அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

பாலியல் தொழில் சமூகத்தை சீரழிக்கும்; சர்மிளாவின் கூற்றுக்கு சல்மா ஹம்சா கண்டனம்!


ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள சர்மிளாவின் கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக சர்மிளா கூறியிருப்பதானது ஒரு பெண் மனிதநேய செயற்பாட்டாளர் என்ற வகையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது.
இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றை ஒழிப்பதற்கு பொது நிறுவனங்களும் அரசாங்கமும் பாடுபட்டு வரும் நிலையில் இந்த விடயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என சர்மிளா கூறியிருப்பதானது சமூகச் சீரழிவை அதிகரிக்கச் செய்யும் ஒன்றாகவே மாறிவிடும் அபாயமுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று. ஏனெனில் பாலியல் தொழிலுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் சென்றவர்களும் தவறாக பயன்படுத்தப்பட்ட பெண்களும் அல்லது அதில் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுமே ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அதிலிருந்து மீட்டெடுக்க பெண்கள் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாடுபட்டு வரும் நிலையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் ஆலோசனையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அதேபோன்று இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்மிளாவின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகத்தின் கலாசார பாரம்பரியம் என்பது ஒழுக்க விழுமியங்களை சார்ந்துள்ளது. சர்மிளாவின் இந்த கருத்தானது ஒழுக்க விழுமியத்துக்கு மாசு கற்பிக்கும் கருத்தாகும். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது என்ற ஆலோசனையை எந்தவொரு மனிதநேய பெண் செயற்பாட்டாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தில் இருந்து கொண்டு இஸ்லாமிய நெறிமுறைகளை மீறி சர்மிளா இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதை கண்டிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு ஆலோசனைக்கு எதிராக பெண் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் சார்பான அரசசார்பற்ற நிறுவனங்கள் குரல் கொடுப்பதுடன் இவ்வாறான கருத்துக்களுக்கு எதிராகவும் கண்டனங்களை வெளியிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter