அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அக்கரைப்பற்று இப்தார் திட்டமிட்டு சீர்குலைப்பு; பாரிய தேர்தல் மோசடிக்கான ஆரம்பம்!


-செயிட் ஆஷிப், பி.எம்.எம்.ஏ.காதர், எம்.ஐ.எம்.பைசால்- 
அக்கரைப்பற்றில் எமது இப்தார் நிகழ்வினை பொலிஸாரின் உதவியுடன் குழப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது பாரிய தேர்தல் மோசடியொன்றுக்கான ஆரம்பமாகும். ஆகையினால அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இப்தார் வைபவம் குழப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த சம்பவத்தின்போது மிகவும் பக்கச்சார்புடன் நடந்து கொண்டுள்ளார். இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் தான் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அக்கரைப்பற்றுப் பிரதேசம் முதல் பொத்துவில் பிரதேசம் வரையிலான எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்கு மோசடிகள் இடம்பெற்றன.
அக்கரைப்பற்றில் திங்கட்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு பொலிஸ் அனுமதியைப் பெறுவதற்காக ஐந்து, ஆறு நாட்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த நடவடிக்கையானது அக்கரைப்பற்று பொலிஸாரால் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது.
ஆயினும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறையிலுள்ள உதவிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கட்சித் தலைவர் என்கிற வகையில் பேசி இறுதி நேரத்திலேயே அந்த இப்தார் நிகழ்வுக்கான அனுமதியைப் பெறக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி மற்றும் அக்கரைப்பற்றிலுள்ள வேட்பாளர்களை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டதோடு அக்கரைப்பற்றிலுள்ள அமைச்சர் அதாஉல்லாவுக்கு முழுக்க முழுக்கப் சார்பாகவும் நடந்து கொண்டார்.
அக்கரைப்பற்றில் ஓர் அமைச்சர் இருக்கும் போது, வெளியூர்களிலிருந்து அமைச்சர்களை ஏன் நீங்கள் இங்கு அழைத்து வர வேண்டும்? அதற்கு என்ன தேவை இருக்கிறது என்று கேட்டு, மோசமாக அதட்டுகின்ற பாணியில் எமது அமைப்பாளர் மற்றும் வேட்பாளர்களிடம் மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடந்துள்ளார்.
இது குறித்து உதவிப் பொலிஸ் மா அதிபரை நான் சந்தித்து முறையிட்டேன். அத்தோடு கடந்த பல வருடங்களாக குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கையானது பக்கச் சார்பாக அமைந்து வருவது குறித்தும் உதவிப் பொலிஸ் மா அதிபருக்குத் தெளிவுபடுத்தினேன்.
இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்து தேர்தல் ஆணையாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் முறையிட்டுள்ள பல ஆவணங்களையும், கடிதங்களையும் ஒரு கோவையாக நாம் வைத்துள்ளோம்.
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு போக வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபர் என்னைத் தொடர்பு கொண்டு மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார். மேலும், இப்போது இருக்கும் கலவரங்களைச் சமாளிப்பதே கஷ்டமாக இருக்கிறது, இந்த நிலையில் அக்கரைப்பற்றில் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கு நீங்கள் போகாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறி நீங்கள் செல்வதற்கு நேர்ந்தால் உங்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதற்கு நாம் முழு மூச்சுடன் ஏற்பாடுகளைச் செய்வோம் என்றும் அவர் என்னிடம் கூறினார். பொலிஸ் மா அதிபருக்கு நான் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்தினேன்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து தற்போதைய தேர்தல் வரை, குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கைகள் மிகவும் பக்கச் சார்பாகவே இருந்து வந்துள்ளன.
இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்தவர்களை உரிய இடத்துக்குச் செல்ல விடாமல் பாதையை மறித்துக் கொண்டு தடுத்ததோடு, இப்தார் நிகழ்வினைக் குழப்புவதற்கு வந்த கும்பல்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றார்.
அதன்போது, எமது நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பக்கச் சார்பான நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். கலகக்காரர்களுக்கு எதிராகப் பிரயோகிக்க வேண்டிய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பிரயோகிக்கப்பட்டது.
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வினை பொலிஸாரின் உதவியுடன் குழப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது பெரிய தேர்தல் மோசடியொன்றுக்கான ஆரம்பப்படியாகும். அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்பார்வையில்தான் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அக்கரைப்பற்றுப் பிரதேசம் முதல் பொத்துவில் பிரதேசம் வரையிலான எல்லா வாக்குச் சாவடிகளிலும் மோசடிகள் இடம்பெற்றன. ஏறத்தால 90 வீதம், 95, 98 வீதம் வரை வாக்களிப்பு நடந்த மிகப் பெரும் அதிசயம் நடந்தது.
குறித்த இந்த பொலிஸ் அத்தியட்சகரின் நடத்தை குறித்து நாம் தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டதையடுத்து, தேர்தல் ஆணையாளர் தனது விசேட பிரதிநிதியாக பதுளையில் இருக்கும் உதவித் தேர்தல் ஆணையாளரை அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இங்கு வந்திருந்த உதவித் தேர்தல் ஆணையாளரும், இப் பகுதியில் பொலிஸாரின் பாரபட்சமான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தான் அவதானித்ததாகவும் இது தொடர்பில் மேலிடங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் என்னிடம் கூறினார்.
இந்தப் பிராந்தியத்தில் வாக்கு மோசடிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடந்த பல தேர்தல்களில் அக்கரைப்பற்றிலும், அதற்கப்பாலுள்ள தமிழ் பிரதேச வாக்குச் சாவடிகளிலும் நேர்மையான வாக்களிப்பு இடம்பெறமுடியாத நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றியானது எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட வெற்றியாகும். இல்லையென்றால், கடந்த கிழக்குத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.
சில வாக்குச் சாவடிகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றிருந்தமையை, அப்போதைய தேர்தல் ஆணையாளரிடம் நான் சுட்டிக்காட்டினேன். அதற்கு அவர், ‘நிச்சயமாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது, என்றாலும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் எனக்குச் செய்வதற்கு வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லை. தேவையானால் நீங்கள் நீதிமன்றம் செல்ல முடியும். இருந்தாலும், மோசடி இடம்பெற்றுள்ளதை நான் ஏற்றுக் கொள்கிறேன்என்று கூறினார்.
ஆகையினால் அக்கரைப்பற்று உள்ளிட்ட முழு அம்பாறை மாவட்டத்திலும் நீதி நியாயமானதொரு தேர்தல் நடைபெறும் வகையில் குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை இடமாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையாளர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம்என்றும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் உட்பட மு.கா.வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter