அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 9 மே, 2013

சவூதி அரேபியாவிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஒரு கடிதம்..!

எங்கள் தேசியத் தலைவர் ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்களுக்கு..


எனக்கு விதிக்கப்பட்ட ஆயுளில் வயது இருபதாயிருக்கும்போதே வயிற்றுக்குச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு வந்தேன் நான். ஆண்டுதோறும் அரேபியர்களை நம் தேசம் சுற்ற அழைத்துக்கொண்டும் என் முப்பதாண்டு  ஊதியத்தை தாயத்துக்கே அனுப்பிக்கொண்டும் நம் தேசிய வருமானத்தை உயர்த்த அந்நியச்செலாவணி சேர்த்துக்கொண்டும்; தன் மண்ணையும் மக்களையும் நெஞ்சினில் சுமந்துகொண்டு செயற்படும் ஓர் இலங்கைத்தூதுவர் மாதிரி இயங்கிக்கொண்டும்; சவூதியில் நான் அறநெறி பிறழாத அமைதி வாழ்க்கையை சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன். இலங்கையில் மதசார்பற்ற மக்களாட்சித் தேர்தலில் உங்களுக்கு நான் வாக்களித்தேன். உங்களை ஜனாதிபதியாக்கிய பெருமக்களில் நானும் ஒரு பிரஜாயுரிமை பெற்ற வாக்காளன் என்ற பெருமிதத்தோடு புலம்பெயர் மக்கள் சார்பில் என் தாய்மொழி தமிழில் உங்களோடு பேச நான் ஆசைப்படுகிறேன்.

ஒருநாள் உங்கள் தமிழ்க்குரல் கேட்டோம் - பரவசமானோம். தமிழை நேசிக்கிறீர்கள் - நன்றி. தாயகத்தைப் பூசிக்கிறீர்கள் - மகிழ்ச்சி. தாய்நாட்டில் இனபேதம் கூடாது என யோசிக்கிறீர்கள் - அபாரம். 'சமுதாயத்துக்கான ஓரே சமநீதி' என்று செப்புகிறீர்கள் - அற்புதம். முள்ளிவாய்க்கால் போர் முடிந்த மூன்றாண்டுகளில் முழுக்கட்டமைப்பு வசதிகளையும் அடைந்துவிட்டதாக அறியும்போது எங்கள் நெஞ்சு மகிழ்ந்ததை விட நெகிழ்ந்ததே அதிகமென உங்களைப் பாராட்டுகின்றோம். ஆனால் மரஞ்செடிகொடிகளும் மலைவெளிகளும் பூத்துக் கிடக்கும் புல்வெளிகளும் கல்விருட்சங்களாய் எழுந்து நிற்கும் கட்டிடங்களும் துறைமுகங்களும் விமான நிலையங்களும் விளையாட்டரங்குகளும் நம் நாட்டின் ஆன்மாவை சர்வதேசங்களுக்குச் சொல்லி விட முடியாது. கிராமங்களும் குழந்தைகளும் முதியவர்களும் அகதிகளும் தாழ்ந்து கிடக்கும் தமிழ்முஸ்லீம் சிங்கள மக்களுமே இலங்கையின் ஆன்மாவைச் சொல்லும் இன்றைய அடையாளங்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்

 'இலங்கை சோபிதங்களின் சொர்க்கபூமி – ஆதியில் ஆதாம் ஏவாள் வாழ்ந்த தோட்டம்' என மேற்குலக ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இலங்கையும்; இந்தியாவும் இணைந்திருந்த அன்றைய லெமூரியக்கண்டத்தில் ஓரங்கமான இலங்கையில்தான் முதல்மனிதன் ஆதம் நபி (ஸல்) அவர்களின் பிரவேசம்; தொடங்கியது. அதன் பின்னரே உலக மானுடம் உற்பத்தியானது. இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் 7360 அடி உயர மலையில்; இறைவனால் ஆதம் (அலை) இறக்கப்பட்டபோது அவரது 5 அடி 4 அங்குல பாதச்சுவடு பதிந்தது. அதனால்தான் அந்த மலை 'ஆதம்மலை - பாவாத மலை'  என்றழைக்கப்படுகின்றது. இந்துக்கள் 'சிவனொளி பாதமலை' எனவும் - பௌத்தர்கள் 'புத்தபாத மலை' என்றும்; அழைக்கின்றார்கள். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள கடற்கரைப் பகுதியில் அரேபியர்களின் வருகைக்குப் பின்னரே வணிகம் - பயணம் - இனஉறவு - இஸ்லாமிய ஆன்மீகம் - பரஸ்பரம் - தமிழ் சிங்கள முஸ்லீம் கலப்புத் திருமணம் ஆகியன அதிகரித்தன. அதனால்தான் தனிக் கலாசார முஸ்லீம்களின் உணவு - உடை - நம்பிக்கை - வாழ்வியல் - பொருளாதாரம் - ஆன்மீகமெல்லாம் இலங்கையை நிறமாற்றம் செய்தன என வரலாறு தெரிவிக்கின்றது. சனநாயக சமஆட்சி செய்யபப்படவேண்டுமென்றுதான்; சென்ற நூற்றாண்டில் இந்நாட்டை மீட்டோம். ஆனால் சிறுபான்மை எனப் பிரிக்கப்பட்ட இனத்தவர்க்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் அக்கால தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கிடையே இருந்த நட்புறவு தயிரும் சோறும் சீனியும் போல சுவையாய் இருந்ததை அதே வரலாறு கூறுகின்றது. இலங்கையை ஆண்ட அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள 'சிறு பான்மை – பெரும்பான்மை' என்றே பிரித்தார்கள். அதனால்தான் இன்றுவரை சிறுபான்மை மக்கள் அடக்குமுறைக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைக்கும் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். 

நம் தேசத்தில் 1915ல் முஸ்லீம்களுக்கு எதிராக கலகெதரயில் ஆரம்பித்த பேரினவாதம் தன் வன்முறையை 1977ல் புத்தளம் மஸ்ஜிதிலும் 1980ல் காலி நகரிலும் 1990ல் புலிகள் தேசமெங்கிலும்; 2001ல் மாவனல்லையிலும் நிகழ்த்தின. அதன் தொடர்ச்சியாய் இப்போது பொதுபலசேனா - சிங்கள ராவய – ராவணா பலய  –  ஜாதிக ஹெலஉறுமய போன்ற போலிப் பிரசாரகர்கள் இஸ்லாத்துக்கு எதிராக - இஸ்லாமிய வணக்க ஸ்தலங்களுக்கு எதிராக - இஸ்லாமிய நீதிமன்றத்திற் கெதிராக - வதிவிடங்களுக்கு எதிராக - வர்த்தக நிலையங்களுக்கு எதிராக - ஹலால் உணவுக்கெதிராக  – 'பர்தா - ஹிஜாப்' முழுஆடைக்கெதிராக எல்லா முஸ்லீம் கலாசார தளங்களிலும்; வீதி ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்த இனவாத அமைப்புகள் முஸ்லீம்கள் மீது ஆதிக்கம் செலுத்தி தேசத்தில் குழப்பத்தை சாதிக்க நினைக்கின்றன. 

விடுமுறையில் தாயகத்துக்குச் சென்று வந்த எனது நண்பர் ஒருவரைச் சமீபத்தில் சந்தித்தபோது 'இன்றைய இலங்கை நிலை மிகப் பயங்கரமானது. பொதுபலசேன பிக்குகள் இனஐக்கியத்தை ஒழிக்கவே ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பாதுகாப்புத் துறை ஒரு பக்கபலத்தோடு நிற்பதன் விளைவாக தம்புள்ள – அனுராதபுரம் - குருநாகல் - தெதுறுஓயா – ராஜகிரிய – ஒபேசேகரபுர – தெஹிவளை போன்ற இடங்களில் இதுவரை 23 இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள்; தாக்கப்பட்டுள்ளன. சென்ற சில மாதங்களில் மட்டும் மன்னம்பிட்டிய – டிக்வெல்ல – பொரல்ல – திகாரிய – கொட்டாஹென –கல்லெலிய - மகரகம – கொழும்பு – காலி – மாத்தறை – கோட்டை  போன்ற இடங்களில் முஸ்லீம் பெண்கள் மீதும் - முஸ்லீம் பள்ளி மாணவிகள் மீதும் -கடைகள் மீதும் சில காடையர்களால் பல வன்மங்கள் நிகழ்த்தப்பட்டபோதும் அந்தந்தப் பகுதியிலுள்ள பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதாளக்குழு - வெள்ளைவேன் - கிறிஸ்மனிதன் - யக்காக் குண்டர்கள் போன்ற  பன்முக மூடிகளைப் போட்டுக்கொண்ட அரசாங்கம் இப்போது பொதுபலசேனா என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு நாடகமாடுகின்றது. தமக்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகளை மூடிமறைக்க பொதுபலசேனாவையே இப்போது பயன்படுத்துகின்றது. ஆனால் இது ஆளும் அரசாங்கத்திற்கு ஓர் அவப்பெயரையும் உண்டாகியிருக்கின்றது'... என்று சொன்னவர் பொதுபலசேனா வன்முறை செய்வதை பார்த்;;;துக்கொண்டும் - வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளித்துக்கொண்டும் - முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பளிக்காமல் பராமுகம் செய்துகொண்டும் - குற்றவாளிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டிக்கொண்டும்;; அரசாங்கம் அச்சுறுத்தும்போது இலங்கையிலும் ஒரு 'மியன்மார்' உருவாக்க சதித்திட்டம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் மக்;களுக்குள் ஏற்பட்டிருக்கின்றது. இப்படியான சில சம்பவங்களை 'நெற்றிலும் யூரியூப்'பிலும் பார்க்கலாம்' என்றார்.

இலங்கை வரலாற்றில் முஸ்லீம்கள்  சரித்திர ரீதியில் பல நூற்றாண்டுகள் வாழ்பவர்கள். இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் இனஒற்றுமைக்காகவும்; பல்துறைகளிலும் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்பதை நீங்களும் மறந்திருக்கமாட்டீர்கள். 'மதம் வேண்டாம் மனிதமே வேண்டும்' என்றார் புத்தர். அவர் போர்க்களத்து ரத்தத்தையும் புண்களின் சீழையும் கண்ணீர்க் களிம்பிட்டுக் காய வைத்தார். ஆனால் புத்தபிக்கு வேஷத்தில் வன்முறை செய்யும் பொதுபலசேனாவை மனித அமைதி போதித்த புத்தர் மட்டமல்ல கர்த்தரும் கூட மன்னிக்கமாட்டார். இப்படியே இனவாதம் தொடருமானால் மகிந்த ஆட்சி மட்டுமன்றி பொதுபலசேனா ஆட்சியும் இருவேறு ஆட்சிகள் இலங்கையில் ஏற்பட்டு விடும் என அச்சப்படுகின்றார்கள். எனவே இத்தீய சக்திகளைத் தடைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.   

இஸ்லாம் என்பது சாந்தி மார்க்கம் - புனித மானுடத்தின் பூரண வாழ்க்கைத் திட்டம். இது மனித நேயத்தையும் மானுட சுதந்திரத்தையும் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றது. மானுடத்தை மேம்படுத்தும் ஒவ்வொரு செயலையும் இறைவழியில் செய்ய வழிகாட்டுகின்றது. மனித உயிர்  - மனித உரிமை – மக்கள் உடைமை - சமூக ஒற்றுமை என்பவற்றை பேணிக் காப்பது பற்றிய வாழ்க்கைமுறையை முஹம்மது (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியிருக்கின்றார். அவர் அரேபிய மக்களின் அதிபராக இருந்தபோதும் பிற மதங்களை மதித்து  - எதிரியை மன்னித்து –   உயிர்களை நேசித்து - துன்பம் நேரும்போதெல்லாம் பொறுத்தருள்ந்து - அறநெறியைக் கடைப்பிடித்து எளிமையாய் வாழ்ந்து காட்டினார். அவர் கடைசி மூச்சை விட்டபோது அவர் அணிந்திருந்த ஆடையில் பல ஒட்டுக்கள் இருந்தன.  

'கொடுப்பவன் நான் என்னிடமே கேளுங்கள்' என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான். அதனால்தான் உலக முஸ்லீம்கள் நபிகளாரை அடியொற்றி இன ஒற்றுமைக்காகவும் - தேசிய நன்மைக்காகவும் - சமுதாய நலனுக்காகவும் - ஜனநாயக உரிமைக்காவும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். குனூத்;' என்ற அறபுப் பிரார்த்தனையின்;போது கூட 'இறைவா! நீ நேர் வழிகாட்டியவர்களில் எனக்கும் அதை வழங்கு. நீ எவர்களுக்கு ஆரோக்கியம் வழங்கினாயோ அதையே எனக்கும் வழங்கு. நீ பொறுப்பேற்றவர்களில் என்னையும் ஒருவானாக ஏற்றுக்கொள். நீ வழங்கியவற்றை எனக்கும் சேர்த்தருள் புரி. நீ எதைத் தீமையென்று தீர்ப்புச் சொன்னாயோ அதிலிருந்து என்னை நீ காப்பாற்று...' என்று முறையிடுகிறார்கள். மற்றும்படி ஆயுதம் கேட்கவும,; அடக்குமுறை செய்யவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததில்லை. அது தன்னை 'ஏற்றுக் கொள்' என்று இன்னோர் இனக்குழுவை வற்புறுத்தியதுமில்லை. தன்னைப் 'புரிந்து கொள்'  என்றே போதிக்கின்றது. இதை மனிதகுலம் மனங்கொண்டால் இந்து – பவுத்தம் - சமணம் - கிறிஸ்த்தவம் ஆகிய மதத்தவர் யாவரும் இந்த மண்ணில் பெற்ற மாபெரும் ஜெயம் என்போம்.

சமீபத்தில் அமெரிக்காவின் பொஸ்டனில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் 'பயங்கரவாதமல்ல'  என்று ஒபாமா கூறியிருக்கும்போது அது 'ஜிஹாத் - அல் காயிதாவின் செயல்' என்று பொய்பலசேனா சொன்னதும் முஸ்லீம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை அமெரிக்கா கண்டுகொண்டது. முஸ்லீம்பெண் றிஸானா நபீக்கின் கொலைக்குற்றத்திற்காக 'ஷரீ;ஆ'ச் சட்டம் தண்டித்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தபோதே பொதுபலசேனா அந்த சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி  இலங்கைக்கும் சவூதிக்குமிடையில் ஒரு பகையையே உண்டாக்கி விட்டது. றிஸானா நபீக்கின் இழப்புக்கு நாம்தான் காரணம். அதில் மாற்றுக் கருத்து வேறில்லை. நம் ராஜதந்திர உறவிலும் -  இலங்கை வெளியுறவுத்துறையிலும்; உள்ள பிழைகள் - பலவீனங்களெல்லாம் ஓர் ஏழைப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் செய்திருக்கிள்றன என்பது காலம் கடந்தும்; வலிக்கின்ற துன்பமாகும். இருந்தாலும் இந்த - இலங்கை சவூதி உறவு விரசல் நீண்டால் நஷ்டமடையப்போவது இலங்கைதான் என்பதை நாட்டுமக்கள் நாமுணர வேண்டும். 

எண்ணை வளம் கண்ட காலத்திருந்தே சவூதி - குவைத் - கட்டார் - பஹ்ரைன் - லிபியா - ஈரான்-  ஈராக் - மலேசியா - பாகிஸ்தான் ஆகிய முஸ்லீம் நாடுகள் வேலைவாய்ப்பு உட்பட நம் நாட்டு பொருளாதார  உயர்ச்சிக்கே உதவுகின்றன. இனமதம் பாராமல் சவூதி அரேபியா வருடந்தோறும்; மகாவலி - பெற்றோல் - கடனுதவி - நீர்பாசனத் திட்டம் - விளையாட்டரங்கு - தொழில் வாய்ப்பு என இலங்கைக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. பள்ளிகள் கட்டுதற்கும், பாலங்கள் செய்வதற்கும், நெடுஞ்சாலைகள்; அமைப்பதற்கும், செவிலியர் பயிற்சிக்கூடம், கல்விக் கூடம், பல்கலைக்கழகம், வைத்திய சாலைகள், 600 வீட்டுத் திட்டம்;, 5 பில்லியன் டொலர்; வருமானத் தொமில் வாய்ப்பு இப்படி கோடிகோடியாய் நமக்குக் கொடுத்த கொடைகள் ஏராளம் பொதுச் சொத்துக்களாய் மாறிவிட்டன. இன்னும் ஜெனீவா ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த மனிதஉரிமை மீறல் தீர்மானத்தில் சவூதி அரேபியா தலைமையில் எல்லா முஸ்லீம் நாடுகளும் இலங்கைக்கே தொடர்ந்து ஆதரவளித்தன. ஆனால் அவற்றுக்கு நாம் என்ன கொடுத்தோம். எல்லாவற்றையும் வரவு வைத்துக்கொண்டேமே தவிர வாழவைத்துக் கொள்ளவில்லை. நமது நன்றியைக்; கூடத் தொலைத்துவிட்டோம். இவைகளை இரைமீட்டிப் பார்க்கும் எங்கள் உண்மையான உணர்ச்சிகளையும் கேள்விகளையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

எங்கள் அரசியல்வாதிகளுக்கு அரசியற்கொள்கை என்பது தேவையானபோது தைத்துக்கொள்ளும் சட்டை – நியாயம் என்பது தேவையானபோது கிழித்துப் போடும் சட்டை – ராஜதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவரின் அராஜகத்திற்கு மறுபெயர். இந்த அச்சுப்பிழை தவறாத அடிச்சுவட்டில் ஆதிக்கும் அரசியற்சாசனமாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் இந்த வளரும் நாட்டை உங்கள் சிந்தனையால் ஐக்கிய இனங்களின் வாழிட வடிவமாய் மாற்றியமைத்து எக்காலத்துக்கும் ஏற்ற பொன்னாடையாய்த் தைத்துப் போட்டு புது மெருகூட்டச் செய்வீர்களென தமிழ்பேசும் மக்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும்  அந்த நன்னம்பிக்கை உங்களால்; நிச்சயம் நிறைவேறுமென நாங்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கின்றோம். 

'நான் எப்படி ஒருவருக்கு அடிமையாக இருக்க முடியாதோ அதுபோலதான் யாருக்கும் எஜமானாகவும் இருக்க முடியாது' என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால்; பயங்கரவாதத்தால் பின்னடைந்தாலும் உங்கள் ஆட்சியில்தான் நாங்களெல்லோரும் இலங்கை மன்னர்களாகியிருக்கின்கிறோம். இனி உங்கள் முயற்சி உண்மையான சமுதாய நல்லிலக்கணத்தை ஏற்படுத்தவும் மனித உரிமைகளை அங்கீகரிக்கவும், பல்லின மக்கள் பரஸ்பரம் நிலைக்கவும், நீதி - நிலப்பகிர்வு – தொழில் வசதி – கல்வி வளர்ச்சி – அரசபதவி - சுகாதாரம்  - பாதுகாப்பு - பொருளாதார அபிவிருத்தி போன்ற சொத்துக்களை சரிசம விகிதத்தில்  நீங்கள் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கவும,; உலகத்தை வென்றெடுக்கும் உங்கள் மகிந்த சிந்தனை மனித தத்துவமாய் மலரவும ஜப்பான் - சீனா -  அமெரிக்கா -  சிங்கப்பூர் போன்ற ஜக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை எழுச்சிகொண்ட தேசமாய் உயரவும் நீங்கள்  உதவுமாறு உங்களை அன்போடு வேண்டுகின்றோம். உங்கள் எல்லா வெற்றியும்; மனிதநேயத்தில் இனி நிறையட்டும். 
நெஞ்சம் நிறைந்த நன்றி

                                  மிகப் பணிவன்போடு,
                                  இனியவன் இசார்தீன்

Source : Jafna Muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter