அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

மியான்மாரின் ரோஹிங்கயா மக்களின் அவலமும் நிச்சயமற்ற எதிர்காலமும்


- மூலக்கட்டுரை: அல் ஜசீறா இணையம் / மொழிபெயர்ப்பு: kattankudi.info -
(குறிப்பு: மியான்மார் முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள அண்மைய பிரச்சினை தொடர்பான தெளிவான மற்றும் விரிவான விபரங்களை இக்கட்டுரை கொண்டுள்ளது. மேலுள்ள விபரங்களை பூரணமாகக் குறிப்பிட்டு மீள்பிரசுரம் செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது)
அண்மையில் மேற்கொண்ட மேற்கு மியான்மாருக்கான ஒரு பயணம் வெறுப்புணர்வுடன் காணப்படும் ஒரு தலை நகரையும், ஆயிரக்கணக்கான மேற்கு மியான்மார் முஸ்லிம் மக்கள் அரச ஆதரவுடன் நடாத்தப்படும் முஸ்லிம்களை இன ரீதியாக தனிமைப்படுத்தும் ஒரு நடவடிக்கை காரணமாக  மிகுந்த பயத்துடன் வாழும் நிலையையும் கோடிட்டு காட்டியது.
தசாப்தங்கள் பழமையான ரக்ஹின் பௌத்த மக்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையான பரஸ்பர பதட்ட நிலை கடந்த ஜூன் மாதத்தில் தன கோர முகத்தை வெளிக்காட்டிய போது குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகள் அழிக்கப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்டார்கள்.
இந்த வன்முறைகள் சம்பந்தமாக பதிவு செய்யப்பட முழுமைப்படுத்தப்பட்ட தகவல்களை நோக்கும் போது வன்முறைகள் காரணமாக சிந்தப்பட்ட இரத்தத்தை விட இதன் நீண்ட கால விளைவுகள் பாரிய சேதங்களை ஏற்படுத்த வல்லன என்று தெரிகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை தகவல்களின் பிரகாரம் சிட்வே மற்றும் மாங்டேவ் நகரங்களை அண்டிய சுமார் 80,000 மக்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ள நிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளிப்படையாக மியான்மார் அரசை குறை கூறி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் இடையே ஒரு நட்புறவை கட்டி எழுப்புவதென்பது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதாகவே தோன்றுகின்றது.
அதிகமான ரோஹிங்கயா முஸ்லிம்கள் இந்த இன முரண்பாடு மிகுந்த பிரதேசத்தில் இருந்து தாக்குதல்களுக்கும் அதிகரித்து வரும் பாரபட்ச நிலைகளுக்கும் பயந்து தப்பியோடுகின்றனர். இவர்களின் நிலை சர்வதேச கரிசனையையையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.
மனித உரிமை அமைப்புகள் வன்முறைகளை கண்டிக்கின்றன, எனினும் மியான்மார் அரசு தான் எவ்வித தவறையும் செய்ய வில்லை என வாதிடுகின்றது. அயல் நாடான பங்களாதேஷ் இந்த அகதிகளை ஏற்க மறுத்து மனிதாபிமான உதவிக்கான வாயில்களை அடைக்கின்றது.
இந்த அவலத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு இந்த பிரச்சினையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
சமூக ஒதுக்கல் கொள்கை
ரக்ஹின் மாநில தலைநகரான சிட்வே நகரில் அண்மையில் நடந்த வன்முறைகளின் வடுக்களை எங்கும் காணக்கூடியதாக உள்ளது.
எரிக்கப்பட்ட வீடுகள், சந்தைகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் என்பன சாதாரண காட்சிகளாகும். முஸ்லிம் பிரதேசங்களான ஷ்வே பயர், நாசி கொண்டன், மற்றும் மவ்லிக் போன்ற இடங்கள் மனிதர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இங்கு வாழும் ஒரு சில குடும்பங்கள் கூட அடைக்கப்பட்ட நிலையில் மிகவும் இரகசியமான முறையில் வாழ்கின்றன.

முக்கியமான பள்ளிவாயல்கள் மற்றும் கட்டடங்களில் மாநகர நிர்வாகத்தினால் ஒட்டப்பட்ட யாரும் உட்பிரவேசிக்க தடைஎன்ற விளம்பரங்கள் காணப்படுகின்றன. உள்ளூர் வாசிகள் அல் ஜசீராவுக்கு அளித்த தகவல்களின்படி இந்த கட்டடங்களில் காணப்பட்ட பொருட்கள் யாவும் அரசினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. சிட்வே நகரின் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் 2008 ஆம் மியான்மாரை தாக்கிய நர்கிஸ் சூறாவளியின் சேதங்களுக்கு ஒப்பானவை என்று கூறப்படுகின்றது..
இங்கு காணப்படும் மிகவும் அதிசயமான நிலை யாதெனில் மொத்த நகர சனத்தொகையில் மூன்றிலொரு பாகமாக இருந்த ரோஹிங்கயா முஸ்லிம்கள் எவரையும் இப்பகுதியில் காண முடியாமை ஆகும். வேலை செய்யும் வர்க்கத்தில் பெரும்பான்மையாக இந்த முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.
இந்த இழப்புகளின் தாக்கங்கள் மிகவும் தெளிவானவை. ரோஹிங்கயாக்கள் ரிக்சா ஓட்டுனர்களாக, பொதி சுமக்கும் தொழிலாளர்களாக, மற்றும் துறைமுக ஊழியர்களாக இருந்தனர். இவர்கள் எவரையும் தற்போது காண முடியாதுள்ளது. விமான நிலைய சூழல் மற்றும் படகுத்துறை போன்ற இடங்களில்   முஸ்லிம்கள் வேலை செய்தமைக்கான எந்த அடையாளமும் இல்லை. இந்த மாநிலத்தில் உள்ள புதிடங் மற்றும் முங்டவ் என்ற இடங்களில் ரோஹிங்கயாக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இந்த இரண்டு இடங்களுக்கு இடையே நடைபெறும் பேரூந்து சேவைகளில் கூட முஸ்லிம்கள் எவரையும் காண முடியவில்லை.
இங்கு வாழும் இந்திய வம்சாவளி இந்துக்கள் தம்மை ரோஹிங்கயாக்களில் இருந்து வேறு படுத்திக்காட்ட தமது நெற்றிகளில் பொட்டிட்டு நடமாடுகின்றனர். இதன்மூலம் இவர்கள் ரோஹிங்கயாக்களாக தவறுதலாக அடையாளம் காணப்படுவதிலும் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கின்றனர்.
பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நேர்காணல்களின் பிரகாரம் ரக்ஹின் மக்கள் மொத்தமாக ரோஹிங்கயாக்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கும் கொள்கையை பின்பற்றி வருகின்றனர். வணிகத்தடை, உணவு, சுகாதார, பயண மற்றும் தொடர்பாடல் கட்டுப்பாடுகள் இந்த ஒதுக்கல் கொள்கை மூலம் முஸ்லிம்கள் மீது விதிக்கப்படுகின்றன.
உள்ளூர் தகவல்களின் படி, ரோஹிங்கயாக்கள் சந்தைகளுக்குள் உட்பிரவேசிக்கவோ நகரங்களுக்கு இடையில் பயணிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.
பட்டினிச்சாவை எதிர்நோக்கும் ரோஹிங்கயாக்கள்
சிட்வே நகருக்கு வெளிப்புறமாக உள்ள கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. புமெய் என்ற கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் குவிந்து காணப்படுகின்றனர். அகதிகள் அளித்த தகவல்கள் பிரகாரம் அவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வெளியேற்றம் ஆரம்பத்தில் குண்டர் குழுக்களாலும் பின்னர் இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் காணப்படும் அகதி முகாம்களில் இந்த கிராமத்தில் அமைந்துள்ள முகாமே மிகவும் பெரியதாகும்.
தற்போது பெய்யும் பருவ மழை காரணமாக சேறு நிரம்பிய கூடாரங்களிலேயே இவ்வகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முறையான மலசலகூட, மருத்துவம், மற்றும் தூய குடிநீர் வசதிகள் அற்ற நிலையிலேயே இந்த அகதி முகாம்கள் காணப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் உலக உணவு திட்டத்தினால் வழங்கப்படும் அரிசி உதவி மற்றுமே இவர்களின் உணவு தேவையை அரைகுறையாக நிறைவேற்றுகின்றது.
இந்த அகதி முகாம் 24 மணி நேரமும் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த படை வீரர்களின் பிரசன்னம் அகதிகளின் பாதுகாப்புக்கா அல்லது அவர்களின் வெளியேற்றத்தை தடுக்கவா என்று அறிய முடியவில்லை.
ஷ்வே மாங் என்ற ரோஹிங்கயா அகதி தகவல் தருகையில் எமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். நாங்கள் நகர்களுக்கு திரும்பினால் என்ன நிகழும் என எண்ணிப்பார்க்கவே பயமாக உள்ளது. எங்களால் அங்கு போக முடியாது.அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் நாளாந்த கூலியாட்களாகவும் வேலைக்காரர்களாகவுமே இருந்தவர்கள். இந்த அகதி முகாமில் இருந்து தமது வீடுகளுக்கோ தொழில் இடங்களுக்கோ செல்ல முயற்சித்தவர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி தடுக்கப்படுகின்றனர்.
இந்த அகதி மேலும் கருத்து தெரிவிக்கையில் எமக்கு கிடைக்கும் சொற்ப உணவையும் நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், உலக உணவு திட்டத்தினால் உலருணவு வழங்கப்பட்ட போதும் பெரும் எண்ணிக்கையான அகதிகளுக்கு அது போதுமானதாக இல்லை
இந்த அகதி முகாமில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்துடனான வாழ்வை கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்மணி வீதியில் கொட்டும் மலையில் தனது கைக்குழந்தையை ஏந்தியவாறு அழுது கொண்டிருந்தார். நோய்வாய்ப்பட்ட தனது குழந்தைக்கு மருத்துவ வசதிகளோ உண்ண உணவோ தமக்கு இல்லை என்று அவர் கதறுகிறார்.
மஹ்முத் ஷிகோ என்ற அதிகாரிகள் தமது பாதுகாப்பை உறுதி செய்யும் பட்சத்தில் தனது சொந்த இடத்துக்கு செல்ல விரும்புவதாக கூறினார். எனினும் போலீசார் உங்களது சொந்த இடங்களில் எதுவுமில்லை என்று கூறியதாகவும் அறியப்படுகின்றது.
இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகள்
ஜூன் மாத வன்முறைகள் ஒரு பௌத்த பெண் மூன்று முஸ்லிம்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுடன் ஆரம்பமானது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை பிரகாரம் இரண்டு இனங்களும் எதிர்த்தரப்பு கிராமங்களை தாக்கினர். வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு தீயிடப்பட்டன.
மனித உரிமை கண்காணிப்பகம் இரண்டு இனக்குழுக்களையும் இந்த தாக்குதல்களுக்காக கண்டித்துள்ளது. இதன் கணிப்பீடுகளின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆகும்.
மனித உரிமை கண்காணிப்பகம் மியான்மார் அரச பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்துள்ளது. வன்முறைகள் நடைபெற்ற போது பாதுகாப்பு படைகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. ரோஹிங்கயாக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் மற்றும் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அறிக்கையின் பிரகாரம் ஒரு ரோஹிங்கயா பிரதேசத்தில் தப்பியோட முற்பட்ட முஸ்லிம்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதோடு அவரகளின் வீடுகள் பாதுகாப்பு தரப்பால் கொள்ளையிடப்பட்டன.
பெஞ்சமின் சவாக்கி என்ற சர்வதேச மன்னிப்பு சபையின் பாங்கொக் பிராந்திய ஆய்வாளர் இந்த வன்முறைகளை விபரிக்கையில் இந்த வன்முறைகள் ஒரு முகப்பட்டது. முஸ்லிம்கள் குறிப்பாக ரோஹிங்கயாக்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர்
மனித உரிமை கண்காணிப்பக தகவல்களின் படி நூற்றுக்கணக்கான ஆண்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் இருப்பிடங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முறைசாரா ரோஹிங்கயாக்களின் கணிப்புகளின் பிரகாரம் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.
அகதி முகாம்களில் மக்கள் இராணுவத்தின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களையும் நியாயமற்ற கைதுகளையும் பற்றி பேசிக்கொள்கிறார்கள் கைது செய்யப்பட்டவர்களில் இவர்களின் அன்புக்குரியவர்களும் அடங்குகிறார்கள்.
மியான்மார் இராணுவ அலுவலர்களினுடனான ஒரு நேர்காணல் தொடரின் மூலம் இந்த வன்முறைகளின் மற்றொரு கோர முகம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நேர்காணல்கள் சில பாதுகாப்பு தரப்பு நபர்களின் ரோஹிங்கயா முஸ்லிம்களின் மீதான ஒரு கொடூர பார்வை வெளிப்பட்டது.
352 ஆவது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த ஒரு ரக்ஹின் இன இராணுவ வீரர் அவரும் அவரது சக படை வீரர்களும் மயோதுகி நகரில் ஜூன் 8 ஆம் திகதி இரவு ஏறத்தாள 300 முஸ்லிம்களை சுட்டுக்கொன்றதாக கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் இந்த சம்பவம் பற்றி விபரிக்கையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் நாங்கள் பயணித்த சிவில் வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர், இந்த சிவிலியன்கள் குறித்த வாகனத்தில் படையினர் வந்ததை அறிந்திருக்கவில்லை. இவ்வாறு தடுக்கப்பட்ட சிவிலியன்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானோரை கொன்றோம்” “நான் எனது துப்பாக்கியை வலது பக்க இடுப்பு பகுதியில் உறுதியாக வைத்து என்னால் முடியுமானவரை அவர்களை சுட்டு தள்ளினேன். இந்த முறை மூலம் எனது இடது கையினால் துப்பாக்கி இவைகளை தொடர்ச்சியாக நிரப்புவது சாத்தியமானது
இன்னுமொரு இராணுவ வீரரின் கூற்றுப்படி சடலங்கள் மிகவும் அதிக எண்ணிக்கையில் இருந்தன. இச்சடலங்களை புதைப்பதற்கு எங்களுக்கு புல்டோசரின் உதவி தேவைப்பட்டது” “இவர்களின் கொலைகள் பற்றி நாங்கள் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை
இவ்வாறான தகவல்களை உறுதி செய்வது மிகவும் கடினமாகும். எனினும் இரக்கமற்ற கூற்றுக்கள் ரோஹிங்கயாக்கள் மீது அரச இயந்திரம் எவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் உள்ளன என்பதை எமக்கு கோடிட்டு காட்டுகின்றது. இவ்வாறான கோப நிலை எல்லா இடங்களிலும் அவதானிக்கப்பட கூடியதாக உள்ளது..
அமெரிக்காவில் இருந்து இருபது வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய ஒரு படித்த மியன்மார் பெண்மணியிடம் நீங்கள் அனுபவிக்கும் மனித உரிமைகளை ரோஹிங்கயாக்களும் அனுபவிக்க வேண்டாமா என்று வினவிய போது அவரின் பதில் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
மனித உரிமைகள் மனிதர்களுக்கே உரியன. ரோஹிங்கயாக்கள் மனிதர்களா? நாங்கள் வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் விருந்தாளிகள். விருந்தாளிகள் வீட்டு உரிமையாளர்களை வெளியேற்ற முனைகையில் மனித உரிமைகளுக்கு அவர்கள் உரித்துடையவர்கள் அல்லர்
அரசு பிரேரிக்கும் தீர்வு
மியான்மார் அரசு மனித உரிமை பாதுகாப்பு குழுக்களின் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கின்றது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எமது அரசு மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்றதுஇது அண்மையில் அரசினால் வெளியிடப்பட்ட ஒரு கூற்றாகும்.
மியான்மார் அரசு இந்த பிரச்சினையை அரசியல் மற்றும் உள்ளக பிரச்சினையாக வெளிப்படுத்த முனைகின்றது. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்க முனைகின்றது. இந்தோனேசியா மற்றும் சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகள் இப்பிரச்சினை தொடர்பாக குரலெளுப்பியுள்ளன.
நீண்ட காலமாக அரசு ரோஹிங்கயாக்களின் பிரச்சினை இருப்பதையோ அவர்களின் இருப்பையோ மறுத்தே வந்துள்ளது.
மியான்மாரின் இராணுவ அரசும் அதனால் நடாத்தப்படும் ஊடகங்களும் ரோஹிங்கயா என்ற சொற் பிரயோகத்தை தவிர்த்து வருகின்றன. மாறாக இவர்களை பெங்காலி முஸ்லிம்கள் என்றே குறிப்பிடுகின்றது. இதன் மூலம் இவர்கள் சில தசாப்தங்களுக்கு முன்னர் மியான்மாரில் குடியேறியோர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றது. மியான்மாரின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் திரும்ப திரும்ப மியான்மாரில் ரோஹிங்கயாக்கள் இல்லை என்றே கூறுகிறார்.
கடந்த மாதம் UNHCR உடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர் தீன்சீன் நாடு கடத்தல் அல்லது அகதிமுகாம்களே இந்த 800,000 தொடக்கம் ஒரு மில்லியன் வரையான மக்களின் பிரச்சினைக்கு தீர்வுஎன்று அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலக இணையத்தள செய்தியின் பிரகாரம் எமது இன மக்களை நாங்கள் பொறுப்பு எடுப்போம் எனினும் சட்ட விரோதொமாக உட்புகுந்த ரோஹிங்கயாக்கள் எமது இன மக்கள் அல்ல இவர்களை எங்களால் பொறுப்பேற்க முடியாது.
இதற்கு உள்ள ஒரேயொரு தீர்வு இவர்களை UNHCR இனால் நடாத்தப்படும் அகதி முகாம்களுக்கு அனுப்புவதே ஆகும். ஏதாவது மூன்றாவது நாடு இவர்களை பொறுப்பேற்க விரும்பினால் நாம் அவர்களை அனுப்பி வைப்போம். இதுதான் இப்பிரச்சினைக்கு உகந்த தீர்வு என நாம் கருதுகிறோம்.
நிச்சயமற்ற எதிர்காலம்
அரசு இந்த பிரச்சினை பற்றி பிரஸ்தாபிக்கும் போதெல்லாம் ரக்ஹின் மக்கலளின் ரோஹிங்கயாக்கள் மீதான வெறுப்புணர்வையும் இந்த ரோஹிங்கயாக்கள் எதிர்காலத்தில் சனத்தொகையில் பெருகி ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற நிலையையும் குறிப்பிடுகின்றது.
ரக்ஹின் மாநிலத்தில் தலை நகருக்கு வெளிப்புறமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியினர் ரோஹிங்கயாக்களாகும். உத்தியோக பூர்வ தகவல்களின் படி அண்டைய மாநிலங்களான மாங்டவ் மற்றும் புத்திடாங் என்பவற்றில் ரோஹிங்கயாக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
சனத்தொகை பெருக்கத்துக்கான பயம் சய்யத் அப்துல்லாஹ் என்ற ரோஹிங்கயா தலைவரின் உதாரணம் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது. 72 வயது நிரம்பிய இவருக்கு நான்கு மனைவியரும் 28 மக்களும் உள்ளனர்.
கடந்த வாரம் அரசு அப்துல்லாவின் குடும்ப நிலையை சாத்தியமான சனத்தொகை பெருக்கத்துக்கு உதாரணமாக காட்டியது. அப்துல்லா ரோஹிங்கயாக்களுக்கு தனி நாடு ஒன்றை இந்த பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்க விரும்பவில்லை. அத்துடன் அவர் சனத்தொகை பிரச்சினைக்கு தீர்வாக ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் என்ற கொள்கைக்கு தனது ஆதரவை ரோஹிங்கயாக்களின் கௌரவத்தை விட்டுக்கொடுக்காத நிலையில் தீர்வாக முன் வைக்கின்றார்.
எங்களுக்கு தேவை ரக்ஹின் மற்றும் பர்மீஸ் மக்களை போன்று சம உரிமைகளை மட்டுமே விரும்புகிறோம். ஒரு சுமுக வாழ்வைத்தவிர வேறெதுவும் எங்களுக்கு தேவை இல்லை என்று அப்துல்லா தெரிவிக்கிறார்.
ஏனைய ரோஹிங்கயா தலைவர்கள் தமது சமூகம் தவறான முறையில் இனவாதிகளாக உலகுக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பெரும்பான்மையான ரோஹிங்கயாக்கள் வறுமையில் வாடும் விவசாயிகளும் தொளிலாலர்களுமாவர். எனினும் சில ரோஹிங்கயாக்கள் பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுள்ளதோடு சிட்வே மற்றும் யாங்கோன் நகர்களில் சொந்த வியாபாரங்களையும் கொண்டுள்ளனர்.
தீன் சா மற்றும் க்யவ் ஹலா ஆகிய இருவரும் புமெய் அகதி முகாம்களின் உணவு விநியோகத்தை மேற்பார்வை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிட்வே நகரின் வளமான சமூகப்பிரிவை சேர்ந்தவர்கள். தமது மூதாதையினர் 350 வருடங்களுக்கு மேலாக ரக்ஹின் மாநிலத்தில் வாழ்ந்ததாக் இவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பான்மையான ரோஹிங்கயாக்கள் குடியுரிமை மறுக்கப்பட்ட நிலையில் அவர்களால் சொந்தமாக வியாபரங்களை நடாத்தவோ திருமணம் செய்யவோ இடம்பெயரவோ முடியாத நிலை காணப்படுகின்றது. ரோஹிங்கயா மக்களை அகதி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணம் பொருத்தமற்றதாகவும் அவமானகரமானாதகவும் காணப்படுகின்றது.
இந்த பிரச்சினைகளின் தோற்றுவாய் இன, மத அல்லது சனத்தொகை சம்பந்தப்பட்டது என்பது அகதி முகாம்களில் வாடும் மக்களை பொறுத்த வரை முக்கியத்துவமற்றது.
பிரெட்டில் லிண்டர் போன்ற கல்விமான்கள் இந்த பிரச்சினை இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஆரம்பமானது என்று கருதுகின்றனர். இதன்போது பௌத்தர்கள் ஜப்பானியர்களை ஆதரித்ததாகவும் முஸ்லிம்கள் பிரித்தானியாவை ஆதரித்ததாகவும் இதுவே பிரச்சினைக்கான அடிப்படை என்று இவர்கள் கருதும் அதே வேளை ஏனைய கல்விமான்கள் இது நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது என்று கூறுகிறார்கள்.
எது எவ்வாறாகினும் அரசாங்கம் அல்லது சர்வதேச சமூகம் இந்த பிரச்சினையில் இடைபட்டு ஒரு தீர்வைக்கொண்டு வரும் வரை வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
(ஒரு தன்னார்வ ஊடகவியலாளரால் வரையப்பட்ட இக்கட்டுரை அல் ஜசீரா இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. ஊடகவியலாளரின் சுய பாதுகாப்பு கருதி கட்டுரையாளரின் பெயர் வெளியிடப்படவில்லை)
கட்டுரையின் இடையில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் படங்களைத் தவிர அல் ஜசீறா இக்கட்டுரையுடன் வெளியிட்டுள்ள படங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. படங்களில் தமிழில் இடப்பட்டிருக்கும் அடிக்குறிப்புகள் மாத்திரம் இன்போவால் இடப்பட்டன.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மலசலகூடத்தில் அரபு எழுத்தணி கொண்ட மாபில்கள்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு தெரியப்படுத்தினார்.
இதை உறுதிப்படுத்துமுகமாக அங்கு சென்று பார்த்த போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒன்பதாம் இலக்க ஆண்கள் விடுதி மலசலகூடத்திலேயே  இவ்வாரான தரை மாபிள்கள் பதிக்கப்பட்டுள்ளதை .அறியமுடிந்தது.
இந்த மலசலகூடங்களில் காணப்படும் அரபு எழுத்துக்களை நோக்கியபோது அவை அல்லாஹ், பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான், முஹம்மத் போன்ற வசனங்கள் காணப்பட்டது. இதை உறுதிப்படுத்துமுகமாக காத்தான்குடி இன்போ அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற மௌலவிமார்களிடம் இதன்னுடைய புகைப்படங்களை காட்டியபோது, அவர்கள் மேற்கூரிய அரபு வசனங்கள்  காணப்படுவதாக உறுதிப்படுத்தினார்கள்.
இது தோடர்பாக மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டபோது, இந்த தரை மாபிள்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 6 மாதங்களுக்கு முன் திருத்த வேலை செய்யும் போது ஒப்பந்தக்காரர்களால் பதிக்கப்படுள்ளதை அறியமுடிந்தது.
காத்தான்குடியில் கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவரிடம் இது தொடர்பாக வினவியபோது, இவ்வகையான தரை மாபிள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதில் காணப்படும் அரபு எழுத்தணி காரணாமாக இதன் இறக்குமதி இலங்கையில் முற்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாவும், இவை மிகவும் விலை குறைந்த தரை மாபிள்கள் எனவும் அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் அவர்களுடன் காத்தான்குடி இன்போ தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும்வரை வேறு எவரும் இதுபற்றி தனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், அவ்வாறு தெரியப்படுத்தி இருந்தால் குறித்த ஒப்பந்தகாரருடன் பேசி இருக்கமுடியும் எனவும், தற்போது தன்னால் இவ்விடயம் தொடர்பாக சென்று பார்க்க முடியுமாக இருந்தாலும் குறிப்பிட்ட அரபு எழுத்தனிபற்றி அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் தனக்கு இல்லாததால் அதுபற்றி வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுடன் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், இவ்வாரான விடயங்களை காண்கின்றபோது முதலில் தனக்கு தெரியப்படுத்தினால் அவைகளை உடன் நிவர்த்திக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக காத்தான்குடியில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனம் ஒன்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக கவனம்செலுத்துமாறு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் என்.கே.றம்ழான் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வைத்தியசாலையின் அபிவிருத்தி உட்கட்டமைப்பு விடயங்களிலேயே தாம் கவனம் செலுத்தியதாகவும் இவ்வாரான மலசலகூடங்களை சென்று பார்வையிடாதது தங்களது தவரு எனவும் தெரிவித்ததுடன் இது விடயமாக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறன செயற்பாடுகள் முஸ்லிம்கள் மனதை பெரிதும் புண்படுத்துவதோடு, பல சந்தேகங்களையும் உண்டாக்குவதாக எமக்கு இந்த செய்தியை தெரியப்படுத்திய வாசகர் தெரிவித்தார்.





site counter