
-மாகாண அமைச்சர் மன்சூர் அதிகாரிகள் மத்தியில் சூழுரை-
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்;)
' அரசியல்வாதிகளின் பிரிவினையை வைத்துக் கொண்டு, கல்வியினைப் பாழடிக்கும் விதத்தில் செயற்படும் ஒரு சில அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். ஒரு சில அதிகாரிகள் தமது சுயநலன்களுக்காக இடமாற்றங்களைச் செய்து விட்டு, அவற்றைக் கருத்து முரண்பாடுகளுடன் காணப்படும் அரசியல் தலைவர்களின் தலைமீது சுமத்துவது வளக்கமான செயலாகி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்' என மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறைக் கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று முதல் நாள் சம்மாந்துறை வலயக் கல்விக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, விளையாட்டுத் துறை, கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் நுட்ப அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் ஏற்பாட்டிலான இம்மாநாடு சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர்.உமர் மௌலானா தலைமையில் இடம் பெற்றது.
இங்கு அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மாகாண அமைச்சர் மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் ' ஒரு கல்வி அதிகாரியை பிழையானவர் என்றீர்கள். அவரால் சம்மாந்துறையின் கல்வி வீழ்ந்து விட்டது என்றீர்கள். ஆராய்ந்தோம். உண்மை எனக் கண்டதால் அவரை உடன் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தோம். அதில் வெற்றியும் கண்டோம்.
ஆனால் அவரால்தான் சம்மாந்துறையின் கல்வி முழுக்கமுழுக்க வீழ்ந்தது என்றால் அதில் உண்மையில்லை. சம்மாந்துறையின் கல்வி வீழ்ச்சிக்கு இன்னும் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நமது வலயத்தில் பல ஆசிரியர்கள் வேலைப் பட்டியல் இல்லாமலும், எந்தவித கடமைப் பொறுப்புக்கள் இல்லாமலும் பாடசாலைகளில் சும்மா கடமைகளைக் களிக்கின்றனர். வேறு சிலர் பாடசாலைகளில் கைச்சாத்திட்ட பின்னர் வேறு வெளிவேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களை அடக்க முடியாத ஆளுமையற்ற நிலையில் பல அதிபர்கள் உள்ளனர். இதே நிலையில்தான் சில அதிகாரிகளும் உள்ளனர்.
இவ்வாறான ஆசிரியர்களைப் பதவிகளில் இருந்து விலக்கி விடுமாறு நான் கூறவில்லை. இவர்களை இனங்கண்டு, அவர்களுக்குப் பொருத்தமான வேலைகளை வழங்குங்கள். இல்லையேல் இவ்வாறானவர்களைக் காரியாலயங்களில் இணைப்புச் செய்யுங்கள். இவர்களுக்காக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட அனுமதிக்க முடியாது.
அரசாங்கம் வருடத்திற்குக் கோடிக் கணக்கிலான பணத்தினைச் செலவு செய்து, கல்வியினால் எதிர்பார்க்கும் இலக்கினை அடைந்துள்ளதா? என்பதைப் பரிசோதிப்பதற்காகவே அதிகாரிகளான உங்களை அரசாங்கம் நியமித்துள்ளது. நீங்கள் அரசை ஏமாற்றலாம். ஆனால் அல்லாவை ஏமாற்ற முடியாது. பதில் சொல்லியாக வேண்டும்.
மாணவர் கல்வி விடயத்தில் பிரதேச சபைத் தலைவர் சகோதரர் நௌசாட்டையோ, மாகாண சபை உறுப்பினர் சகோதரர் அமீரையோ, அல்லது அமைச்சர் மன்சூரையோ சாட்டுப் போக்குச் சொல்லி விளையாட முடியாது. இப்போது நாம் மூவரும் சம்மாந்துறையின் கல்வியின் பால் ஒன்றினைந்துள்ளோம். எங்கள் பெயர்களைப் பாவித்து யாரும் இனிமேல் பூச்சாண்டி காட்ட முற்படக் கூடாது. எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக