அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

கல்வி கற்பதை தடுப்பவர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்யுங்கள் - கலாநிதி அனீஸ்


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

ஒரு சமூகம் தனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறது என்றால் அதனுடைய நிகழ்காலம் சரியில்லை என்பதுதான் அர்த்தம் என கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி எம் .எஸ்.அனீஸ் இலங்கை முஸ்லிம்களுடைய கல்வியின் எதிர்காலம் ஒளியிலா அல்லது இருளிலா என்ற தலைப்பில் பிரதான உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

கல்வி முன்னேற்ற சங்கம் ஏற்பாடு செய்திருந்த  க.பொ.த. சாதாரணதரத்தில் ஒன்பது ஏ சித்திகளை பெற்ற முஸ்லிம் மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி முன்னேற்ற சங்க தலைவர் எம்.இஸட் அஹம்மட் முனவ்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடளாவிய ரீதியில் 9 ஏ சித்திகளைப் பெற்ற 143 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,

அரசியலில், பொருளாதாரத்தில் கல்வியில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நமக்குள்ளேயே தொடர்ச்சியாக நாம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அதன் அர்த்தம் நிகழ்கால நிகழ்வுகள் எமக்கு திருப்தியளிப்பதாக இல்லை. இதைப்பற்றி நாம் அச்சம் அடைகின்றோம். 

கடந்த வருடம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்திகளை பெற்றிருக்கிறார்கள். இதில் 143 மாணவ, மாணவிகள் முஸ்லிம்கள். முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தை எடுத்துக்கொண்டால் இன்று 9.7 வீதமாகும். கிட்டத்தட்ட 10 வீதம் என்று வைத்தால் 3000 மாணவர்களில் எமது விகிதாசாரப்படி 300 மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றிருக்க வேண்டும். 

எமது விகிதாரசாரத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் 300 மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றிருக்க வேண்டுமல்லவா. இந்த  அடைவு மட்டங்களை எண்ணி நாம் மகிழ்சியடைவதற்கு ஒன்றுமேயில்லை.

நாம் பெற்றுக்கொண்ட இந்த அடைவு மட்டத்திலும் 143 மாணவர்களில் ஏறத்தாள 30 மாணவர்கள் ஆண்களாகும். 113 பேர் பெண்கள். இதன் அர்த்தம்தான் என்ன? ஒருவிதத்தில் நாம் சந்தோசமடையலாம் பெண்களின் கல்வித்தரம்  உயர்ந்த கொண்டிருக்கிறது என்று. இவ்வாறான நிலைதான் இன்று பல்கலைக்கழகங்களிலும் காணப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இருக்கின்ற முஸ்லிம் மாணவ மாணவிகளில் 80 வீதம் பெண்கள் 20 வீதமே  ஆண்கள். ஒரு வகையில் சந்தேசப்பட்டாலும் மறுபுறத்தில் முஸ்லிம் சமூகம் கல்விக்கு வழங்குகின்ற முன்னுரிமை என்பதன் அடிப்படையில் பார்க்கின்றபோது மிகவும் வேதனைக்குரிய விடயமேயாகும்.

மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக நடாத்தப்படுகின்ற இறுதிப் பரீட்சையும் அந்த மாணவர்களுக்கான கடைசி வகுப்பும் நடைபெற்றபோது. அனைவரையும் எனது நாளைய கடைசி வகுப்புக்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என்று அனைத்த மாணவ, மாணவிகளையும் கேட்டுக் கொண்டேன். இந்த வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு பரீட்சைக்கு தயாராக வேண்டும் என்னென்ன விடயங்களை படிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்ற வகுப்பு. எனது இறுவகுப்பில் இரண்டு மாணவிகள் சமூகமளிக்கவில்லை கடைசி வகுப்பின்போது நான் எல்லோரிடமும் கேட்டேன் எல்லொரும் சமூகமளித்திருக்கிறீர்களா என்று மாணவர்கள் மத்தியில் மௌனம்.  ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள் உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது. சமூகமளிக்காத இரு மாணவிகளுக்கும் அடுத்த வராம் திருமணமாம் இனி அவர்கள் பல்கலைக்கழகம் வரமாட்டார்கள் என்று  என்று சொன்னார்கள்.

எனக்கு தெரிந்தவரையில் அந்த இரண்டு பிள்ளைகளும் மிகவும் கெட்டிக்கார பிள்ளைகள். இந்த நிலைதான் இன்று முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அரசாங்கம் இவர்களுக்காக மூன்றரை, நான்கு இலட்சம் ரூபா பணத்தை செலவிடுகின்றது. அத்துடன் இவர்களும் செல்லாமல் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்தருந்த இருவரின் சந்தர்ப்பத்தையும் இல்லாமல் செய்தவர்கள். எனவே இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்று எமது பல்கலைக்கழகங்களில் 20 ஆயிரம் பேருக்குத்தான் அனுமதி வழங்கப்படுகின்றது. சித்தியடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து தனக்கு பல்கலைக்கழகம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தூக்கி எறிந்துவிட்டு ஏனைய இருவரது சந்தர்ப்பங்களையும் இல்லாமல் செய்து விட்டார்கள். எனவேதான் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று நான் கூறுகிறேன். 

பாடசாலை இடைவிலகல் என்றுதான் நாம் கேள்விப்பட்ருக்கிறோம் ஆனால் இன்று இடைவிலகள் பல்கலைக்கழகங்களிலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிலும் முஸ்லிமகள்தான் மிகமிக அதிகமாகும். மிகவும் வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மிகமோசமான ஒரு நிலைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று எந்தவொரு முஸ்லிம் நாடும் நிம்மதியாக இருப்பபதாக தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கின்ற அத்தனை சக்திகளும் ஒன்று திரண்டு இந்த முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது நாட்டிலும் அவ்வாறான ஒரு சூழ்நிலை இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. நன்றாக சிந்திக்க வேண்டிய காலமாக இருக்கின்றது. தொடர்ச்சியாக பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களே முஸ்லிம்களின் பள்ளிகளை உடைக்கின்ற வேதனைக்குரிய நிலைமை உருவாகியிருக்கிறது. அறியாமையினுடைய வெளிப்பாடுகளை இன்று நாம் பள்ளியில் பார்க்கின்றோம்.

இந்த நிலையிலேயே நாம் எமது கல்வியை பார்க்க வேண்டியிருக்கின்றது. கல்வியுடைய சமூகம் என்றால் அது எப்படியிருக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டும் தெரிந்து வைத்திருகிறோம். 

நடந்த ஓரு சின்ன உதாரணத்தை சொல்ல வேண்டியிருக்கின்றது. எனது மகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியிருக்கிறாள் நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் ஒருவர் வந்து கேட்டார். சந்தோசப்பட வேண்டிய விடயம். உங்களுடைய மகளை நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவிடடு அல்லவா வந்து கேட்கவேண்டும்.

இல்லை எனது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கப்போகிறேன் உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறார். சந்தோசப்படவேண்டிய விடயம். அவளை பல்கலைக்கழகம் அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

ஒன்றரை வருடம் கழிந்த பிறகு அதே நபர் என்னிடம் வந்து கேட்கிறார் உங்களுக்கு தெரிந்த முஸ்லிம் பெண் வைத்தியர் இருக்கின்றாரா என மகள் கர்ப்பமாக இருக்கிறார் அவருக்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என்று.  ஒரு முஸ்லிம் பெண் மருத்துவத்திற்கு தகுதிபெற்றவர். இன்று அவருக்கு மருத்துவம் பார்க்க இன்னுமொரு பெண் வைத்தியரை தேடுகின்றார் அவரது பெற்றோர். ஒரு வைத்தியரை தொலைத்த விட்டு இன்னொரு முஸ்லிம் பெண் வைத்தியரை தேடுகின்றார் என்றால் நாம் கல்வியில் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றோம். சிந்தித்துப் பார்க்க வேணடிய விடயம். 

உனது மகள் வைத்தியராகக் கூடிய சந்தர்ப்பத்தை நீ விட்டுவிட்டு இன்னொர முஸ்லிம் பெண் வைத்தியரை எப்படி தேடுவது. அவர்களுடைய பெற்றோரும் உன்னைப் போல் ஒருவர் தானே. ஆவர்கள் எவ்வாறு பல்கலைக்கழகம் அனுப்பினார்கள் சிந்திக்க வேண்டும். நீ மருத்துவத்துவத்துறைக்கு செல்ல விருப்பம் இல்லையென்றால் நீ எவ்வாறு முஸ்லிம் பெண் வைத்தியரை தேடுவது. என்னுடைய மகள் பல்கலைக்கழகம் போனால் கெட்டுவிடுவால் பல்கலைக்கழக சூழ்நிலை சரியில்லை. இதுதான் எமது சமூகத்தின் பெரும்பான்மையானோரின் எண்ணமாகும்.

குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு ஒன்றைச் சொல்கிறேன் நீங்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு அதனை உங்கள் பெற்றோர் தடுத்தால் நீங்கள் ஜிகாத் செய்யுங்கள். இதுதான் நாங்கள் செய்ய வேண்டிய ஜிகாத்தாகும். இன்று அதனை எமது முஸ்லிம்களுக்குள்ளேயே செய்ய வேண்டியுள்ளது.

அறிவுமைய, தகவல்மைய சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதனது உடலுக்குள் ஒரு பொருளை செலுத்தி அந்த மனிதன் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் அதனை பதிவு செய்து அறியக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

உமையாக்கள், அப்பாசிகள் என்றும் முஸ்லிம்கள் அந்தக் காலத்திலேயே வரலாறு படைத்தார்கள் என்று நாம் பெருமை  பேசிக்கொண்டிருக்கின்றோம். எந்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னால் இருந்துகொண்டிருக்கின்றோம்.

இந்த நூற்றாண்டில் எமக்கு சொல்லக்கூடிய தலைவர்களோ, விஞ்ஞானிகளோ யாரும் இல்லை. 500, 600 அண்டுகளுக்கு பின்னால் இருந்து கொண்டிருக்கிறநோம் இந்த நாட்டிலே நல்லிணக்கமும் நிரந்தர சமாதானமும் உருவாக வேண்டுமாக இருந்தால் எங்களுடைய பங்களிப்பும் அதற்கு தேவை. அந்த பங்களிப்புக்கு நாங்கள் ஒரு சிறந்த அறிவு மயப்படுத்தப்பட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter