அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை, அதிகாரிகளே திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்கின்றனர்; பாராளுமன்றில் ஹசனலி காட்டம்!


-எஸ்.எல்.முனாஸ்-
2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 3வது வாசிப்பின் போது விசேட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சில அமைச்சுக்களின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி ஆற்றிய உரையே இது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 3வது வாசிப்பின்போது விசேட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சில அமைச்சுக்களின் விவாதத்தில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியதற்காக உங்களுக்கு நன்றி கூறிக் கொண்டு எனது உரையைத் தொடங்குகின்றேன்.
காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுக்கள் சம்பந்தமான விடயங்களில் எனது ஆலோசனைகள் சிலவற்றை முன்வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கூன் அவர்கள் சென்ற 2011ம் வருடம் ஜூலை மாதம் பொத்துவில் பிரசேத சபைக்கு வருகை தந்து அப்பிரதேசங்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த காணிப் பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன் அவரைச் சந்தித்த விவசாயிகளுக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் ஊட்டிச் சென்றார்.
தனது அமைச்சின் உயர் அதிகாரிகள் பலருடன் வருகை தந்த அவர் சமூகமளித்திருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை மிகவும் கரிசனையுடன் செவிமடுத்து ஆறுமாத காலத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துத் தருவதாக வாக்குறுதிகளையும் வழங்கினார். அதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.
40 வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்துக்கு வருகை தந்த முதலாவது காணி அமைச்சர் அவர் என்பதை மிகவும் சந்தோஷத்துடன் நான் இந்த சபையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்று அவரின் பரிவாரங்கள் வருகைதந்து சென்று சுமார் 1½ வருடங்கள் கடந்து விட்ட போதிலும் சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தற்போது மனம் உடைந்து போய் உள்ளனர். இதற்காக நான் இந்த சபையில் அமைச்சரைக் குறைகூற விழையவில்லை.
கடந்த 1½ வருடகாலத்தில் அமைச்சரவர்களை இவ்விடயமாக நான்; அவ்வப்போது விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த போதெல்லாம் அவர் இதயசுத்தியுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி எடுப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.
துரதிர்ஷ்டவசமாக சில அரச அதிகாரிகள் கக்சேரி மட்டத்திலும் திணைக்கள மட்டத்திலும் பிழையான தகவல்களை வழங்கி அமைச்சரின் முயற்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றனர். இதனால் அரசுக்கும் அமைச்சுக்கும் விவசாயிகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டு வருவதனை நான் மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இரண்டு மூன்று தசாப்தங்களாக விவசாயிகள் கைவசம் வைத்திருக்கும் காணி உரிமைப் பத்திரங்களைக் கூட சில அதிகாரிகள் செல்லுபடியற்றது என்று எடுத்த எடுப்பில் நிராகரிக்கின்றனர். ஆனால் அதேபோன்ற அனுமதிப்பத்திரங்களை தம்வசம் வைத்திருக்கும் ஏனைய பல விவசாயிகள் வேறு கண்டங்களில் எவ்வித தடங்கலுமின்றி தங்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன ரீதியாகவும் பிரதேசரீ தியாகவும் காணிகளின் அனுமதிப்பத்திரங்கள் எமது மாவட்டத்தில் சில பகுதிகளில் வகைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக குறிப்பிட்ட காணிகளில் விவசாயத்தில்; ஈடுபட்டு வரும் முஸ்லிம் மக்கள் மேற்படி காணிகளுக்கு வங்கிக்கடன், நீர்வரி மற்றும் உரமானியங்களை உத்தியோக பூர்வமாக பெற்றுக் கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்டு வந்த உரிமைப் பத்திரங்கள் கூட தற்போது நிராகரிக்கப்பட்டு தங்கள் வயல்களிலிருந்து விரட்டப்படுகின்றனர்.
2006ம் ஆண்டு பொத்துவில் பிரதேசங்களில் மாகாண சபையால் நடத்தப்பட்ட காணிக் கச்சேரியின் போது பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்ட உரிமைப் பத்திரங்கள் கூட தற்போது எதேச்சாதிகாரமாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு தலைப்பட்சமாக சில அதிகாரிகளால் எடுக்கப்படும் முடிவுகள் அப்பாவி விவசாயிகள் மீது திணிக்கப்படுகின்றன.
உண்மை நிலையை வெளிப்படைத்தன்மையுடன் விளக்கிக் கூறுவதற்கு அதிகாரிகள் இடமளிப்பதில்லை என்ற ஒரு குறைபாடு தொடர்ந்து வருவதனை கௌரவ அமைச்சர் கவனிக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் யுத்த காலத்தின் போது நிலவிய அசாதாரண நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு பல விதமான நிர்வாகச் சிக்கல்களுக்குள் சிக்கித் தவித்த முஸ்லிம் தமிழ் விவசாயிகளின் காணி உடைமை விவகாரங்களில் உதவுவதற்காக ஒரு விசேட கருமபீடம் உடனடியாக அமைக்கப்பட்டு அவர்களின் குறைகள் களையப்பட வேண்டும்.
பொத்துவிலில் கரங்கோவா பிரதேசத்தில் 502 ஏக்கர் காணி சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. 2008ம் ஆண்டிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கத்துடனும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களிலும் முறையிட்டு வந்துள்ளது.
மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்து அமைவாக உயர் மட்ட குழு காணிகளை பார்வையிட்ட பின்னர் அங்கு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தீர்மானமும் எடுத்திருந்தது. ஆனாலும் அந்த தீர்மானம் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 40 வருடங்களாக பலர் இங்கு தொடர்ச்சியாக தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள போதிலும் அவர்கள் வசம் உள்ள உரிமைப் பத்திர ஆவணங்கள் பிழையானவை என்று சொல்லி தற்போது காணிகளில் இருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வட்டமடு, ஆமவட்டுவான், வேகாமம், கடியான்பள்ளம் பகுதிகளில் சுமார் 5000ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. வட்ட மடுப் பிரதேசத்தில் உள்ள 3850 ஏக்கர் காணியை மேய்ச்சல் நிலமாக மாற்றுவதக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது உத்தரவு பத்திரம் உள்ள முஸ்லிம் விவசாயிகளின் சொந்த நிலங்களையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காணிச் சொந்தக்காரர்கள் எங்களிடம் முறையிட்டு வருகின்றனர்.
1943ம் வருடங்களில் உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் மத்திய வகுப்பாருக்கு 10 ஏக்கரும் 4 ஏக்கருமாக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளும் கூட 2006ம் ஆண்டில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வனபரிபாலன இலாகாவுக்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பறித்தெடுக்கப்பட்;டுள்ளன.
இக்காணிகளை மீட்டெடுப்பதற்காக விவசாயிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்புகள் காணி சொந்தக் காரர்களுக்கு ஒரளவு சாதகமாக இருந்துள்ளதால் தீர்ப்பை நடைமுறை படுத்துவதற்கு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். இதனையும் அமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சம்மாந்துறை கறங்காவட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 380 ஏக்கர் நெல் வயல்கள் யானைப் பாதுகாப்பு வலயத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்படாது திட்டமிட்டு ஒதுக்கப்பட்டுள்ளதனால் அக்காணிகளை விவசாயிகள் கடந்த பல வருடங்களாக உரிய முறையில் பயன்படுத்த முடியாது தவிக்கின்றனர். இது பற்றி சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எதுவும் நடைபெறுவதாக வில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டகின்றனர்.
முற்றிலும் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான இக்காணிகளில் தற்போது வெளியார்கள் அத்துமீறி பிரவேசித்து பலாத்காரமாக விவசாயம் செய்தும் வருகின்றார்கள்.
சம்மாந்துறைக்கும் அம்பாறைக்கும் பொதுவாக காலா காலமாக இருந்த வந்த எல்லைகள் புதிதாக அளவை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த புதிய எல்லையை காட்டுவதற்காக சம்மாந்துறை பிரதேச செயலாளரை தங்களிடம் வருமாறு நில அளவையாளர் திணைக்களம் சென்ற மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
புதிதாக வகுக்கப்பட்டுள்ள எல்லையின் படி சம்மாந்துறை பிரதேசம் சுமார் 550 ஏக்கர் காணிகளை இழக்க வேண்டியுள்ளதாக பொது மக்களும் சிவில் சமூகமும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
1939ம் ஆண்டு காணிக் கச்சேரி வைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இக்காணிகள் பற்றி வரைபடம் ஆவணங்கள் அனைத்தும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும்போது எவ்வாறு தன்னிச்சையாக சில அதிகாரிகள் செயல்பட்டு புதிய எல்லைகளை வகுத்து முரண்பாடுகளை தோற்றுவிக்க முடியும்.
வளத்தாப்பிட்டி நீர்த்தேக்கத்துக்கும் புதிய எல்லைகள் தற்போது ஒருதலைப்பட்சமாக வகுக்கப்பட்டுள்ளன. 1976ம் ஆண்டிலிருந்து 120 குடும்பங்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் காணிகள் இதனால் பறிபோகக்கூடிய அபாயம் அப்பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சில திணைக்களங்கள் பொதுமக்களையும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளுர் அரச நிர்வாகங்களையும் கலந்தாலோசி;க்காது தன்னிச்சையாக மேற்கூறப்பட்ட முடிவுகளை எடுத்திருப்பது வேதனை தருகின்றது.
நம் நாட்டில் இனங்களுக்கு இடையில் புரையோடிப்போயுள்ள முரண்பாடுகளை களைந்து ஒரு புதிய ஆரோக்கியமான ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காக நாம் எல்லோரும் பாடுபடுவது உண்மையானால் இவ்வாறான தன்னிச்சையான தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்திலுள்ள உயர்மட்ட அமைச்சர்களுக்குத் தெரியாமல் ஒழுங்கான முறையில் ஆலோசனைகள் பெறப்படாமல் கட்டவிழ்த்தப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் சிறுபான்மைச் சமூகங்களின் உள்ளங்களை ஆட்கொண்டுள்ள சந்தேகத்தை களைவது கடினமாகும் என நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சீனிக் கூட்டுத்தாபனத்துக்கு 1965ம் ஆண்டில் தமது காணிகளைப் பறிகொடுத்த முஸ்லிம் விவசாயிகள் நீண்ட காலமாக நிர்வாக ரீதியாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு முடியாமல் ஈற்றில் நீதிமன்றத்துக்குச் சென்று பரிகாரம் பெற்றும் கூட அவர்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மாவட்ட மட்டத்திலுள்ள நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை.
சுமார் 985 ஏக்கர் காணிகளை இவ்வாறான புறக்கணிப்பால் விவசாயிகள் அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். 1965ம் ஆண்டு இக்காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகளை தருவதாகக் கூறி விவசாயிகளிடம் இருந்த மூலப்பிரதி ஆவணங்களை கபடத்தனமாக பெற்றுக் கொண்ட அன்றைய கச்சேரி நிர்வாகம் பின்னர் அவற்றைத் திருப்பித் தராமல் ஏமாற்றிய விடயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பரவலாக நினைவு கூரப்பட்டு வரும் மறக்கமுடியாத உண்மையாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை காணி சொந்தக் காரர்களுக்கும் அரச நிர்வாகத்தினருக்கும் இடையிலே தொடர்ந்து வரும் இழுபறி நிலமைக்கு சுமுகமான தீர்வை பெறுவதற்காக பலமுறை நான் அரச வளங்கள் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கூட்டங்களில் பிரஸ்தாபித்திருந்தேன்.
இவ்வாறு பறிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்களுக்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு விசேட குழுவை அமைக்குமாறு அம்பாறை கச்சேரிக்கு கௌரவ அமைச்சர் தயசிறித்த திஸ்சேரவினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் கூட இன்னும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. முன்பிருந்த அரசாங்க அதிபரும் கூட இவ்வாறே இந்த விடயத்தில் ஒத்துழையாமல் நடந்து கொண்டதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி வில்லி கமகே அவர்கள் கடைசியாக நடந்த பாராளுமன்ற ஆலோசனை சபை குழுக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் அங்கலாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவகாரங்கள் கையாளப்படும் விதம் வேதனையைத் தருகின்றது.
2008ம் ஆண்டிலிருந்து இக்குழுவை அமைக்கும் பணி புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூட்டக் குறிப்புகளில் இருந்து எம்மால் அறிய முடிகின்றது.
பொத்துவில் தாறாம் பள்ளக் கண்டத்திலுள்ள சுமார் 500 விவசாயிகளும் வேகாமத்தைச் சேர்ந்த 251 விவசாயிளும்;, கிரான் கோமாரியைச் சேர்ந்த 173 விவசாயிகளும் புதுக்கண்டத்தைச் சேர்ந்த 385 விவசாயிகளும் சம்மாந்துறை மஜீது புரத்தைச் சேர்ந்த 428 விவசாயிகளும் உரிய முறையில் காணிக் கச்சேரிகளுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்திருந்தும் இதுவரை அவர்களது பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை.
மேற்கூறப்பட்ட காணிகள் சம்பந்தமான பிரச்சினைகள் காணி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல்லாம் அம்பாறை கச்சேரி மட்டத்தில் ஒரு குழுவை அமைத்து உடனடி நிவாரணத்தை வழங்குமாறு அம்பாறை அரச அதிபருக்கு பாராளுமன்ற ஆலோசனை சபை பணிப்புரைகளை வழங்கியும் கூட அந்தக்குழு ஒரு வருடம் கடந்தநிலையிலும் இதுவரையிலும் அமைக்கப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விக்கிழா மடுக்கண்டம், கள்ளியம்பத்தை, தொட்டம் வைரத்தடி, முன்மாரி, நீத்தை, பாணகமுவ, நுரைச்சோலை, இலுக்குச்சேனை, வெள்ளக்கல் தோட்டம் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் பிரச்சினைகள் இனிமேலும் தாமதியாது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
பொதுவாக சொல்வதானால், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது காணிப் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறைகள் ஒழுங்காக செயல்படுவதில்லை என்பது பெரும் குறையாக இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காணி நிருவாகத்திணைக்களத்தில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய ஒரு உதவிக் காணி ஆணையாளரோ, அல்லது சாதாரண இலிகிதரோ கிடையாது.
தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய ஒரு காணி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், வெளிக்களப் போதனாசிரியர் எவரும் கடந்த 15 வருட காலத்தில் நியமனம் செய்யப்படவில்லை.
அம்பாறையிலுள்ள பிரதி காணி ஆணையாளர் காரியாலயத்தில் தமிழ் பேசக் கூடிய ஒருவரை மேலதிக பிரதி காணி ஆணையாளராக உடனடியாக நியமிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் 6 தமிழ் பேசும் பிரதேசங்களும் 3 சிங்களம் பேசும் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் பேசும் பிரதேசங்களான இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி விவசாயிகள் மொழி ரீதியாக தங்களது தொடர்பாடல்களை காணிஆணையாளர் காரியாலயத்துடன் மேற்கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுவதாக எமக்கு முறைபாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
நீதிமன்ற வழக்குகள் சம்பந்தமான விசாரணைகள், காணித்தகராறுகள் பற்றிய திணைக்கள மட்ட விசாரணைகள், ரன்திம கொடுப்பனவுகள் போன்ற விடயங்களில் விளக்கங்களை அளிப்பது போன்ற சந்தர்ப்பங்களின் போது மொழி தெரியாத விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுவதாகச் சொல்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் சுமார் 10 10 DOAS (Divisional Officers of Agrarian Services) பிரதேச விவசாய சேவைகள் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் இடத்துக்கு புதிதாக எவரும் இதுவரை சேர்த்துக் கொள்ளப்படவுமில்லை.
அண்மைக் காலங்களில் விவசாய உத்தியோகஸ்தர்கள் நியமனங்கள் சிங்கள பிரதேசங்களுக்கு மட்டுமே வழங்கப்படடுள்ளன. தமிழ் பேசும் பிரதேசங்களுக்கு இந்நியமனங்கள் இன்னும் வழங்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.
துறைமுக அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரர்கள் 39 பேர் நஷ்;ட ஈட்டைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
துறைமுக அதிகார சபையின் விலை மதிப்பீட்டுப் பிரிவுக்கும், தேசிய மட்ட விலை மதிப்பீட்டு திணைக்களத்துக்குமிடையில் சரியான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தீர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை நீடித்து வருவதனால் அப்பாவி காணி சொந்தக்காரர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற நவம்பர் 10ம் திகதி பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது இந்த விடயத்தில் துறைமுக அதிகார சபை போதிய ஒத்துழைப்பை வழங்க வில்லை என்று காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கூன் அவர்கள் வெளிப்படையாக தனது பதிலில் தெரிவித்திருந்தார்.
காணி அமைச்சர் இவ்விரு அரச நிர்வாகங்களுக்கிடையில் ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டும் எந்தவொரு முடிவையும் எட்ட முடியாதிருக்கின்றது என கை விரித்து விட்டார்.
இழுபறிக்குள் மாட்டுப்பட்டுள்ள அனைவரும் முஸ்லிம்களாக இருப்பதால் எமக்கு அதிக அழுத்தங்கள் பல மட்டங்களிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி தேசிய விலை மதிப்பீட்டுத் தினைக்களத்தின் ஆலோசனைப்படி நஷ்ட ஈட்டுத் தொகையினைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யமாறு வேண்டுகிறேன்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்களை பராமரிப்பதற்கு கனரக இயந்திரங்களைக் கொண்ட ஒரு தனியான பிரிவு நிர்மாணிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எமது பகுதியிலுள்ள சிறந்த வளங்களைக் கொண்ட விசாலமான வயல் வெளிகளை உரிய முறையில் தேவையான காலங்களில் பராமரிக்க முடியாதுள்ளதால்; விவசாயிகளும் நமது நாடும் முழுமையான பலன்களை அந்த வயல் நிலங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
உரிய காலங்களில் தேவையான பராமரிப்பு இன்றி தூர்ந்து போகும் நிலையில் பல வாய்க்கால்கள் இப்பிரதேசங்களில் உள்ளன. 60 வருடங்களாக புனருத்தாபனம் செய்யப்படாமல் உள்ள வாய்க்கால்களும் வடிச்சல்களும் எமது பிரதேசங்களில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.
தற்போது அம்பாறையில் உள்ள நீர்பாசன கமநல திணைக்களங்களால் கரையோரப் பகுதிகளிலுள்ள நிலங்களின் இவ்வாறான தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றது.
இறுதியாக நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
2013 (தியடகிருள) தேசத்தின் மகுடம் திட்டத்தின் கீழ் எமது பிரதேசங்களில் நீண்ட காலமாக தீர்த்து வைக்கப்பட முடியாமல் இருக்கும் காணிப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான ஒரு பொறிமுறையை உண்டாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளை பெருமனது கொண்டு எந்த விதமான இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சரியான முறையில் அணுகி தீர்த்துக் கொடுப்பதன் மூலம் ஒரு முழுமையான சமாதானத்தையும் சௌஜன்யத்தையும் கட்டியெழுப்ப முடியும்.
2013 (தியடகிருள) தேசத்தின் மகுடம் திட்டத்தில் நிந்தவூரில் நீண்ட காலமாக அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்து எம்.எச்.எம். அஷ்ஃரப் ஞாபகார்த்த வரவேற்பு மண்டபத்தின் தொடர் நிர்மாண வேலைகளை உள்ளடக்கியதற்காக மான்புமிகு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களுக்கு எனது சார்பிலும் எனது ஊர் மக்கள் சார்பிலும் கட்சி சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter