அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 25 ஆகஸ்ட், 2012

பொம்மை ஆட்சியா? அதிகாரத்துடன் கூடிய நல்லாட்சியா? மக்களே தீர்மானிக்கட்டும்!


கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சி வேண்டுமா? அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது;,
ஏறாவூரில் இந்தத் தேர்தல் மேடையில் பேசும் பொழுது கடந்த சில நாட்களாக நிலவிய சலனம், சஞ்சலம் என்பனவற்றுக்கு மத்தியில் கட்சியின் தலைமை என்ன சொல்லப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளின் முகங்களில் பிரதிபலிப்பதை என்னால் உணர முடிகிறது.
நன்கு பழுத்துக் கனிந்த பழமாக கட்சியின் வெற்றி திரண்டு வரும் நிலையில் மரத்தைக் குலுக்கி பழத்தை விழ வைக்கும் அல்லது அந்தப் பழத்தைப் குத்திக்குதறி அழுக வைக்கும் சம்பவங்கள் எதையும் கட்சிப் போராளிகள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகின்றது.
இன்று காலை எனது அழைப்பையேற்று தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எனது வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்துரையாடிய போது மேடைகளில் கட்சிக்காக உரையாற்றுவதாகக் கூறியிருக்கிறார்.
கட்சியின் வெற்றிப் பாதையை நோக்கிய  திக்குத் திசைகள் பற்றியும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் நாம் நிதானமாக சிந்தித்து மிகவும் சாதூரியமாக கையாள வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
இந்தக் கட்சியின் வெற்றியைத் தட்டிப் பறித்து விடலாம், கொச்சைப்படுத்தி விடலாம் என்றவாறு தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரராகியிருக்கிறார்கள்.
தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர் வரை பக்குவம் இல்லாமல் இந்த இயக்கத்தை கையாளுகின்றோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பலவிதமான சவால்களையும் கண்டங்களையும் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் தேர்தல்களின் போது பல சவால்களையும் நெருக்கடிகளையும்  சந்தித்திருக்கிறோம். மக்கள் வாஞ்சையோடு கட்சியை அரவணைக்க முன்வந்துள்ளனர்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அதிரடி முடிவெடுத்து தலைமையும் தவிசாளரும் செயலாளர் நாயகமும் களமிறங்கிய வியூகம் அனைவரும் அறிந்ததே. பாதுகாப்புக் கெடுபிடிகள் அப்பொழுது மிகவும கடுமையாக இருந்தன.
இப்பொழுதும் இயல்பு நிலை அங்கும் இங்குமாக பாதிக்கப்பட்டுள்ளது. அக்கறைப்பற்றில் ஓரளவு அட்டகாசம் தலைதூக்கியது. திருகோணமலையில் எமது சிங்கள வேட்பாளரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் ராசிக் என்ற கட்சி அபிமானியின் கடை கொளுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் மிகவும் நம்பகத்தன்மையான தேர்தலாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் பங்குபற்றும் இத் தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. நேற்று ஜப்பானிய விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி என்னைச் சந்தித்த போதும் இதைக் கூறினார்.
முதலமைச்சர் பதவி பற்றிப் பேசுகிறார்கள். இங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையுமே சாதித்துவிட முடியாது. இந்த நாட்டின் பழுத்த தொழிற்சங்கவாதியும் நபிகளாரின் வம்சத்தில் தோன்றியவரென கூறப்படுபவரும் தமது கட்சிக்காக வீதியில் இறங்கி அடியும் உதையும் வாங்கியவருமான அலவி மௌலானா, கிழக்கின் ஆளுநர் போல் அதிகாரத்தைப் பிரயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் காணி மற்றும் கல்வி அதிகாரங்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. பதவி ஆசையில் நாம் அதிகாரத்தை புரிந்து கொண்டிருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது. இது கட்சிப் போராளிகளுக்கு நன்கு தெரிந்த விஷயம். எஞ்சியுள்ள பத்து நாட்களில் வெற்றியை நோக்கிய எமது பயணத்தை குழப்பி அதில் குளிர்காய சில தீய சக்திகள் வழிபார்த்துக் கொண்டிருக்கின்றன. நாம் அவற்றுக்கு சோரம் போய்விடக் கூடாது.
வாக்களிப்பு வீதத்தைப் பொறுத்து பெறுகின்ற ஆசனங்களின் ஏற்ற, இறக்கங்கள் தங்கியுள்ளன. எமது மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சலனங்கள் ஏற்பட்டால் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் உச்சக் கட்ட பொறுமையை கையாண்டு வருகின்றேன். எனக்கு அதற்கான திறனை தருமாறு இறைவனை பிரார்த்தியுங்கள்.
எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல், சரணாகதி அரசியல் என்பவை பற்றி ஏலவே கூறியிருக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸூக்கும் சரணாகதி அரசியலுக்கும் வெகு தூரம். யுத்தம் முடிந்த பின்னரும் நித்திரையில்லாத இரவுகளைப் பற்றி இவ்வாறான பிரதேசங்களில் வாழும் உங்களுக்குத் தெரியும்.
நில மீட்சிக்கான ஒரு முன்னெடுப்பின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கியிருக்கிறோம். கிழக்கில் கையாலாகாத ஒரு பொம்மையாட்சி வேண்டுமா அல்லது அதிகாரங்களுடன் கூடிய நேர்மையான நல்லாட்சி வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது மாறியிருக்கிறதுஎன்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter