அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

13வது திருத்த சட்டத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என மு.கா. கூறுவது பதவிகளுக்காக வீசப்படும் வலையே!


13வது திருத்த சட்டத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது தனிப்பட்ட சில பதவிகளுக்காக வீசப்படும் வலையாகும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“சமூக நலன் பற்றிய எந்த வித நிபந்தனையுமின்றி 18வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காஙகிரஸ், அமைச்சுப் பதவிகளுக்காக எந்த வித நிபந்தனையுமின்றி கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு முட்டுக் கொடுத்த அக்கட்சி, பதவிகள் பறிபோய் விடும் என அச்சப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அக்கட்சி, 13வது திருத்தத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுவதை எவராவது நம்பினால் அவர் உலக மகா முட்டாள் என்பதுதான் அர்த்தம்.
13வது சட்ட மூலத்தை திருத்த அனுமதிக்க மாட்டோம் என அக்கட்சியினர் கூறுவதன் மூலம் ‘ஏதாவது’ தந்தால் ஆதரிப்போம் என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை கொண்டுள்ளது என்பது அரசியல் அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.
இது பற்றி அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியள்ளார். முஸ்லிம் காங்கிரசுக்கு எதனை கொடுத்தால் வாலாட்டிக் கொண்டே இருப்பார்கள் என்பது அரசியல் சாணக்கியமிக்க ஜனாதிபதிக்குத் தெரியாதா?
இக்கட்சியினர் நினைத்தால் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து இது பற்றி பேசி தீர்க்கமான உத்தரவாதங்களை பெற முடியும. அதனை விடுத்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி விட்டு அதனை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்கள் என்றால் இதன் மூலம் இவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற முனைகிறார்கள் என்பது தெளிவாக தெரிவதனால்த் தான் நாம் இதனை சுட்டிக்காட்டி பேச வேண்டியுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதா இல்லையா என்ற கேள்வி நாடாளுமன்றத்துக்கு வந்தால் நிச்சயம் முஸ்லிம் காங்கிரசும், ஏனைய அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளும் நிபந்தனை இன்றி ஆதரிக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். இவற்றின் மூலம் மு.கா. உட்பட அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் மூலம் சமூகம் உரிமைகளை பெறுவதற்கு பதிலாக இருப்பதையும் இழந்து வரும் நிலைதான் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter