அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 25 மார்ச், 2013

இலங்கைக்கு செய்மதி - இந்தியாவும், சீனாவும் கடும்போட்டி



(PP) சிறிலங்காவில் முக்கியமான துறைகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்புகள் கவலை கொண்டுள்ளன. இது குறித்து ஆராயவும், இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான அணுகுமுறைகளை வகுக்கவும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியகம், அமைச்சுக்கள் மட்டத்திலான அவசர கூட்டம் ஒன்றை இன்று ஒழுங்கு செய்துள்ளது. 

விண்வெளித் துறையில் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் இந்தியாவுக்கு ஆகப் பிந்திய தலைவலியாக மாறியுள்ளது.  2015ம் ஆண்டு சிறிலங்கா நிறுவனம் ஒன்று சீனாவுடன் இணைந்து தனது முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஒன்றை ஏவத் திட்டமிட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆலோசனை நடத்தியிருந்தார்.  இதையடுத்து, சிறிலங்காவின் விண்வெளித் திட்டத்தில் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை வகுத்து தருமாறு விண்வெளித்துறை திணைக்களத்தை அவர் கேட்டிருந்தார். 

சுப்ரீம் சற் என்ற சிறிலங்கா நிறுவனம் 320 மில்லியன் டொலர் செலவில் சீனாவின் அரசுத்துறை நிறுவனமான சீன கிறேட் வோல் இன்டஸ்ரி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தொலைத்தொடர்பு செய்மதி ஒன்றை ஏவும் உடன்பாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் கையெழுத்திட்டது.  இதன் தொடர்ச்சியாக, கண்டியில் செய்மதி கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், சிறிலங்காவின் செய்மதி கட்டமைப்பு வசதிகளை சீனா தனக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கருதுகிறது.  இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் விண்வெளி திணைக்களம், தகவல் தொழில்நுட்ப அமைச்சு, தகவல், மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மற்றும் இந்தியாவின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள். கலந்து கொள்ளவுள்ளன. 

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்கிடையே, சீனாவின் தலையீட்டைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியாவே செய்மதியை உருவாக்கி, ஏவுவதற்கு உதவலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ கூறியுள்ளது.  இது இரு நாடுகளுக்“கும் உதவியாக இருப்பதுடன் சீனாவின் தலையீட்டில் இருந்த தடுக்கவும் உதவும் என்று இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

செய்மதிகளை உருவாக்கி ஏவுவது மற்றும் செயற்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சிறிலங்காவுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதற்கு சிறிலங்கா மறுப்புத் தெரிவித்தால், இந்தியா, தனது அண்டை நாடான சிறிலங்காவிடம், சீனாவின் தலையீட்டை குறைக்க செய்மதியின் செயற்பரப்பை சிறிலங்காவின் கடல் மற்றும் தரை எல்லைகளுக்குள் சுருக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் என்று இந்தியா கோரவுள்ளது. 

அதேவேளை, இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த விவகாரம் குறித்து அனைத்துலக அளவில் பிரச்சினை எழுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேவேளை, பாரிய தொலைத்தொடர்பு வலையமைப்பின் மூலம் இந்தியாவை மூலோபாய ரீதியாக சீனா சுற்றிவளைப்பதாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

சிறிலங்கா, மாலைதீவு, பங்களாதேஸ் ஆகிய நாடுகளுடன் சீனா செய்மதி இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது புதுடெல்லியின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

Srce: Jafna Muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter