
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற் திட்டத்திற்கு அமைய பிரதேச அபிவிருத்தி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் உபாயங்களுள் ஒன்றான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் தற்போது திருப்திகரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயிலின் வழிகாட்டுதலில் இவ்வளாக கலை, கலாச்சார பீடம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்திறனை ஊக்குவிக்கும் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கல்முனைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த பயிற்சியை முடித்துக் கொண்ட 150 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (01.03.2014) இ;ப்பல்கலைக் கழகத்தின் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், உபவேந்தர் எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பட்டப்பின்படிப்பு மாணவரும், தொழிலதிபருமான பி.ரி.ஏ.ஹசன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று மாதப் பயிற்சி நெறி தென்கிழக்கு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களின் அனுசரணையில் இதன்பட்டப்பின்படிப்பு பட்டதாரி மாணவரான பி.ரி.ஏ.ஹசனின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக