அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தம்புள்ளை பள்ளிவாசலை சூழவுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவு!


தம்புள்ளை பள்ளிவாசலைச் சூழவுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள சுமார் 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு இன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை நகர அபிவிருத்தி மற்றும் புனித பூமி புனர்நிர்மாணம் செய்யும் நோக்கத்திற்காக அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு அதன் உரிமைகாளர்களிடம் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு இதுவரை எவ்வித கடிதமும் வழங்கப்படவில்லை. அதேநேரம், வீதி அபிவிருத்தி தொடர்பான எல்லைக் கல் பள்ளிவாசல் முழுவதையும் உள்ளடக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ntrinfor.tk

வியாழன், 27 செப்டம்பர், 2012

வடமாகாண வரைபடத்தில் பல தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்படுகின்றன: மனோகணேசன்

(நவரத்தினம்)

இந்த அரசாங்கம் தற்போது வடமாகாணத்திலிருந்து பல தமிழ்க் கிராமங்களை அழித்துக்கொண்டிருக்கின்றதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

வடபகுதியில் தமிழர்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை கைவிடுமாறு கோரி, இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலத்திற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மருதநகர், கிருஸ்ணபுரம், இரணைத்தீவு ஆகிய கிராமங்கள் திட்டமிட்ட முறையில் வடமாகாண வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது கேப்பாபிலவு கிராமம் கூட  வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு தமிழ்க் கிராமங்கள் அகற்றப்படுகின்றதென்றால் தமிழர்களின் இருப்பு, வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியனவும்  அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றதென்பதே  பொருள்.

சுவரின்றி சித்திரம் வரையமுடியாது. அந்த வகையில் எமது சுவர் எமது மண். எனவே மண்ணிருந்தால்தான் நாம் ஓரே இனமாக வாழமுடியும். நாம் ஒரே இனமாக வாழக்கூடாது, வாழமுடியாதென்ற அகங்காரம் காரணமாகத்தான் மஹிந்த அரசாங்கம் தமிழர்களை அவர்களது கிராமத்திற்கு செல்லமுடியாது தடுத்துக்கொண்டிருக்கின்றது.

யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளாகின்றன. அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதுவும் அண்மையில் கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். தெற்கிலுள்ள மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிப்பதாக. ஆனால் தெற்கிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் பெற்றுள்ள சுதந்திரம் வடக்கிலுள்ள மக்கள் அனுபவிக்கவில்லை என்பது கண்கூடாக காணமுடிகின்றது.

தமிழர்கள் சொந்த மண்ணுக்கு செல்லமுடியவில்;லை. சொந்த மண்ணில் விவசாயம் செய்யமுடியவில்லை இவை சுதந்திரமுமில்லை, உரிமையுமில்லை. தெற்கு மக்களுக்குள்ள அனைத்துச் சுதந்திரமும் வடக்கில் அழிக்கப்படுகின்றது. இதற்காகதான் நாம் ஜனநாயக ரீதியாக  போராடுகின்றோம். தமிழர்களை பொறுத்தவரை, எமக்குள்ள ஒரே வழி ஜனநாயக ரீதியாக எமது உரிமைக்குரலை ஒலிக்கச்செய்வதே' என்றார். 

இதேவேளை, இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையாற்றுகையில்,

"காணாமல் போனவர்கள் தொடர்பாக எங்கள் மக்களுக்கு ஒரு பதிலை சொல்லவேண்டும். எங்களுடைய தாயகம் எங்களுடைய தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றையும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழர்கள் இம்மண்ணிலே அநியாயமாக கொல்லப்படுகின்றார்கள். தமிழர்கள் இம்மண்ணிலே புதைக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலம் அபகரிக்கப்படுகின்றது. இவை அவர்கள் நிர்மூலமாக்கப்படுகின்றார்களென்பதனை எடுத்துக்காட்டுகின்றது. எனவே,  இவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலேயே நாம் இப்போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.  எமது இனத்தின் விடுதலை, எமது இனத்தின் வாழ்வுக்காக தொடர்ந்து போராட்டங்களை தமிழர் பகுதியெங்கிலும் நடத்துவோம்' என்றார். 

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் உரையாற்றுகையில்,

'இவ் அரசாங்கம் எமது தாய்க்குலத்தின் கண்ணீருக்கு பதில் சொல்லியேயாக வேண்டும். ஏனென்று சொன்னால் நாம் எமது மக்களுக்காக பல்வேறு முறையிலும் போராட்டங்களை நடத்துகின்றோம். அங்கு வரும் மக்கள் தமது உறவுகளை காணவில்லையென கண்ணீருடன் பங்கேற்கின்றனர். எனினும், இப்போராட்டங்கள் ஏதோவொரு வழியில் நசுக்கப்படுகின்றது.

இம்மக்களின் குரல்களும் உரிமைக் கோரிக்கைகளும் அரசாங்கத்திடம் சென்றுவிடக்கூடாதென்பதில் பலரும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும்; எமது போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெறும். அது பரவலடையும். எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் எமது போராட்டங்களை கைவிடப்போவதில்லை' என்றார். 

இனியும் அமெரிக்காவின் உருட்டல், மிரட்டல் எடுபடாது – ஈரான் அதிபர்




அமெரிக்காவின் மிரட்டல்கள் இனியும் உலகில் எடுபடாது. தனது மிரட்டல்களை, நெருக்குதல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய உலக வரிசை உருவாவதற்கான நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ஈரான் அதிபர் அகமதிநிஜாத்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அகமதிநிஜாத் அங்கு அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர 12க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து முயற்சித்து வருகின்றன. அதில் ஒன்றாக ஈரானும் உள்ளது.
எங்களது அணு சக்தித் திட்டங்களை கேள்வி கேட்கயாருக்கும் அதிகாரம் கிடையாது. மேற்கத்திய நாடுகள் என்னதான் எங்களுக்குத் தடை விதித்தாலும் எங்களது பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடந்து கொண்டுதான் உள்ளன.
இப்போது புதிய உலக வரிசை உருவாகும் நேரம் வந்து விட்டது. இனியும் அமெரிக்காவின் உருட்டல்கள், மிரட்டல்கள் எடுபடாது. அவர்களும் உலக நாடுகள் மீதான தங்களது ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று எல்கேஜி குழந்தைக்குக் கூட அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டிக் காரியம் சாதிப்பதை உணர்ந்துள்ளது. மைக்ரோபோன் மூலம் உத்தரவிட்டு காரியம் சாதிக்கிறது அமெரிக்கா. தங்களது விருப்பங்களை, மிரட்டல்களை போன் மூலம் அவர்கள் சாதிக்கி நினைக்கிறார்கள். ஆனால் இது முடியப் போகும் நேரம் வந்து விட்டது. இனிமேலும் அவர்களை யாரும் சக்கரவர்த்தி போல பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், கட்டளைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றார் அகமதிநிஜாத். (Oneindia)

சமூகத்திற்கு ஹக்கீம் இழைத்துள்ள துரோகத்தை அடுத்த சந்ததி கூட மன்னிக்காது; அசாத் சாலி காட்டம்!



கிழக்கு மாகாண சபைத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் போட்டியிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கிழக்குத் தேர்தலில் நான் ஒரு வீட்டுக்கேனும் செல்லாது வாக்குகளை பெற்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரமிருக்கின்றது. தாமதிக்காமல் கிழக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி பிழையை திருத்திக் கொள்ள வேண்டும்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார். இது ஒரு கரை படிந்த அத்தியாயமாகும். அடுத்த சந்ததி கூட இதனை மன்னிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் பதவி வகிக்கக் கூடாது ௭ன்ற சிறந்த கொள்கையை இந்த அரசாங்கம் முறையாக அமுல்படுத்தினால், ராஜபக்ச குடும்பத்தில் ௭த்தனை பேர் மிஞ்சுவர் ௭ன்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது ௭ன்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே அமைச்சர் ௭ஸ்.௭ம். சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
அவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சு பதவி வகிக்க முடியாது என்றால் சபாநாயகர் சமல் ராஜபக்ச பதவி விலகினால் ௭த்தனை பேர் பதவி விலக வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு 13, 432 ரூபா சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தல்



அரசாங்க ஊழியர்களுக்கு 13,442 ரூபா சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தவறினால் விரைவில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜே.வி.பி. சார்பான, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த, செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில், தமது தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பொலிஸாரை பயன்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் பதில் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை தமது சங்கம் கோரும் எனத் தெரிவித்தார். ஏனெனில் இந்த போராட்டம் நியாயமானது என அவர் கூறினார்.

"உண்மையான தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளிக்கும்  என நாம் நம்புகிறோம். அரசாங்க அடக்குமுறைக்குப் பயந்து வாபஸ்பெறுவது அறிவார்ந்த நடவடிக்கை அல்ல. ஏனெனில், அதிகாரத்திலுள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இதை செய்யமுயற்சிக்கிறது. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் வகையில் தொழிற்சங்கங்கள் தமது  பலத்தை வலுப்படுத்த வேண்டும்" என அவர் கூறினார்.

"2006 ஆம் ஆண்டின் பின்னர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம், 7069 ரூபாவையே படியாக அதிகரித்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 25,344 ரூபாவை செலவிட்டது. வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின்படி, கடந்த மாதம், குடும்பமொன்றுக்கான செலவு 46,396 ரூபாவாக அதிகரித்தது.  எனவே தொழிலாளிகளின் அடிப்படை சம்பளத்திற்கும்,  வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுபடி வழங்கப்படாததன் நிலுவைக்கும் இடையிலான இடைவெளியை நிவர்த்திப்பதற்காக 13,442 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் என லால் காந்த கூறினார்.

தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன்


ntrinfor.tk(கஜன்)

தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஓர் அம்சம். இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய ஒரு நோக்கு என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நியு சில்வர் ஸ்டாரில் கூட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான சி.தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோருடன் வேட்பாளர்களான மருத்துவர் திருமதி இந்திராணி தர்மராஜா, வெ.சுரேஷ், சி.பளீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தலைவர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தொணடர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட சம்பந்தன் அங்கு மேலும் உரையாற்றுகையில்...

“வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது எமக்கு அவமானம் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம், அரசுக்கு எதிராக மரச் சின்னத்தில் போட்டியிடுவதே பெருமை என  தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டதால் மக்களின் வாக்கு கணிசமாக அவருக்கு கிடைத்தது. தற்போது ஜனநாயக முடிவுக்கு மாறாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக தீர்வு புறந்தள்ளப்பட்டு முஸ்லிம் மக்களின் இறைமை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹக்கிம் - முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வாகன விபத்தில் தந்தை பலி; தாயும் குழந்தையும் காயம்



இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை பலியான அதேவேளை,  தாயும் 2 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ள நிலையில்  புத்தளம் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மன்னாரிலிருந்து சிலாபத்துறையூடாக கற்பிட்டி சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 
NTRinfor.tk
NTRinfor


NTRinfor.tk

புதன், 26 செப்டம்பர், 2012

பலஸ்தீன மக்களின் துன்பங்கள் குறித்து இலங்கை விசனம்



ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 21 ஆவது அமர்வின்போது, பலஸ்தீனர்கள் முகங்கொடுத்துவரும் துன்பங்கள் தொடர்பாக இலங்கை தன் விசனத்தை தெரிவித்ததாக ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.
'பலஸ்தீனம் மற்றும் வேறு ஆக்கிரமிக்கப்பட்ட அரபு ஆட்புலங்களில் மனித உரிமை நிலைமைகள்' என்னும் தொனிப்பொருளிலான அமர்வின்போது, பலஸ்தீன மக்கள் முகங்கொடுக்கும் பெரும் துன்பங்கள் பற்றிய விசனத்தை இலங்கை வெளிப்படுத்தியது.

பலஸ்தீன மக்களின் பிரிக்கமுடியாத உரிமைகளை இலங்கை எப்போதும் பரிந்துரைத்து வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய இலங்கை, இஸ்ரேலுக்கு சமாந்தரமாக நாடொன்றை அமைப்பதற்கான பலஸ்தீனர்களின் நியாயமான போரட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறியது.

சாதாரண மக்களின் வாழ்வின் மீது, அதிலும் குறிப்பாக சிறுவர், இளைஞர்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் காஸா மீதான தடைகளை பாதுகாப்பு சபை தீர்மானம் 1860 இற்கு அமைய, இஸ்ரேல் அகற்ற வேண்டுமென இலங்கை வலியுறுத்தியது. விரைவில் ஐக்கிய நாடுகளில் உள்ள நாடுகளில் ஒன்றாக பலஸ்தீன அரசு ஆகுமென நம்பிக்கையையும் இலங்கை வெளிப்படுத்தியது'.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் குண்டு தாக்குதல்கள்


கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும்  கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட்டின்  சாய்ந்தமருது இல்லத்திற்கும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் சாய்ந்தமருது இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
Source-tamilmirror

மீண்டும் கூகிளை சாடுகிறார் அமைச்சர் விமல்


உலகெங்கும் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்த, இஸ்லாத்தை அவமதிக்கும் ‘இன்னோசன்ஸ் ஒவ் முஸ்லிம்ஸ்’ எனும் படத்தை விநியோகிக்கப்பட்டமைக்கு கூகிள் தேடல் இணையத்தளம் பொறுப்பு என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
இணைய தேடல் இயந்திரமான கூகிள் தளத்தை அமெரிக்க அதிகாரிகள் நெறிமுறைகளை மீறி தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இயக்குவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தினார்.
உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுவருவதாக அவர் கூறினார். இலங்கையிலுள்ள பாவனையாளர்கள் கூகிளில் மேற்படி படத்தை பார்க்க முடியாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தணிக்கை செய்யவேண்டும் எனவும் அவர் கோரினார்.

மாகாண அமைச்சர் மன்சூருக்கு சம்மாந்துறையில் மகத்தான வரவேற்பு!



(அஸ்ரின் முஹம்மட், ஏ.எல்.அமீர்)
கிழக்கு மாகாண சுகாதார, இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள எம்.ஐ.எம்.மன்சூர், தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தபோது அவருக்கு போது மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
சத்தியப் பிரமாண வைபவத்தை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த மாகாண அமைச்சர் மன்சூர் சம்மாந்துறை வங்களாவடிச் சந்தியில் வரவேற்கப்பட்டதுடன் அங்கிருந்து அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் பெருந்திரளான ஆதரவாளர்களும் பொது மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் மன்சூர்;
“எனக்கு இப்பதவியை வழங்க சிபாரிசு செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உச்சபீட உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.
எனது தகுதிக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற முறையில் கிடைத்துள்ள இந்த அமைச்சு பதவியின் மூலம் உச்ச அளவில் கிழக்கு மாகாண மூவின மக்களுக்கும் சமனான முறையில் பேதமின்றி பணிபுரிவேன்.
அதற்காக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினை கோரவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

கண்டி மாநகர எல்லைக்குள் ஆடு, மாடு அறுப்பதற்கு தடை!


கண்டி மாநகர சபை எல்லைக்குள் இறைச்சிக்காக மாடு மற்றும் ஆடுகளை அறுப்பதனை தடை செய்ய கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

நிந்தவூர் கடலில் இன்று பாரிய திருக்கை மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

இன்று காலை 12 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. இது ஏல விற்பனையின் மூலம் சுமார் 110,000 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிகமான மக்கள் திரண்டுள்ளனர்.









வெள்ளி, 21 செப்டம்பர், 2012

இறைத்தூதரை அவமதித்து வெளியாகிய திரைப்படத்திற்கு எதிராக நிந்தவூரில் மாபெரும் எதிர்ப்பு கண்டன பெரணி


முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் நாடு பூராகவும் கண்டன அமைதி ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும், இடம்பெற்றதுடன், ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் அணைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கண்டனப்பேரணி இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் பிரதான வீதியினாடாகச் சென்று நிந்தவூர் பிரதேச செயலாளரிடம் கண்டன அறிக்கை அடங்கிய மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சுமார் 5000 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு அமெரிக்க ஜனாதிதபதியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

















இந்த மிக பிரமாண்டமான ஆர்ப்பாட்டப்பேரணியில் கல்முனைப் பிரதேச வாழ் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டனர். அத்துடன் கொடுங்கோலர்களுக்கு எதிராக துஆப் பிரார்த்தனையும் அங்கு இடம்பெற்றது.

site counter