட நெடும் காலமாக பின்னிப் பிணைந்திருப்பதை காணலாம். நவீன உலகில் மாறிவரும் இஜ்தியாத்திற்கு ஏற்ப மாற்றங்களைக்கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இதில் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இங்கு தனியார் சட்டங்கள் என பாவனைக்கு கொண்டு வரும் போது, ஓர் இஸ்லாமிய நாட்டில் அதாவது முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில் இஸ்லாமிய நடைமுறை முழுமையாக செயல்படுத்தப்படும் நாட்டில் போல, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டிலும் அவ்வாறு அமைய வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்கப்படுவது சாலவும் பொருத்தமானது.
இஸ்லாமிய நவீன சிந்தனைக்கு ஏற்ப, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாட்டில் சில நெகிழ்வுத் தன்மைகளோடு எவ்வாறான சட்ட நுணுக்கங்களை கையாளலாம் என்றவாறு நோக்கப்படுகிறது. ஆன்மீகப் பரப்பில் பிக்ஹூல் ஹக்லியாத் என்ற பிரிவில் இஸ்லாத்தின் அடிப்படை உசூல்களுக்கு மாற்றமில்லாத வகையிலும், குர்ஆனிய சட்டங்களை மீறாத வகையிலும் எங்களது சமூகம் சார்ந்த சட்டங்களை சிறப்பாகவும் திறம்படவும் செலுருப்படுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றங்களை புகுத்துவது பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவது இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சமாகும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனக் கருதுகிறேன். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தமது உரையில் கூறினார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கலாபூஷணம் நூறுல் ஐன் நஜிமுல் ஹூசைன் வரவேற்புரையும், டாக்டர் தி. ஞானசேகரன் தலைமையுரையும் நிகழ்த்தினர். நூலாசிரியை ஸர்மிளா ஸெய்யத் நன்றி உரையாற்றினார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய திருமதி சாந்தி சச்சிதானந்தன் விஷேட அதிதியாகவும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி திருமதி அன்பேரியா ஹனீபா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போராம் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். நூலின் முதற் பிரதியை டாக்டர். தாஸிம் அஹமத் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter