அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 31 அக்டோபர், 2012

கோவிலுக்கும், பள்ளிக்கும், தேவாலயங்களுக்கு போவதற்கு எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்!


மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார். அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். அதிலும் இஸ்லாமிய சகோதர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கால கட்டத்தில் பெருநாள் பரிசு என இதை செய்து தந்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அனுராதபுரம் மல்வத்து ஓய மத்ரஸா கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது;
நாடு முழுக்க அங்கே, இங்கே என்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து சிங்கள பெளத்தம் என்ற புதிய கொலைவெறி மதம் பரவி வருகிறது. இது கருணையையும், அன்பையும், அஹிம்சையையும் போதிக்கும் பெளத்த மதம் இல்லை. சிங்கள பெளத்தம் இலங்கையில் புதிதாக வேரூன்றி வளர்ந்து வரும் மதம்.
இது இந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அஸ்வர் எம்பி உட்பட அரசாங்கத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் எம்பீக்களும் நன்கறிவர். இந்த புதிய மதம்தான், நாடு முழுக்க இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வணக்க ஸ்தலங்களை தாக்கி அழிக்கின்றது என்பது இன்று சிறு குழந்தையும் அறிந்துள்ள உண்மை.
இந்த மதவாதிகள் அரசாங்கத்துக்கு உள்ளேதான் இருக்கிறார்கள். அல்லது அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறார்கள். வெளியே இல்லை. இத்தகைய சம்பவங்கள் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை நாம் எதிர்த்து நிறுத்தவேண்டும். அல்லது எங்கள் மதங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டி வரும். கோவிலுக்கும், பள்ளிக்கும் தேவாலயங்களுக்கும் போவதற்குகூட, நாம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்.
எனவே, இந்த இன-மத வாதத்தை வந்த பின் அல்ல, வரும்போது அல்ல, வருமுன், அனைத்து மனிதநேய சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டும். எங்களுடன் சேர்ந்து எதிர்க்க முடியாவிட்டால், அஸ்வர் எம்பி போன்றவர்கள் உள்ளே இருந்தபடியாவது எதிர்க்க வேண்டும். தமது தலைவரை அஸ்வர் எம்பி வானளாவ புகழ்வதில் எமக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது. அது அவரது கடமையாக இருக்கலாம். ஆனால், அவருக்கு தனது சமூகத்தை நோக்கிய கடைமையும் இருக்கிறது. எனவே அஸ்வர் எம்பி போன்ற தமிழ் பேசும் எம்பீக்கள், தமது தலைவரை புகழ் பாடுவதுடன் சேர்த்து இந்த இன-மத தீய சக்திகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படியும், அவருக்கு எடுத்து சொல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter