அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 27 செப்டம்பர், 2012

வடமாகாண வரைபடத்தில் பல தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்படுகின்றன: மனோகணேசன்

(நவரத்தினம்)

இந்த அரசாங்கம் தற்போது வடமாகாணத்திலிருந்து பல தமிழ்க் கிராமங்களை அழித்துக்கொண்டிருக்கின்றதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

வடபகுதியில் தமிழர்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை கைவிடுமாறு கோரி, இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலத்திற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மருதநகர், கிருஸ்ணபுரம், இரணைத்தீவு ஆகிய கிராமங்கள் திட்டமிட்ட முறையில் வடமாகாண வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது கேப்பாபிலவு கிராமம் கூட  வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு தமிழ்க் கிராமங்கள் அகற்றப்படுகின்றதென்றால் தமிழர்களின் இருப்பு, வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியனவும்  அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றதென்பதே  பொருள்.

சுவரின்றி சித்திரம் வரையமுடியாது. அந்த வகையில் எமது சுவர் எமது மண். எனவே மண்ணிருந்தால்தான் நாம் ஓரே இனமாக வாழமுடியும். நாம் ஒரே இனமாக வாழக்கூடாது, வாழமுடியாதென்ற அகங்காரம் காரணமாகத்தான் மஹிந்த அரசாங்கம் தமிழர்களை அவர்களது கிராமத்திற்கு செல்லமுடியாது தடுத்துக்கொண்டிருக்கின்றது.

யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளாகின்றன. அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதுவும் அண்மையில் கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். தெற்கிலுள்ள மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிப்பதாக. ஆனால் தெற்கிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் பெற்றுள்ள சுதந்திரம் வடக்கிலுள்ள மக்கள் அனுபவிக்கவில்லை என்பது கண்கூடாக காணமுடிகின்றது.

தமிழர்கள் சொந்த மண்ணுக்கு செல்லமுடியவில்;லை. சொந்த மண்ணில் விவசாயம் செய்யமுடியவில்லை இவை சுதந்திரமுமில்லை, உரிமையுமில்லை. தெற்கு மக்களுக்குள்ள அனைத்துச் சுதந்திரமும் வடக்கில் அழிக்கப்படுகின்றது. இதற்காகதான் நாம் ஜனநாயக ரீதியாக  போராடுகின்றோம். தமிழர்களை பொறுத்தவரை, எமக்குள்ள ஒரே வழி ஜனநாயக ரீதியாக எமது உரிமைக்குரலை ஒலிக்கச்செய்வதே' என்றார். 

இதேவேளை, இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையாற்றுகையில்,

"காணாமல் போனவர்கள் தொடர்பாக எங்கள் மக்களுக்கு ஒரு பதிலை சொல்லவேண்டும். எங்களுடைய தாயகம் எங்களுடைய தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றையும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழர்கள் இம்மண்ணிலே அநியாயமாக கொல்லப்படுகின்றார்கள். தமிழர்கள் இம்மண்ணிலே புதைக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலம் அபகரிக்கப்படுகின்றது. இவை அவர்கள் நிர்மூலமாக்கப்படுகின்றார்களென்பதனை எடுத்துக்காட்டுகின்றது. எனவே,  இவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலேயே நாம் இப்போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.  எமது இனத்தின் விடுதலை, எமது இனத்தின் வாழ்வுக்காக தொடர்ந்து போராட்டங்களை தமிழர் பகுதியெங்கிலும் நடத்துவோம்' என்றார். 

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் உரையாற்றுகையில்,

'இவ் அரசாங்கம் எமது தாய்க்குலத்தின் கண்ணீருக்கு பதில் சொல்லியேயாக வேண்டும். ஏனென்று சொன்னால் நாம் எமது மக்களுக்காக பல்வேறு முறையிலும் போராட்டங்களை நடத்துகின்றோம். அங்கு வரும் மக்கள் தமது உறவுகளை காணவில்லையென கண்ணீருடன் பங்கேற்கின்றனர். எனினும், இப்போராட்டங்கள் ஏதோவொரு வழியில் நசுக்கப்படுகின்றது.

இம்மக்களின் குரல்களும் உரிமைக் கோரிக்கைகளும் அரசாங்கத்திடம் சென்றுவிடக்கூடாதென்பதில் பலரும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும்; எமது போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெறும். அது பரவலடையும். எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் எமது போராட்டங்களை கைவிடப்போவதில்லை' என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter