அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஓயாத போராட்டத்தினால் முழக்கம் மஜீட் வெற்றி; அமைச்சர் நஸீர் அஹமதின் PRO வாக நியமனம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரான முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினரான முழக்கம் மஜீட் தனது போராட்டத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
நீண்ட இழுபறி- பலத்த போட்டி- சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடைகள், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பொது மக்கள் தொடர்பு உத்தியோகத்தராக அவர் நியமனம் பெற்றுள்ளார்.
திருகோணமலையிலுள்ள தனது மாகாண விவசாய, கால்நடை, சுற்றுலாத்துறை அமைச்சில் வைத்து அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், முழக்கம் மஜீதுக்கான நியமன கடிதத்தை கையளித்துள்ளார்.
இப்பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வந்தது. கடந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பலரும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் இப்பதவியைக் கோரி தலைவர் ஹக்கீமையும் அமைச்சர் நஸீர் அஹமதையும் வற்புறுத்தி வந்தனர்.
இதற்கு மத்தியில் முழக்கம் மஜீதும் இப்பதவி தனக்கே தரப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி இருந்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட முழக்கம் மஜீட் அதில் தோல்வியுற்ற போதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கேட்ட போதிலும் இவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் கடும் சினமுற்று தாருஸ்ஸலாமில் இருந்து வெளியேறிய இவர் தலைவர் ஹக்கீமுடன் கோபித்துக் கொண்டு கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் சாய்ந்தமருது இப்தார் நிகழ்வுக்கு சென்றிருந்த தலைவர் ஹக்கீம், முழக்கம் மஜீதின் வீட்டுக்கும் சென்றிருந்தார். இதன்போது தலைவர் ஹக்கீம் மீது மஜீதும் அவரது குடும்பத்தினரும் சீறிப் பாய்ந்து தூசித்தனர். சுமார் 15 நிமிடங்கள் மஜீதின் வீடு முழங்கியது. ஹக்கீம் மீது தூசணங்கள் பறந்தன.
இதன்போது தலைவருடன் சென்றிருந்த செயலாளர் ஹசனலி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் ஒருவாறு தலைவரைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தின் போதும் அதற்கு முன்னர் வேட்பாளர் தெரிவின்போதும் தலைவர் ஹக்கீமினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரமே இப்பதவியை முழக்கம் மஜீத்துக்கு வழங்குமாறு தலைவர் சிபார்சு செய்திருந்தார்.
இருந்த போதிலும் கடந்த மூன்று மாதங்களாக கட்சிக்குள் நிலவிய கடும் போட்டி காரணமாக இவருக்கான நியமனம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது.
அமைச்சர் நஸீர் அஹமத் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
முழக்கம் மஜீத் தலைவராக பதவி வகிக்கும் அஷ்ரப் சமூக சேவைகள் நற்பணி மன்றம் அமைச்சர் நசீரை கடுமையாக சாடி ஊடகங்களில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. கட்சியின் அதியுயர் பீடத்திலும் முறையிடப்பட்டது. இவ்வாறு பல நகர்வுகளை செய்து ஓயாமல் போராடி முழக்கம் மஜீத் ஜெயித்திருக்கிறார். இல்லா விட்டால் முழக்கம் மஜீதை பூச்சுற்றியே ஏமாற்றி இருப்பார்கள்.
தொடர்புடைய செய்தி: www.metromirror.lk November 10, 2012 | 3:38pm
முழக்கம் மஜீதுக்கு இணைப்பாளர் பதவி வழங்காமல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் ஏமாற்றுகிறார்!
-எஸ்.எம்.அறூஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத்துக்கு கட்சியின் தீர்மானத்தின் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் இணைப்பாளர் பதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் எம்.எச்.எம்.அஸ்ரப் சமூக சேவைகள் நற்பணி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எம்.எச்.எம்.அஸ்ரப் சமூக சேவைகள் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் அபுபக்கர் பழில் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,
“முதலாவது வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனது உயிரையும் துச்சமாக மதித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் முழக்கம் அப்துல் மஜீத்தாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்று ஆரம்பிக்கப்பட்டதோ? அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒருவர்.
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும், 2012ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு அப்துல் மஜீத் முன்வந்த போதிலும் கட்சித் தலைவர் ஹக்கிமின் வேண்டுகோளினால் அந்த வாய்ப்பினை விட்டுக் கொடுத்த ஒரு தியாகியாகவே நாம் அவரைப் பார்க்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் கட்சியின் தலைவரும் செயலாளர் உட்பட உயர்பீட அங்கத்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையில் ஆட்சியின் பங்காளியாக வருமானால் முழக்கம் அப்துல் மஜீத்துக்கு பதவியொன்றினை வழங்குவோம் என்று அவரின் வீடு தேடிச் சென்று கூறியிருக்கின்றனர்.
அதன் நிமித்தம் விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் முழக்கம் அப்தல் மஜீத்துக்கு இணைப்பாளர் பதவியை வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.
தலைவரின் பணிப்புரையை ஹாபிஸ் நஸீர் நிறைவேற்றாது தொடர்ந்தும்; ஏமாற்றும் செயற்பாட்டிலேயே இருப்பதாக அறிகின்றோம்.
அது மட்டுமல்லாமல் திருகோணமலைக்கு அப்துல் மஜீத்தை, அமைச்சர் ; ஹாபிஸ் நஸீர் அஹமட் வரச்சொல்லியிருக்கின்றார். அவரும் அங்கு சென்றிருக்கின்றார். அடுத்த கிழமை நான் உங்களைச் சந்திக்கின்றேன். மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வி கண்ட பலர் இருப்பதாகவும் வேறு ஒழுங்கில் எல்லோரையும் கவணிப்பதாகவும் அமைச்சர் ஹாபிஸ் கூறியிருக்கின்றார்.
இது விடயத்தில் எமது அமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. கட்சிக்காக உழைத்து வரும் ஒரு தியாகியை இவ்வாறு அழைக்கழிப்பதும், கட்சியின் தேசியத் தலைவர் ஹக்கீமின் வேண்டுகோளை கட்சிக்குள் அண்மையில் தான் வந்து பதவி பெற்ற ஹாபிஸ் நஸீர் புறக்கணித்திருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
பதவிகள் தன்னைத் தேடி வந்தபோதல்லாம் கட்சியே எனது மூச்சு என்று வீராப்புப் பேசிய ஒரு உண்மைப் போராளிக்கு இவ்வாறு நடப்பது கட்சியின் அடிமட்ட போராளிகளையே அவமதிப்பதற்குச் சமமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிச் சென்று அமைச்சர் அதாஉல்லாவோடு இணைந்து கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த யூ.எல்.உவைசுக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டு அவர் கௌரவப்படுத்தப்பட்டுள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிடுகின்றோம்.
எனவே, கட்சியினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக முழக்கம் அப்துல் மஜீத்துக்கு மாகாண அமைச்சின் இணைப்பாளர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter