நிந்தவூர் கலீல் ஜிப்ரான்
அரச சேவைக்குள் இனவாத அரசியலின் தலையீடும் சிறுபான்மை
சமூகத்திற்குள் வளர்த்து விடப்பட்டிருக்கின்ற சமூதாய அக்கறையின்மையும்
காட்டிக் கொடுப்புக்களும்… தென்கிழக்கு மக்களிற்கு மறைந்த தலைவர் அஷ்ரப்
விட்டுச் சென்ற ‘அமானிதத்தை’ அம்பாறைச் சிங்களவர்களுக்கு தவணை முறையில்
பறிகொடுக்கும் அபாய நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.
முஸ்லிம் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக தென்கிழக்கில்
உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு நிர்வாக அலுவலகம் அமையப்பெற வேண்டும் என்ற
ஒரு கனவை மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்தார். எல்லா
ஊர்களும் எவ்வகையிலேனும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதே இதற்குக்
காரணமாக இருந்தது. அப்போதிருந்த அரசாங்கத்தின் வலதுகையாக இருந்த தலைவர்
இதற்காக பெரிதும் உழைத்தார். அந்த வகையிலேயே மாவட்ட தொழிற்பயிற்சி
நிலையமும் அதனுடன் இணைந்த மாவட்டத்திற்கு பொறுப்பான நிர்வாக அலுவலகமும்
நிந்தவூரில் அமைக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளராக அப்போதிருந்த
எம்.ரி. ஹசனலி தனது காணி ஒன்றை நன்கொடையாக வழங்க முன்வந்தார். 1997ஆம்
ஆண்டு மே மாதத்தில் அப்போதிருந்த தொழில் அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவே
இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இங்கு பலருக்கு
தொழில்வாய்ப்புக்களை வழங்கிய தலைவர் மாவட்டத்திற்குப் பொறுப்பான உதவிப்
பணிப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பல இரவுகள் சிந்தித்தார்.
கடைசியில் எம்.ரி. ஹசனலியின் நெருங்கிய உறவுக்காரர் ஒருவரையே அப்பதவிக்கு
சிபாரிசு செய்தார்.
அவரிடம் சமூக சிந்தனையும் ஆளுமையும் இருந்தாலும் ஹசனலியின்
உறவுக்காரர் என்பதால் அவர்மேல் அதிக நம்பிக்கை இருந்தமை இந்நியமனத்திற்கான
மேலதிக தகுதி என்று அப்போது பேசப்பட்டது. இவருக்கு நியமனம் வழங்கிய போது
“இது உங்களுக்கு ஒரு அமானிதம் …” என்று அஷ்ரப் கூறியிருந்தார்.
இவ்வார்த்தையில் உட்பொதிந்துள்ள அர்த்தங்கள் பின்வந்த பலருக்கு விளங்காமல்
போனமைதான் இன்று இவ்வாறான சிக்கல்களுக்கு காரணம் எனலாம்.
கடந்த 16 வருடங்களாக நிந்தவூரில் இயங்கி வருகின்ற மாவட்ட
தொழிற்பயிற்சி அலுவலகத்தின் கீழேயே கிராமிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகள் வரைக்கும் அம்பாறைக்கு வெளியே இயங்கி
வந்த ஒரேயொரு மாவட்ட நிர்வாகக் காரியாலயமாக இது மட்டுமே காணப்பட்டது.
இந்நிலையில் இதனையும் இப்பகுதியிலிருந்து பிடுங்கி எடுத்துவிட கடந்த
ஐந்தாறு வருடங்களாக பெரும்பான்மையின சக்திகள் முயற்சித்துக்
கொண்டிருக்கின்றன. தெஹியத்தக்கண்டியிவில் அமைந்துள்ள பயிற்சி
நிலையத்திலிருந்து மாணவர்களும் அங்கு கற்பிப்போரும் வருவதற்கு மிகவும்
தூரமாகவுள்ளது என்பதுதான் இதன் பிரதான காரணம் என்று அலுவலகத்தில் பணியாற்றி
பதவிவிலகிய ஒருவர் கூறுகின்றார். இதுதவிர, முஸ்லிம்கள் இனப்பாகுபாடு
காட்டுகின்றார்கள், சிங்களவர்களை மதிக்கிறார்கள் இல்லை, ஒரவஞ்சனையுடன்
செயற்படுகின்றார்கள் போன்ற உதிரிக் காரணங்களும் இருப்பதாக அவர்
சொல்கின்றார். ஆனாலும், இதுகாலவரைக்கும் நிர்வாகிகளும் அரசியல் வாதிகளும்
நலன்விரும்பிகளும் அதற்கு இடம்கொடுக்கவில்லை.
நிந்தவூர் மக்கள் தமது சொந்த சொத்தைப்போல இதனை
நேசிக்கின்றனர். எந்தளவுக்கு என்றால், அமைச்சர் அதாவுல்லாவின் முயற்சியால்
பொறுப்பான அமைச்சரின் ஒப்புதலோடு சில கணணிகளை அருகிலுள்ள தொழில்நுட்பக்
கல்லூரிக்கு கொண்டு செல்ல ஒரு குழுவினர் வந்தபோது, அதனையே தடுத்து
நிறுத்தினார்கள் இவ்வூர் காரர்கள். அதேபோன்று தொழில்நுட்ப கல்வி துறையில்
முன்னர் விரிவுரையாளராக இருந்த ஹசனலி எம்.பி.போன்றோர் தனது உயிரிலும் மேலாக
இதனை நேசிக்கின்றனர். இப்பகுதியல் முஸ்லிம் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட
ஒன்றிரண்டு செயற்றிட்டங்களுள் ஒன்றாக இது திகழ்கின்றது. மு.கா.வை
பொறுத்தமட்டில் தாருஸ்ஸலாம் இற்கு அடுத்தபடியாக இது பெறுமதியானது என்றாலும்
மிகையில்லை.
இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் இந்த மாவட்ட அலுவலகத்தை
அம்பாறை நகருக்கு உடன் இடமாற்றம் செய்யுமாறு தொழிற்பயிற்சி அதிகார சபையின்
தலைவர் கடிதம் மூலம் மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அறிவித்தார். இது
ஏற்கனவே தீட்டப்பட்ட திட்டமே என்றபோதிலும், மாவட்டத்தில் இடம்பெற்ற அதிகார
சபை ஊழியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வே இதற்கு உடனடிக் காரணம் என்றும் ஒரு
தகவல் கசிந்துள்ளது. ஆனால், உறுதிப்படுத்த முடியவில்லை.
எது எவ்வாறிருந்தபோதிலும், இத்தகவல் சொல்ல வேண்டிய
இடங்களுக்கெல்லாம் கடுகதி வேகத்தில் சொல்லப்பட்டது. குறிப்பாக முஸ்லிம்
அரசியல்வாதிகளுக்கு தகவல் போனது. ஊடகங்கள் முன்பக்க செய்தியாக
பிரசுரித்துக் கொண்டிருந்தன. இதன் பாரதூரமறிந்த முஸ்லிம் காங்கிரஸ்
உடனடியாக செயற்பட்டது. தலைவர் ரவூப் ஹக்கீம் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி
எம்.பி., பைசால் காசீம் எம்.பி. ஆகியோர் இளைஞர் அலுவல்கள் திறன் விருத்தி
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை அமைச்சில் சந்தித்து இது விடயமாக பேசினர்.
இவ்வலுவலகம் நிந்தவூரில் ஏன் இருக்க வேண்டும் என்ற நியாயங்களை அவர்கள்
எடுத்துக் கூறினர். சிறுபான்மையினரின் உணர்வுகளை புரிந்துகொண்ட அமைச்சர்
டலஸ், மேற்படி அலுவலகம் அம்பாறைக்கு மாற்றப்படாது என்று வாக்குறுதி
அளித்தார்.
ஆனால் அம்பாறைக்கு மாற்றப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட
கடிதத்தை வறிதாக்கும் மாற்றுக் கடிதம் நிந்தவூருக்கு அனுப்பி
வைக்கப்படவில்லை. இதனால் முதலாவது கடிதத்திற்கு அமைய நிர்வாக அலுவலக
உத்தியோகத்தர்கள் அனைவரையும் அம்பாறை நகரில் அமைந்துள்ள பயிற்சி
நிலையத்தில் ஒப்பமிடுமாறு உதவிப்பணிப்பாளர் அறிவித்திருந்தார். உடனடியாக
அம்பறைக்கு கொண்டு சென்றுவிடுவதற்கும் மேலதிகாரிகள் முயற்சிகளை
மேற்கொண்டனர்.
இது விடயமாக மீண்டும் மு.கா. உறுப்பினர்களின் கவனத்திற்கு
கொண்டு வரப்பட்டதையடுத்து எம்.பி.க்களான ஹசனலி, பைசல் காசீம் ஆகியோர்
இளைஞர் விவகார அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் இது குறித்து
பிரஸ்தாபித்தனர். அமைச்சர் உத்தரவு வழங்கியிருக்கின்ற நிலையில்
அம்பாறைக்கு கொண்டு செல்ல தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவது எவ்வாறு?
என்று ஆலோசனைக் குழுவில் நிரந்தர உறுப்பினரான ஹசனலி எம்.பி. ஆதாரபூர்வமாக
கேட்டார். இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் டலஸ், அதிகார சபை தலைவர் உள்ளிட்ட
அதிகாரிகளை கடுமையாக சாடியதுடன் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி
கோரியிருக்கின்ற நிலையில் பணிப்புரையை மீறி செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை
விடுத்தார். அதன்படி, நிந்தவூரிலேயே அவ் அலுவலகத்தை தொடர்ந்து
வைத்திருப்பது என்பது ஆலோசனைக்குழுவின் தீர்மானமாகவும் அமைந்ததாக ஹசனலி
எம்.பி. கூறியிருந்தார்.
அதன்பிறகும் - இதுவரைக்கும் கடிதம் அனுப்பப்படவில்லை.
அம்பாறைக்கு செல்வதற்கான கடிதம் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
போதிலும் அக் கடிதம் வழங்குவதற்கு முன்னர் இரு தடவைகள் அமைச்சர் ரத்துச்
செய்யும் அறிவிப்பை விடுத்தவிட்டமையால் நிந்தவூர் அலுவலகத்திலேயே
கையொப்பமிட்டு வருகின்றனர். அவர்களது தொழில் பற்றிய இடர் ஒன்று இதில்
காணப்படுகின்ற நிலையிலும் அவர்கள் நெஞ்சுரத்துடன் இருப்பது சமூகத்தின் மீது
கொண்ட அக்கறையின் வெளிப்பாடாகவும் தெரிகின்றது. ஆனால், உத்தியோகபூர்வ
கடிதமொன்று கிடைக்காத சூழலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு தமது கொள்கையில்
பற்றுறுதியுடன் இருத்தல் சாத்தியம் என்று ஊழியர்கள் கடந்த சில தினங்களாக
எழுப்புகின்ற கேள்வி நியாயமானதே.
இது குறித்து கவனம் செலுத்தி கடிதம் கிடைக்க வழிசெய்யுமாறு
உத்தியோகத்தர்களும் நலன்விரும்பிகளும் கல்வியியலாளர்களும் மு.கா.வுக்கு
அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். மாகாண சபை தேர்தல் பரபரப்பிற்குள்
சிக்கியிருக்கின்ற மு.கா. எம்.பி.க்கள் தமக்கு நேரம் கிடைக்கின்ற
போதெல்லாம் இப்பிரச்சினையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். மேற்படி
அலுவலகத்தை மானசீகமாக நேசிக்கும் ஹசனலி எம்.பி. நம்பிக்கையுடன்
இருக்கின்றார். தலைவர் ஹக்கீம் சுயமாகவும் ஹசனலி அடிக்கடி இதுபற்றி பேசிக்
கொண்டிருப்பதாலும் கணிசமான அக்கறையை வெளிக்காட்டி வருகின்றனர். பைசல்
காசிம் எம்.பி.யோ ஆரம்பத்திலிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவருக்கு
நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இந்த காய்நகர்த்தலில் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானது.
தலைமை அலுலக அதிகாரிகள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின்
பார்வைக் கோணம் வேறுபட்டது. ஆனால், சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநிதித்துவம்
செய்யும் ஒரு அதிகாரி அவ்வாறிருக்க முடியாது. அந்த வகையில் மாவட்ட உதவிப்
பணிப்பாளர் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல்கள் மிகவும் அபத்தமானவை.
மொத்தத்தில், தனது தொழிலை பாதுகாத்துக் கொள்வதற்காக கடமை என்ற தோரணையில்
மேலிடத்திற்கு தனது ‘விசுவாசத்தை’ அளவுக்கதிகமாகவே இவர்
வெளிக்காட்டியுள்ளதாக ஊர்ப் பிரமுகர்கள் பலர் மு.கா.விடமும் ஏனைய அரசியல்
தலைமைகளிடமும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
மு.கா.விடம் இவரது சமூக பொறுப்பின்மை பற்றி கூறப்பட்டுள்ளது
போலவே, மறுபுறத்தில் ஆளுமையில்லா நிர்வாகம் குறித்து இளைஞர் விவகார
அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள விடயம் மு.கா. குழுவினர்
நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது சாடைமாடையாக சொல்லப்பட்;டதாகவும்
நம்பகரமாக தெரியவருகின்றது.
அம்பாறை நகரமே இந்த மாவட்டத்தின் நிர்வாக நகரம் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை. நிர்வாக காரியாலயங்கள் அங்கிருப்பது வழக்கமான
நியதிதான். ஆயினும் இந்த 17 வருடங்களாக இல்லாத சிரமமும், பிரச்சினையும்
இப்போது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. தவிர, இம்மாவட்டத்தின்
99வீதமான நிறுவனங்களின் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் அனைத்துமே அம்பாறை
நகரிலேயே முகாமிட்டிருக்கின்றன. ஒரு ஒப்பத்தை பெறுவதற்காக தினந்தோறும்
நூற்றுக்கணக்கானோர் கரையோர பிரதேசங்களில் இருந்து அம்பாறைக்கு சென்று
கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகம் மட்டும் நிந்தவூரில்
இருப்பதாலும் அதற்காக அம்பாறையிலிருந்தோ அதற்கு அப்பாலிருந்தோ சிங்களவர்கள்
காரியம் முடிக்க வருவதாலோ ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
ஊழியர் ஒருவரின் தகவலின் பிரகாரம், தமிழ், முஸ்லிம்
பிரதேசங்களில் 11 நிலையங்களும் சிங்கள பிரதேசங்களில் 6 அல்லது அதற்குக்
குறைவான நிலையங்களுமே இயங்கி வருகின்றன. இவற்றுள் தமிழ் முஸ்லிம்
பிரதேசங்களில் உள்ள பயிற்சி நிலையங்களிலே 600 இற்கு மேற்பட்ட மாணவர்கள்
கற்கின்றனர். சிங்களப் பிரதேசங்களில் 200 இற்கும் குறைவானவர்களே
கற்கின்றனர். இப்படியிருக்கையில், மாணவர்களும் கிராமிய தொழிற்பயிற்சி
நிலையங்களும் குறைவாகவுள்ள ஒரு பகுதிக்கு நிர்வாக அலுவலகத்தை மாற்றுவது –
வியாபாரம் நடக்காத ஐயர் தெருவுக்கு ஆட்டிறைச்சிக் கடையை கொண்டு சென்ற
கதையாகிவிடாதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
இப்படி ஏகப்பட்ட நியாயங்கள் இருக்கின்றன. ஆனால்
இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு - எவ்வித புறக்காரணிகளின் தாக்கமும் அற்ற,
அரச நிறுவனம் ஒன்றின் உள்ளக தீர்மானம் என்ற கோதாவில் நிந்தவூர் அலுவலகத்தை
அம்பாறைக்கு கொண்டு சென்று விட சூட்டுசுமமாக முயற்சி எடுக்கப்படுவதற்கு
ஏதாவது வேறு அழுத்தங்கள் இருக்குமோ என்ற எண்ணம் இயல்பானதுதான்.
இந்த அலுவலகத்தை அம்பாறைக்கு கொண்டு போகவேண்டும் என்பது
நீண்டகால திட்டமே. இருப்பினும், அமைச்சர் பி. தயாரத்ன, புதிதாக
பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வீரசேகர, சிறியானி எம்.பி. ஆகியோர்
இவ்விடயத்தில் தற்போது அதீத அக்கறை காட்டியிருக்கலாம் என்று எண்ணத்
தோன்றுகின்றது. அரசில் பங்காளியாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் இரு
தடவைகள் அமைச்சரை சந்தித்தும் பல தடவைகள் தொலைபேசியில் பேசியபோதும் இதற்கான
கடிதம் அனுப்பப்பட்டு உத்தியோகபூர்வமாக இடமாற்ற முடிவு ரத்துச்
செய்யப்படாமைக்கு, அம்பாறை அரசியல்வாதிகளின் அழுத்தமும் உபகாரணமாக
இருக்கலாம் என்று பேச்சடிபடுகின்றது.
இன்னுமொரு துணுக்குறச் செய்யும் தகவல் - அம்பாறையைச்
சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருத்தரின் சகோதரர் பௌத்த துறவி என்றும் அவர்
பொதுபலசேனா போன்ற கடும்போக்கு சக்திகளுடன் மிக நெருக்கமானவர் என்றும்
ஊர்ஜிதமற்ற விதத்தில் தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின்
நிர்வாக ரீதியான தீர்மானமாக இந்த இடமாற்றம் இருந்தாலும் கூட – நிந்தவூரில்
இருக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவது மாதிரி, அம்பாறைக்கு
கொண்டுவருவதற்கு மேற்சொன்ன தரப்பினர் பிரயாசைப்படலாம் என்பதில் ஆச்சரியம்
ஒன்றுமில்லை.
ஆக, இப்பின்னணியில்தான் மு.கா.வின் மந்திர தந்திரங்கள்
பலிக்காமல் போய்க் கொண்டிருப்பதாக தெரிகின்றது. அமைச்சர் வாக்குறுதி
வழங்கிய பின்னரும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் செயற்படுகின்றமையும்
மு.கா. குழுவினருக்கு ஒரு மாதிரியும் ஊழியர் சேவை சங்கம் போன்ற வெளித்
தரப்பினருக்கு வேறு மாதிரியும் பதில்கள் அளிக்கப்படுகின்றமையும்
இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. எவ்வாறிருப்பினும், இவ்வாறான
ஒரு நிலை குறித்து மு.கா. உணர்ந்துள்ளதா என்று தெரியவில்லை.
நிந்தவூர் அலுவலகம் இடமாற்றப்படப் போகின்றது என்ற தகவல்
அப்பிரதேசத்தின் கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளுக்கும் எத்தி
வைக்கப்பட்டது. ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், அதனை தக்க வைப்பதற்கு
ஹசனலி எம்.பி.யின் தனிப்பட்ட பிரயாசையையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே
போராடிக் கொண்டிருக்கின்றது. ‘நிந்தவூரில் இருக்கும் இரு எம்.பி.க்களும்
மு.கா. தலைமையும் பார்த்துக் கொள்ளட்டும்’ என்று ஒரு தரப்பினரும்,
‘அவர்களால் முடியாவிட்டால் எம்மிடம் சொல்லுங்கள்’ என்ற தோரணையில் இன்னுமொரு
சிலரும் பராமுகமாக இருக்கின்றனர். இது ஒரு சமூகத்தின் சொத்து என்பதை
ஏற்றுக் கொள்ள அவர்களது குறுகிய அரசியல் நோக்கம் தடுக்கின்றது.
தென் மாகாண ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எந்த முஸ்லிம் அரசியல்வாதியும்
அலட்டிக் கொள்ளவில்லை என்பதால் சிங்கள அரசியல்வாதியை நாடிச் செல்லவுள்ளதாக
பாதிக்கப்பட்ட ஒருவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நிந்தவூர்
பிரதேசம் மு.கா.வின் கோட்டையாக (?) இல்லாது போயிருந்தால் நிந்தவூர்
தொழிற்பயிற்சி அலுவலகத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும்படி சிங்கள
அரசியல்வாதிகளிடமே மடிப்பிச்சை கேட்க நேரிட்டிருக்கும் போலவே தெரிகின்றது.
இது விடயத்தில் மு.கா. வெளிப்படுத்தியுள்ள கரிசனையும்
அக்கறையும் நன்றிக்குரியது. ஆனால், மு.கா. தனது அரசியல் பலம் குறித்து
சுயமாக பலப்பரீட்சை நடத்துவதற்கான ஒரு களத்தை இவ்விவகாரம்
வழங்கியிருக்கின்றது. அதாவது - தலைவர் அஷ்ரப் இல்லாத இந்த 13 வருடங்களிலும்
பெரிதளவில் எந்த செயற்றிட்டத்தையும் மு.கா முன்னெடுக்கவில்லை.
குறைந்தபட்சம் நிந்தவூரில் பாழ்பட்டுக் கிடக்கின்ற அஷ்ரப் ஞாபகார்த்த
மண்டபத்தைக் கூட கட்டிமுடிக்க இயலவில்லை.
இந்நிலையில் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த மாவட்ட
அலுவலகத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதனை இழந்தால், கட்சிக்
காரர்களுக்கு இனிவரும் தேர்தல் காலத்தில் காரைதீவு சந்தியைக் கடந்து
நிந்தவூர் பக்கம் போக முடியாமல் போகும்.
அதேபோல், ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக இருந்தாலும்
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸினால் ஒரு
சின்ன விடயத்தை சாதித்து முடிப்பதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கலை இது
உணர்த்துகின்றது. மத்தியில் முழு அமைச்சர்கள் இரண்டுடன் எம்.பிக்களையும்
மாகாண சபையில் பெருமளவு உறுப்பினர்களையும் கொண்டுள்ள ஒரு கட்சியின்
‘பருப்பு’ வேக இவ்வளவு காலமெடுப்பது கவலையாக இருக்கின்றது. இந்த
இலட்சணத்தில்… இதை விடப் பெரிய விடயங்களான காணிப் பிரச்சினை, கரையோர
கச்சேரி, கரையோர மாவட்ட அலகு போன்ற கனவுகள் நனவாவது எங்கனம்?
நிந்தவூர் மாவட்ட அலுவலக இடமாற்றத்தை ரத்துச்செய்யும்
கடிதம் கிடைக்கப் பெறாமையால் இன்றோ நாளையோ அல்லது தேர்தல் பருவ காலம்
முடிந்து பிறகோம் மீண்டும் இடமாற்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படக்கூடிய
அபாயம் இருக்கின்றது என்ற எச்சரிக்கை மு.கா.வுக்கு மட்டுமன்றி எல்லா
சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும் உரியது. முற்றுமுழுதாக சிறுபான்மையின
ஊழியர்களை கொண்ட இந்த அலுவலகம் அம்பாறைக்கு சென்று விட்டால்,
குறிப்பிட்டுக் கூறக்கூடிய பல இழப்புக்களை சந்திக்க நேரிடலாம். அதனை
சந்திக்கும் முதலாவது நபராக மாவட்ட பொறுப்பதிகாரியே இருக்கலாம் என்கின்றார்
நாலுமறிந்த ஊர்ப் பெரியவர் ஒருவர்.
கரையோர மாவட்டம் ஒன்று உருவாகாத வரைக்கும், என்றோ ஒருநாள்
இந்த அலுவலகம் அம்;பாறைக்கு சென்றே தீரும் என்பது மட்டும் நிச்சயம். கரையோர
பிரதேசங்களில் இருக்கின்ற வெவ்வேறு அரச நிறுவனங்களின் ஐந்தாறு நிர்வாக
காரியாலயங்களை இப்படி சிங்களப் பகுதிக்கு நகர்த்துவதற்கு
சாத்தியமிருக்கின்றது. எனவே, கல்யாண வீடுகளில் ஒன்றுகூடுகின்ற
அரசியல்வாதிகள் ஒரு நல்ல விடயத்திற்காக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்.
ஜனாதிபதியை சந்தித்து கூட்டாக கோரிக்கை விடுத்தால் நீண்டகாலத்துக்குள்
ரத்துச் செய்யப்படலாம் என்றும் உள்மனது சொல்கின்றது.
“எந்தக் காரியமும் செய்து முடிக்கப்படும் வரைக்கும் அது
சாத்தியப்படாது போலவே தோன்றும்” என்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள்தான்
இப்போதிருக்கின்ற ஆறுதல்
நன்றி : வீரகேசரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக