இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“சில இனவாதிகள் ஹலால் சான்றிதழை தூக்கி பிடிப்பதற்கு அரச சார்பு இனவாதிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவரின் இது சம்பந்தமான கருத்து பாராட்டுக்குரியதாகும். ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது அந்த உணவை முஸ்லிம்கள் உண்ணலாமா இல்லையா என்பதற்கான உத்தரவாதம் மட்டும்தான் என்பதை அவர் விளங்கியுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
பொதுவாக இந்து, பௌத்த மக்களில் சிலர் உணவகங்களுக்கு சென்றால் அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டு உறுதிப்படுத்துவதை அன்றாடம் நாம் காண்கிறோம். விமானங்களில் கூட அசைவமா சைவமா என கேட்ட பின்பே உணவை வழங்குகிறார்கள். இவ்வாறே ஒரு முஸ்லிம் தனக்குரிய உணவு ஹலாலா (ஆகுமானதா) இல்லையா என்பதற்கான உத்தரவாதமே இந்த ஹலால் பத்திரமாகும்.
இதனை எதிர்ப்பதன் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே மோதல்களை ஏற்படுத்தி இதன் மூலம் வாக்குகளை பெற சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அதேவேளை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹலால் சான்றிதழுக்கான வரவுகள் செலவுகள் எவ்வளவு என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற அதன் வருடாந்த மாநாட்டில் கூட உலமா சபையின் வரவு செலவு பற்றிய அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
அதேபோல் அதன் நிர்வாகமும் பல வருடங்களாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படவில்லை. சில அரசியல் கட்சிகள் போல் உலமா சபையும் சிலரின் ஏக போக சொத்தாகவும் ஆயுட்கால தலைவர், நிர்வாகம் என்ற நிலையே காணப்படுவது கவலைக்குரியதாகும் என்பதை உலமா கட்சி அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளது. அவ்வப்போது நாம் பகிரங்கமாக வழங்கும் எமது ஆலோசனைகளை உலமா சபையின் நிர்வாகம் ஏற்காததன் காரணமாக இன்று முழு முஸ்லிம் சமூகமும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
உலமா சபையின் கணக்கு விபரம் என்பன அதன் உறுப்பினரான எமக்குக் கூட அதுவும் கல்முனை உலமா சபையின் உப தலைவரான எமக்கே தெரியாத நிலையில் மாற்று சகோதரர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? இதன் காரணமாக உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி என்ற வகையில் எம்மாலும் இனவாத கட்சிகளுக்கு பதில் அளிக்க முடியாதுள்ளது.
ஆகவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவரையும், ஊடகங்களையும் உலமா சபை அழைத்து ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்தத்தெளிவு சரியானதா என்பதை தே.தே.இயக்கத் தலைவர் வாயிலாக ஊடகங்களுக்கு சொல்லப்பட வழி சமைக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது” என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக