அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

மண்முனைப்பற்றில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு!



மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலைய திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை ஆகியோர் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளதாவது;
மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலையமொன்றை திறப்பதற்கு தனியார் வர்த்தகரொருவர் தொடர்ந்தும் முயற்சிகளையும் அதற்கான நடவடிக்கைகளையுமெடுத்து வருவது பற்றி இப்பிரதேச மக்களினாலும், பொது அமைப்புகளினாலும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆறாவது மதுபான விற்பனை நிலையமொனறு திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் சில வாரங்களுக்கு முன்பு ஆர்பாட்ட பேரணியொன்றை நடாத்தி பிரதேச செயலாளரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் மகஜர் கையளித்ததையும் தாங்கள் அறிவீர்கள்.
குறித்த விடயம் தொடர்பாக கடந்த வருடம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த ஆண்டு மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு இந்த பிரதேசத்தில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பதில்;லை என தீர்மானங்கள் எடுக்கப்பட்டதையும் இவ்வேளையில் சுட்டிக் காட்டுகின்றோம்.
மேலும் இந்த பிரதேசம் கடந்த கால யுத்தம், சூறாவளி, மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகின்ற இன்றைய சூழ்நிலையில் தொடர்ந்தும் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பது மது பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் அந்த பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரிலும் மண்முனைப் பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் கவனத்தில் கொண்டு புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிடப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதி மண்முனைப் பற்று பிரதேச செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter