நேற்று வெலிக்கடையில் சிறைக்கைதிகள் ஆயுத களஞ்சியசாலையை உடைத்து 82 ஆயுதங்களை தம் வசப்படுத்திக் கொண்டதன் விசேட அதிரடிப்படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது விசேட அதிரடிப்படை வீரர்கள் 13 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் விசேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்பட் டுள்ளார் எனவும் அமைச்சர் கஜதீர குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல்ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுமுன்தினம் நடைபெற்ற சம்பவம் குறித்து காலையில் விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் 3621 சிறைக்கைதிகள் உள்ளனர். சிறைச்சாலைகளில் சட்டவிரோத பொருட்கள் கண்டறிவதற்காக அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் நடைபெறுவதுண்டு. வெலிக்கடை சிறைச்சாலையில் இவ்வாறு மூன்று தடவைகள் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முற்பட்ட போதும் கைதிகளின் எதிர்ப்பினால் முடியாமல் போனது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடும் குற்றச் செயல்களுக்கு உட்பட்டவர்கள் என குறிப்பிடப்படுபவர்கள் 900 பேர் 2 வார்ட்டுக்களாக பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிக்குள் விசேட அதிரடிப்படையினரும் சிறை அதிகாரிகளும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டவிரோத பொருட்களை மீட்டு வெளியேறிக் கொண்டிருந்த வேளையிலேயே சிறைக்கைதிகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
சிறைச்சாலையிலுள்ள ஒளடத பிரிவிலுள்ள போதை ஏற்படுத்தக்கூடிய சில மாத்திரைகளை உட்கொண்ட பின்னரே சிறைக்கைதிகள் வெறித் தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சிறைச்சாலையின் ஆயுத களஞ்சிய சாலையை உடைத்து அதிலிருந்த 82 ஆயுதங்களை எடுத்துக்கொண்ட கைதிகள் சரமாறியாக சுட்டுள்ளனர்.
மோதலின் போது காயமடைந்த 36 சிறைக்கைதிகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டனர். இவர்களில் 16 பேர் உயிரிழந்திருந்தனர். நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் அறிக்கை சமர்ப்பிக்கும் போது கிடைத்த தகவலின்படி 11 சிறைக்கைதிகள் ஆயுதங்களுடன் இறந்துகிடப்பதாக தனக்கு கிடைத்த இறுதி தகவல் தெரிவிக்கிறது என தெரிவித்தார்.
நேற்று சிறைச்சாலைக்குள் 25 அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கைதிளுக்கு தொடர்ந்தும் பணிப்புரை வழங்கியதையடுத்து 11 பேர் ஆயுதங்களை ஒப்படைத்ததாகவும் மேலும் 5 ஆயுதங்கள் மட்டுமே மீட்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏனைய ஆயுதங்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிறை அதிகாரிகளின் ஆளணி பற்றாக்குறை காரணமாகவும், தேடுதல்களை நடத்துவதற்குரிய நவீன உபகரணங்கள் சிறை அதிகாரிகளிடம் இல்லாத காரணத்தினாலேயே விசேட அதிரடிப்படையின் உதவி நாடப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் கஜதீர வெலிக்கடை சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட விசேட குழுவொன்றும், அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
-தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக