அன்பியுலன்ஸ் வண்டிகள் உட்பட ரூபாய் 2 கோடி பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு.
-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு ஒரு கோடியே 60 இலட்சம் பெறுமதியான அன்பியுலன்ஸ் வண்டிகளும், 45 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாகாணப் பணிப்பாளர் டாக்டர்.கே.முருகானந்தம் , உதவிச் செயலாளர் ஜே.ஹுஸைன்தீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எல்.சஃபீர், யூ.எல்.எம்.பஸீர், ஏ.எம்.தபீக். டாக்டர்.ஐ.அப்துல் மஜீட் ஆகியோரும், பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையுள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்:- 'எமது அரசாங்கமானது பல கோடிகளை சுகாதார சேவைக்காக ஒதுக்கி, மக்கள் நலனைக் காத்து வருகின்றது. தேக சுகத்துடன் மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே அரசு பல தியாகங்களைச் செய்து, சுகாதாரத் துறைக்குப் பணத்தை ஒதுக்குகின்றது. இத்தியாகங்களைப் புரிந்து கொண்டு சுகாதாரத் துறையினர் செயற்பட வேண்டும். பொது மக்களுக்கு மனிதாபிமானத்தோடு சேவை செய்யும் அதே வேளை, சுகாதார சேவைக்கான வாகனங்கள், உபகரணங்களையும் பேணிப்பாதுகாக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக