அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

பதவி விலக மாட்டேன் தொடர்ந்தும் பதவி வகிப்பேன் ; சிராஸ் சூளுரை

(tw)
கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாதெனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கப் போவதாக சிராஸ் மீராசாஹிப் சூளுரைத்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப், கட்சியின் தீர்மானத்துக்கமைவாக மேயராகப் பதவியேற்றார்.
எனினும் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்டு அதற்கடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அடுத்த இரண்டு வருடங்கள் பதவி வகிப்பாரென கட்சித் தலைமை அப்போதே அறிவித்திருந்தது.
தற்போது முதல் இரண்டு வருடம் முடிவடைந்த நிலையில் மேயர் சிராஸை பதவி விலகுமாறு ரவூப் ஹக்கீம் நேரடியாகக் கேட்டுக் கொண்டதுடன் அது தொடர்பான கட்சியின் முடிவான முடிவையும் அறிவித்திருந்தார்.
கட்சியினது தீர்மானத்துக்கு மாற்றமாக எந்த ஓர் உறுப்பினரும் செயற்பட முடியாதெனவும் கட்சிக் கட்டுப்பாட்டை எவரும் மீற முடியாதெனவும் மு.கா. தலைவர் ஹக்கீம் ஆணித்தரமான அறிவிப்பையும் வெளியிட்டார்.
எனினும் சிராஸ் மீராசாஹிப் தனக்கு வாக்களித்த மக்களின் தீர்மானத்துக்கு மாற்றமாக தான் செயற்பட முடியாதெனவும் அவர்களின் அபிப்பிராயங்களை கேட்டறிந்த பின்னரே உரிய முடிவை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது மக்களுடனான ஒரு சந்திப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள், உலமாக்கள், மக்கள் அமைப்புக்கள், மு.கா. ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், இந்த விவகாரத்தைக் கையாளும் பொறுப்பு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.
மு.கா. தலைவருக்கும் சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று காலை 10 மணியளவில் ஏற்பாடாகியிருந்த நிலையில் மு.கா. தலைவர் ஹக்கீம் நேற்று முன்தினம் கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சிராஸின் பதவி வறிதாகும் பகிரங்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் தீர்க்கமான, அதிரடியான இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மு.கா. உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் இந்த அறிவிப்பு மிக மிகச் சரியானதென்பதைத் கோடிட்டு காட்டும் வகையில் செயலாளர் நாயகம் ஹஸன் அலி எம்.பி., கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் சிராஸ் மீராசாஹிபுடன் எத்தகைய தொடர்புகளையும் வைத்திருக்க கூடாதென அறிவித்துள்ளார்.
கல்முனை மேயர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் மாத்திரமின்றி அம்பாறை அரசியலிலும் தற்போது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.
மு.கா. தலைவரின் உறுதியான இந்த அறிவிப்பையடுத்து மாநகர சபை உறுப்பினர் பிர்தெளஸ் தலைமையிலான சாய்ந்தமருது மு.கா. மத்திய குழு உறுப்பினர்களின் முக்கியஸ்தர்கள் அவசரமாக மு.கா. தலைவர் ஹக்கீமை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
கல்முனை மேயர் விவகாரத்தால் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் பிரதேச வாதம் தலைதூக்கக்கூடாது என மு.கா. உயர் பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரதேச வாதத்தை அனுமதிக்க முடியாதெனவும் கட்சியின் கட்டுப்பாட்டை எவரும் மீறமுடியாது எனவும் கட்சியின் தலைவர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றார்.
மு.கா.வின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் தலைவரின் இந்த முடிவு தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க மறுக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஏதாவது சமரச முயற்சிக்கு இடமுண்டா என கட்சித் தலைவருக்கு மிக நெருக்கமான அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஒருவரிடம் வினவிய போது,
தலைவர் ஹக்கீம் இந்த விடயத்தில் தெளிவான உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், சமரசத்துக்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளதெனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter